கால்கள் கட்டப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட பெண்கள்... 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த கொடூர உயிர்ப்பலிகள்!
14 Apr,2024
மனித உயிர்ப்பலி என்பது மனித சமூகத்திற்கு எதிரானது. நவீன காலத்தில் அதற்கு முழுமையான எதிர்ப்பும், விழிப்புணர்வும் மக்களிடயே ஏற்படுத்தப்பட்டு வரும் சூழலில் மனித நாகரீகம் தொடங்கிய காலகட்டமான நவீன கற்காலத்திலும் மனித உயிர்ப்பலி இருந்துள்ளது என்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள செயின்ட் பால் டிராயிஸ் சேடக்ஸ் என்ற இடத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் ஆராய்ச்சியில், புதிய கற்காலத்தை சேர்ந்த மக்கள் உயிர்ப்பலி கொடுத்துள்ளனர் அன்பதும் இந்த கொடூரமானது பெண்களுக்கு மட்டுமே நடந்துள்ளது என்பதையும் கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில், ஆராய்ச்சி குறித்து பேசிய தொல்லியல் குழுவின் தலைவரும் உயிரியியல் நிபுணருமான எரிக் கிரப்ஸ், “6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஐரோப்பாவில் மனித உயிர்ப்பலி நடந்துள்ளது . அதுவும் பெண்களை மட்டுமே உயிர்ப்பலி கொடுத்துள்ளனர். இன்கேப்ரெட்டாமென்டோ என அழைக்கப்படும் இந்த முறையில் பெண்கள் உயிருடன் புதைக்கப்பட்டனர்.” என அவர் தெரிவித்தார்.
மேலும், “அவ்வாறு அவர்கள் புதைக்கப்படும்போது அவர்களின் கால்கள் பின்புறமாக மடிக்கப்பட்டு கழுத்துடன் இறுக கட்டப்பட்டுள்ளது. இது அவர்கள் தற்கொலை செய்வதற்கு நிகரானது. இது போன்ற கல்லைறைகள் செயின்ட் பால் டிராயிஸ் சேடக்ஸ்-ல் மட்டுமே 20 கண்டறியப்பட்டுள்ளது.” என கூடுதல் தகவல் அளித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “இந்த உயிர்ப்பலி முறையானது ஐரோப்பாவில் தொடங்கி பிற நாடுகளுக்கும் பரவி இருக்கலாம். நாகரீகம் தொடங்கிய காலத்தில் இதுபோன்ற நடைமுறை எவ்வாறு தொடங்கியது ? ஏன் தொடங்கியது ? என்ன காரணங்களுக்காக நடத்தப்பட்டது ? என்பது குறித்தும் வரும் காலங்களில் ஆராய்வோம்.” என எரிக் கிரப்ஸ் தெரிவித்தார்.