விண்வெளியில் 14 கோடி மைல் தொலைவில் இருந்து கிடைத்த லேசர் சிக்னல்... நாசா
03 May,2024
விண்வெளியில் 14 கோடி மைல் தொலைவில் உள்ள விண்கலத்திலிருந்து லேசர் சிக்னல் பூமிக்கு வந்துள்ளதாக நாசா மகிழ்ச்சியானத் தகவலை வெளியிட்டுள்ளது.
சூரிய குடும்பத்தில் பூமி உள்ளிட்ட கிரகங்களுக்கு இடையே சிறுகோள்கள் அதிகம் சுற்றி வருகின்றன. இவற்றை ஆய்வு செய்ய நாசா பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சைக் 16 என பெயரிடப்பட்ட சிறுகோளை ஆய்வு செய்ய 2023-ம் ஆண்டு அக்டோபரில் விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு நாசா அனுப்பி இருந்தது.
செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கிரகங்களுக்கு இடையே இந்த சிறுகோள் உள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுவாக சிறுகோள்கள் பெரிய கற்களால் ஆனவை என்று அறியப்பட்டுள்ள நிலையில் இந்த சிறுகோளானது உலோகங்களானதாக கருதப்படுகிறது. இந்த சிறுகோளின் பெயரை ஒட்டியே இந்த புதிய விண்கலத்திற்கு சைக் என நாசா பெயர் சூட்டியது.
இந்த விண்கலம் லேசர் தொலைதொடர்பு பற்றிய பரிசோதனையிலும் ஈடுபடும் பணியை மேற்கொண்டுள்ளது. இதற்காக டி.எஸ்.ஓ.சி எனப்படும், விண்வெளியின் ஆழ்ந்த ஒளி வழியான தொலைத்தொடர்புகளைக் கண்டறியும் சாதனம் சைக் விண்கலத்தில் உள்ளது. இதன் உதவியால் விண்வெளியில், தொலைதூரத்தில் இருந்து கொண்டு லேசர் வழியேயான தொலைதொடர்புகளை ஏற்படுத்துவது சாத்தியப்படும்.
இந்த நிலையில், டி.எஸ்.ஓ.சி தொழில்நுட்பத்தின் திறனை நிரூபிக்கும் வகையில் அதிலிருந்து லேசர் சிக்னல் பூமிக்கு கிடைத்துள்ளது நாசா விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன்படி, 14 கோடி மைல்கள் தொலைவில் இருந்து அந்த விண்கலம் தகவல்களை நாசாவுக்கு அனுப்பியுள்ளது. இந்த தொலைவானது பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தொலைவைப் போன்று 1.5 மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டி.எஸ்.ஓ.சி சாதனம், சைக் விண்கலத்தின் ரேடியோ டிரான்ஸ்மிட்டருடனும் தொடர்பு கொண்டு அதில் வெற்றியடைந்து உள்ளது. இதனால், விண்வெளியில் இருந்து தகவல் மற்றும் தரவுகளை நேரடியாக பூமிக்கு அனுப்ப முடிந்தது.
இந்த திட்டத்தின் இலக்கை விட 25 மடங்கு கூடுதலான விகிதத்தில் தரவுகளைப் பரிமாறி விண்கலம் சாதனை படைத்துள்ளது. அதனுடன், சைக் 16 சிறுகோளை நோக்கிய தன்னுடைய பயணத்தில் தொடர்ந்து, நிலையாக மற்றும் இயல்பாக சைக் ஈடுபட்டு வருகிறது என நாசா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.