ஒவ்வொரு ஆண்டும் GFP வெளியிடும் இந்தப் பட்டியல், ஒவ்வொரு நாட்டின் பாதுகாப்புக்கு துணைபுரியும் ராணுவத்தின் பலம் எவ்வளவு என்பதை வெளிக்காட்டுகிறது.
உலக நாடுகளில் பெரும்பாலானவை ராணுவப் படையைக் கொண்டுள்ளன. எல்லைப் பாதுகாப்பு, போர், அவசர மற்றும் பேரிடர் காலங்களில் உதவி என்று வலிமையான ராணுவ படையை உருவாக்குவதற்கு ஒவ்வொரு நாட்டுக்கும் பிரத்யேகமான தகுதி, கடுமையான பயிற்சி என்று பல நடைமுறைகள் உள்ளன.
தனிப்பட்ட விதத்தில் ஒவ்வொரு நாட்டின் ராணுவப் படையுமே உரிய பயிற்சிகளுடன் வலிமையாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது சில நாடுகளின் ராணுவம் அதிகம் பலம் வாய்ந்ததாக காணப்படுகிறது. சமீபத்தில், வெளியான செய்தியின்படி உலகிலேயே மிகவும் வலிமையான ராணுவப் படையை கொண்ட நாடு அமெரிக்கா என்று கூறப்பட்டுள்ளது. சரி இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது?
குளோபல் ஃபையர்பவர் இந்த ஆண்டுக்கான வலிமையான ராணுவப் படையை கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 145 நாடுகளில் உள்ள ராணுவப் படைகளின் பலம் பலவீனங்களை ஆய்வு செய்து, இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்த வரிசைப் பட்டியல், கிட்டத்தட்ட 60 காரணிகளில் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக, மிகவும் வலிமையான ராணுவம் கொண்ட நாடாக அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. உலக அளவில் மிகப்பெரிய டிஃபென்ஸ் பட்ஜெட் கொண்ட அமெரிக்கா ராணுவத்துக்கு மட்டும் ஓர் ஆண்டிற்கு $761.7 பில்லியன் ஒதுக்குகிறது.
வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில், அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ரஷ்யாவும், மூன்றாவது இடத்தில் சீனாவும் உள்ளன.
15 லட்சம் ராணுவ வீரர்களுடன், ஓர் ஆண்டிற்கு ரூ.5.94 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கி உலகில் நான்காவது மிகப்பெரிய ராணுவத்தைக் கொண்டுள்ளது இந்தியா.
கடந்த ஆண்டு 5 இடத்தில் இருந்த யுனைடட் கிங்டம் ராணுவத்தை பின்னுக்குத்தள்ளி 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது தென் கொரியா.
GFP வெளியிட்ட பட்டியலில், யுனைடட் கிங்டம் 6ஆவது இடத்திலும், ஜப்பான், துருக்கி ஆகியவை முறையே 7 மற்றும் 8ஆவது இடத்திலும் உள்ளது.
மேலும் இந்த பட்டியலில் பாகிஸ்தான் 9ஆவது இடத்திலும், இத்தாலியின் ராணுவம் 10ஆவது இடத்திலும் உள்ளது.
ஒவ்வொரு நாட்டின் ராணுவ யூனிட்டுகளின் தரம், பிரிவுகள், ராணுவ பட்ஜெட், நிதி நிலைமை, லாஜிஸ்டிக்ஸ் திறன், இருப்பிடம், உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் GFP இந்த பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.
வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்திருப்பது, பூட்டான். பலவீனமான ராணுவங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் சோமாலியா, மத்திய ஆப்பிரிக்கா, மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.