ஹோட்டல்களில் பில் கட்டாது கம்பி நீட்டிய தம்பதி கைது
27 Apr,2024
5 உணவகங்களில் ரூ1 லட்சத்துக்கு உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்ட குடும்பம், பில் கட்டாது கம்பி நீட்டுவதை வழக்கமாக வைத்திருந்தது. ஹோட்டல் நிர்வாகத்தினர் ஒருங்கிணைந்து, பொதுமக்கள் உதவியோடு இந்த மோசடி கும்பலை போலீஸார் கைது செய்ய உதவியுள்ளனர்.
நூதன மோசடிகள் பலவிதம். அவற்றில் இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தனிவிதம். கிரேட் பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் அமைந்திருக்கும் பல ஹோட்டல்களில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஒரு தம்பதி அவர்களின் சிறு வயது மகன் மற்றும் சில உறவினர்கள் புடைசூழ, பிரபல உணவகங்களை குறிவைத்து செல்கின்றனர். ஆன் என்ற பெண்மணி அவரது பார்ட்னரான மெக்டொனாக் ஆகியோர் இந்த மோசடியில் பிரதான செயல்பாடுகளை நிகழ்த்துகின்றனர்.
பிரபல உணவகங்களில் வழங்கப்படும் மெகா விருந்துகளே இவர்களது குறி. குழந்தைகள் மற்றும் குடும்பம் சகிதம் வருவதால், ஹோட்டல் நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் மத்தியில் அவர்கள் மீது எவருக்கும் சந்தேகம் வராது. மெகா விருந்து ரகங்கள் மட்டுமல்லாது, தங்களுக்குப் பிடித்த இதர ரகங்களையும் ஆர்டர் செய்து வகைதொகையாய் சாப்பிடுகிறார்கள். அதன் பின்னர் ஆன் - மெக்டொனாக் தம்பதி மற்றும் அவர்களின் மகன் தவிர்த்து மற்றவர்கள் நைசாக ஹோட்டலில் இருந்து நழுவுகின்றனர்.
பில் வந்ததும் பொறுப்பாக அதனை செலுத்த ஆன் - மெக்டொனாக் தம்பதி முயல்கிறார்கள். ஆனால் அவர்களது கிரெடிட் கார்டு திடீரென செயல்படாது போகிறது. எனவே வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் காரிலிருந்து மாற்று கார்டு எடுத்துவருவதாக தம்பதி இருவரும் கிளம்புவார்கள். சிறுவன் அங்கேதான் அமர்ந்திருப்பான் என்பதால் ஹோட்டல் நிர்வாகத்துக்கு சந்தேகம் துளியும் எழாது. ஆனால் அசந்த நேரத்தில் அவனும் நழுவிய இருப்பான். மிகவும் புராதன மோசடியான இந்த நுட்பத்தை பயன்படுத்தி ஒன்று இரண்டல்ல பல ஹோட்டல்களில் இவ்வாறு சூறையாடி உள்ளனர்.
ஹோட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளரில் ஒரு சிலர் இவ்வாறு மறதியாகவோ, திட்டமிட்டோ பில் கட்டாது செல்வதுண்டு என்பதால் ஹோட்டல்கள் இந்த சம்பவங்களை பொருட்படுத்தாது இருந்தன. பெரும் தொகை பில் காரணமாக ஒரு சில உணவகங்கள் பெயருக்கு போலீஸில் புகார் பதிவும் செய்துள்ளன. கொலை கொள்ளைச் சம்பவங்களுக்கு மத்தியில் மிகவும் சாதாரணமாக தென்பட்டதில் போலீஸாரும் இந்த புகாரை அலட்சியம் செய்தனர்.
ஆனால் ஹோட்டல் நிர்வாகத்தினர் தங்கள் மத்தியில் பகிர்ந்துகொள்ளும் தகவல்களில் ஒன்றாக இந்த சம்பவமும் இடறியபோதுதான், ஆன் - மெக்டொனாக் தம்பதியின் திட்டமிட்ட மோசடி குறித்து அவர்கள் அறிந்தனர். ஹோட்டல்தோறும் சிசிடிவி பதிவுகள் இருந்ததால், அவற்றைத் தொகுத்து ஒரு வீடியோவாக தயாரித்தனர். அவற்றை சுற்றுக்கு அனுப்பி பொதுமக்கள் உதவியை கோரினர். அதன் அடிப்படையில் கிடைத்த தகவல்களை போலீஸார் வசம் சமர்பித்ததில் ஆன் - மெக்டொனாக் தம்பதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
புகார் பதிவான சவுத் வேல்ஸ் பகுதியில் மட்டும் 5 ஹோட்டல்களில் சுமார் 1200 அமெரிக்க டாலர் மதிப்பிலான சாப்பாட்டு பில்களை கட்டாது கம்பி நீட்டியிருந்தது உறுதியானது. இது இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சம் ரூபாயாகும். இது தவிர்த்து வெவ்வேறு பகுதிகளில் தனித்தனி ஹோட்டல்கள் மெகா விருந்துகளை குறிவைத்து பல லட்சங்களுக்கு பில் கட்டாது மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. ஆன் - மெக்டொனாக் தம்பதியை கைது செய்த போலீஸார், அவை தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.