24,000 ஊழியர்கள் பணிநீக்கம்... உலகின் முன்னணி சோலார் நிறுவனம் முடிவு
18 Mar,2024
உலகின் மிகப்பெரும் சோலார் உற்பத்தி நிறுவனமான ’லாங்கி கிரீன் டெக்னாலஜி எனர்ஜி நிறுவனம்’, செலவினங்களை குறைக்கும் முயற்சியில் தனது பணியாளர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் குறைக்கிறது.
லாங்கி தனது 80 ஆயிரம் ஊழியர்களில் சுமார் 30 சதவீதம் வரை குறைக்க திட்டமிட்டுள்ளது. பெரும்பாலும் மேலாண்மை ஊழியர்கள் மற்றும் தொழிற்சாலை பணியாளர்கள் மத்தியில் இந்த ஆயிரக்கணக்கிலான பணிநீக்கத்தை லாங்கி தொடங்கியுள்ளது. சீனாவை பின்புலமாக கொண்ட லாங்கி, உலகளாவிய சூரிய தொழில்துறையில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால் அண்மைக்காலமாக தள்ளாட்டம் கண்டுள்ளது.
முக்கியமாக கடந்தாண்டு சோலார் பேனல்களின் விலை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சிய அடைந்ததையடுத்து, செலவினம் குறைப்பு மற்றும் நிர்வாக சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தள்ளப்பட்டது. இதன் விளைவாக, உலகளாவிய ஆற்றல் மாற்றத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படும் சோலார் தொழில் நிறுவனம், அதன் திவால் சாத்தியங்களை தவிர்க்கப் போராடி வருகிறது. மேலும் போட்டி நிறுவனங்களின் கடுமையான சவாலையும் எதிர்கொள்ள போராட ஆரம்பித்தது.
முதலில் ஊழியர்களின் செலவுகளைக் குறைப்பதற்கான முன் முயற்சிகளை லாங்கி கண்டடைந்தது. இதில் இலவச தேநீர் ரத்து, வணிக பயணங்களுக்கான பட்ஜெட் சுருக்கம் மற்றும் பிரிண்ட் எடுப்பதில் கருப்பு -வெள்ளைக்கு மட்டுமே முன்னுரிமை என விநோதங்களை அரங்கேற்றியது. ஆனால் சீனா - அமெரிக்கா இடையிலான பதற்ற சூழல் அதிகரித்ததும் லாங்கியை அதிகம் சேதாரம் செய்தது. ஒட்டு மொத்தமாக வருடாந்திர ஏற்றுமதி இலக்கை இழக்க நேரிட்டதில், நிறுவனத்தின் பங்குகள் 70 சதவீதம் சரிந்து விழுந்தன.
மலிவான சோலார் பேனல்களின் தேவை அதிகரித்தது, புதிய சோலார் நிறுவனங்கள் புற்றீசலாய் கிளம்பியது ஆகியவையும் லாங்கியை புரட்டிப்போட்டு அடித்தன. இந்த போராட்டங்களின் மத்தியில் கடந்தாண்டு வரை நம்பிக்கையோடு புதிய பணிவாய்ப்புகளுடன் விஸ்தரிப்பில் இருந்த லாங்கி தற்போது அதனை நிறுத்தியதோடு, பணியில் இருப்பவர்களையும் வீட்டுக்கு அனுப்ப ஆரம்பித்திருக்கிறது. இந்த வகையில் தற்போது 30 சதவீத ஊழியர்களை அதாவது சுமார் 24 ஆயிரம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் கசப்பான முடிவுக்கு லாங்கி வந்திருக்கிறது.