வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆண்டுதோறும் 25 கன்னிப் பெண்களை தனது பிளஷர் ஸ்குவாடில் (மகிழ்ச்சி அணி) சேர்ப்பதற்கு, அவர்களை எவ்வாறு தேர்வு செய்கிறார் என அந்நாட்டிலிருந்து தப்பிய யோன்மி பார்க் என்ற இளம்பெண் கூறியுள்ளார்.
யோன்மி பார்க் கூறியதாக வங்கதேசத்தின் 'தி டெய்லி ஸ்டார்' ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, மகிழ்ச்சி அணிக்கான பெண்கள் அவர்களின் கவர்ச்சி மற்றும் அரசியல் விசுவாசத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த நோக்கத்தில் என்னை இரண்டு முறை தேர்வு செய்ய விரும்பினர். ஆனால் எனது குடும்ப அந்தஸ்து காரணமாக கடைசியில் தேர்வு செய்யவில்லை.
அதிபர் கிம் ஜாங் உன்-க்காக இளம்பெண்களை தேர்வு செய்ய பள்ளிகள், வகுப்பறைகளுக்கு அதிகாரிகள் வருவார்கள். அவர்கள் சில அழகான பெண்களைக் கண்டுபிடித்தவுடன், அவர்கள் முதலில் செய்வது அந்த பெண்களின் குடும்ப, அரசியல் அந்தஸ்தை ஆராய்வர்.
வட கொரியாவிலிருந்து தப்பியோடிய அல்லது தென் கொரியா அல்லது பிற நாடுகளில் உறவினர்கள், குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட எந்தவொரு பெண்ணையும் அவர்கள் தேர்வு செய்யமாட்டார்கள்.
அடுத்தகட்டமாக மகிழ்ச்சி அணிக்கு தேர்வு செய்யப்படும் பெண்களின் கன்னித்தன்மைக்கான மருத்துவ பரிசோதனை நடைபெறும். சிறிய குறைபாடுகள் இருந்தால் கூட அந்த பெண்ணை நிராகரித்து விடுவார்கள். வட கொரியா முழுவதுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பெண்கள் மட்டுமே பியோங்யாங்கிற்கு (வடகொரியா தலைநகரம்) அழைத்துச்செல்லப்படுவார்கள். அங்கு அவர்களின் ஒரே நோக்கம் கிம் ஜாங் உன்-ஐ திருப்தி படுத்துவது மட்டுமே.
யோன்மி பார்க் கூற்றுப்படி, மகிழ்ச்சி அணி 3 பிரிவுகளை கொண்டது. ஒரு பிரிவு மசாஜில் நிபுணத்துவம் பெற்றது. மற்றொன்று கிம் ஜாங் உன் மற்றும் அவரது கூட்டாளிகளை திருப்திபடுத்துவதில் நிபுணத்துவம் பெற்றது. மூன்றாவது பாலியல் நடவடிக்கை சார்ந்தது.
அதே நேரத்தில் மகிழ்ச்சி அணியில் இணையும் பெண்களின் பெற்றோரிடம் இதற்கு சம்மதமும் பெறப்படும். கடும் விளைவுகளிலிருந்து தப்பிக்க சம்மதம் அளிப்பதை தவிர வேறு வழியில்லை. மகிழ்ச்சி அணியில் சேரும் பெண்கள் 20 வயதை அடைந்துவிட்டால், தலைவரின் மெய்க்காப்பாளர்களை திருமணம் செய்து கொள்கின்றனர்.
கிம் ஜாங் உன் தந்தை கிம் ஜாங்-இல் 1970களில் பின்பற்றியதுதான் மகிழ்ச்சி அணி. அவரிடமிருந்தே கிம் ஜாங் உன் இதனை பின்பற்றுகிறார். இளம் பருவ சிறுமிகளுடன் பாலியல் நெருக்கம் கொண்டிருப்பது தனது ஆயுளை நீட்டிக்கும் என கிம் ஜாங்-இல் நம்பினார். இருப்பினும், கிம் ஜாங்-இல் கடந்த 2011ம் ஆண்டில் தனது 70 வயதில் மாரடைப்பால் இறந்தார்.
யோன்மி பார்க் கூற்றுப்படி, கிம் ஜாங்-இல் 1970-களில் இந்த மகிழ்ச்சி அணி யோசனையை உருவாக்கினார். சில அழகான பெண்களைத் தேர்ந்தெடுத்து, தன் தந்தை கிம் இல்-சுங் வசிக்கும் இடத்தில் அவர்களை வைத்தால், அது அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என கிம் ஜாங்-இல் நினைத்தார். இது அவர் நினைத்தது போன்றே கிம் இல்-சுங்கை மிகவும் கவர்ந்ததால் கிம் ஜாங்-இல்-ஐ தனது அரசியல் வாரிசாக நியமித்தார்.