
உறையூர்த் தூதன்.5
இயற்கையாகப் பூமியிலெழுந்த சிறு குன்றுகளை அழகிய இரதங்களாகவும் விமானங்களாகவும் அமைத்திருந்த ஓர் இடத்திற்குச் சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் வந்து சேர்ந்தார்கள். அந்த விமானக் கோயில்களையொட்டி, ஒரு கல்யானையும் கற்சிங்கமும் காணப்பட்டன. இவையும் இயற்கையாகப் பூமியில் எழுந்த பாறைகளைச் செதுக்கிச் செய்த வடிவங்கள்தாம். அவற்றுள் யானையின் சமீபமாகச் சக்கரவர்த்தி வந்தார். "குந்தவி! இந்த யானையைப் பார்த்தாயா? தத்ரூபமாய் உயிருள்ள யானை நிற்பது போலவே தோன்றுகிறதல்லவா? முப்பது வருஷத்துக்கு முன்னால் இங்கே இந்த யானை இல்லை; ஒரு மொட்டைக் கற்பாறைதான் நின்றது!"
"இந்தக் கோயில்கள் எல்லாமும் அப்படித்தானே மொட்டை மலைகளாயிருந்தன?" என்று குந்தவி கேட்டாள். "ஆமாம் குழந்தாய்! இன்று நீயும் நானும் வந்திருப்பது போல் முப்பது வருஷத்துக்கு முன்னால் என் தகப்பனாருடன் நான் இங்கு வந்தேன். உன் தாத்தாவைப் பற்றித் தான் உனக்கு எல்லாம் தெரியுமே. சிற்பம் சித்திரம் என்றால் அவருக்கு ஒரே பைத்தியம்!" "உங்களுக்குப் பைத்தியம் ஒன்றும் குறைவாயில்லையே?" என்று குந்தவி குறுக்கிட்டாள்.
சக்கரவர்த்தி புன்னகையுடன் "என்னைவிட அவருக்குத்தான் பைத்தியம் அதிகம். செங்கல்லினாலும் மரத்தினாலும் அவர் ஆயிரம் கோயில்கள் கட்டினார். அப்படியும் அவருக்குத் திருப்தி உண்டாகவில்லை. என்றும் அழியாத பரம்பொருளுக்கு என்றும் அழியாக் கோயில்களைக் கட்ட வேண்டுமென்று ஆசைப்பட்டார். மலையைக் குடைந்து கோயில்கள் அமைக்க விரும்பினார். அந்தக் காலத்திலே தான் ஒரு நாள் அவரும் நானும் இந்தப் பக்கம் சுற்றிக் கொண்டு வந்தோம். அப்போது எனக்கு உன் வயது தானிருக்கும். தற்செயலாக ஆகாசத்தைப் பார்த்தேன். வெண்ணிறமான சிறு சிறு மேகங்கள் வானத்தில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தன. அந்த மேகங்கள் அவ்வப்போது வெவ்வேறு ரூபங் கொண்டு தோன்றின. ஒரு சிறு மேகம் யானையைப் போல் காணப்பட்டது. அதைப் பார்த்ததும் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. இந்தப் பாறையண்டை வந்தேன். கையில் கொண்டு வந்திருந்த காசிக் கட்டியினால் யானையின் உருவத்தை இதன்மேல் வரைந்தேன். அதை அப்பா பார்த்துக் கொண்டேயிருந்தார். யானை உருவத்தை நான் எழுதி முடித்ததும் என்னைக் கட்டி தூக்கிக் கொண்டு கூத்தாடத் தொடங்கினார். "நரசிம்மா! என்ன அற்புதமான யோசனை உன் யோசனை! இங்குள்ள பெரிய பாறைகளையெல்லாம் கோயில்களாக்கி விடுவோம். சின்னச்சின்னப் பாறைகளையெல்லாம் வாகனங்களாகச் செய்துவிடுவோம். இந்த உலகமுள்ள அளவும் அழியாதிருக்கும் அற்புதச் சிற்பங்களை எழுப்புவோம்! என்று வெறி பிடித்தவர்போல் கூறினார். அவ்விதமே சீக்கிரத்தில் இங்கே சிற்ப வேலைகளை ஆரம்பித்தார். அதுமுதல் இருபது வருஷகாலம் இந்தப் பிரதேசத்தில் இடைவிடாமல் ஆயிரக்கணக்கான கல்லுளிகளின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. நான் வட தேசத்துக்குப் படையெடுத்துப் போன போதுதான் நின்றது..."
இவ்விதம் சொல்லிச் சக்கரவர்த்தி நிறுத்தி ஏதோ யோசனையில்ஆழ்ந்தவர் போல் இருந்தார். சற்றுப் பொறுத்துக் குந்தவி, "ஆமாம் அப்பா, இருபது வருஷமாய் நடந்து வந்த சிற்பப் பணியை நிறுத்தி விட்டீர்களே என்ற சந்தோஷத்தினால்தான் உங்கள் பெயரை இந்தப் பட்டினத்துக்கு வைத்தார்கள் போலிருக்கிறது!" என்று சொல்லிவிட்டுக் குறும்பாக புன்னகை செய்தாள். அதைக் கேட்ட சக்கரவர்த்தி உரக்கச் சிரித்துவிட்டு "இல்லை அம்மா! இந்தச் சிற்பப்புரி தோன்றுவதற்கு நான் காரணமாயிருந்த படியினால் என் தகப்பனார் இப்பட்டினத்துக்கு என் பெயரை அளித்தார். 'நரசிம்மன்' என்ற பெயருடன் எத்தனையோ இராஜாக்கள் வரக்கூடும். 'மாமல்லன்' என்ற பட்டப் பெயர் வேறொருவரும் வைத்துக் கொள்ளமாட்டார்கள் என்று யோசித்து, அப்பா இந்தப் பட்டினத்துக்கு 'மாமல்லபுரம்' என்று பெயர் சூட்டினார். அப்பாவுக்கு என்மேலே தான் எவ்வளவு ஆசை!" என்று கூறி மறுபடியும் யோசனையில் ஆழ்ந்தார்.
"ஆமாம்; தாத்தாவுக்கு உங்கள் பேரில் இருந்த ஆசையில் நூறில் ஒரு பங்குகூட உங்களுக்கு என் அண்ணா மேல் கிடையாது. இருந்தால் அண்ணாவைக் கப்பல் ஏற்றிச் சிங்களத்துக்கு அனுப்புவீர்களா?" என்று கேட்டாள் குந்தவி. "குழந்தாய், கேள்! என்னுடைய இளம்வயதில் எனக்கு எத்தனையோ மனோரதங்கள் இருந்தன. அவற்றில் பல நிறைவேறின, ஆனால் ஒரே ஒரு மனோரதம் மட்டும் நிறைவேறவில்லை. கப்பல் ஏறிக் கடல் கடந்து தூர தூர தேசங்களுக்கெல்லாம் போய்வர வேண்டுமென்று நான் அளவில்லாத ஆசை கொண்டிருந்தேன். அதற்கு என் தந்தை அனுமதிக்கவில்லை. நான் இந்தப் பல்லவ சிம்மாசனத்தில் ஏறிய பிறகு கடற்பிரயாணம் செய்வதென்பது முடியாத காரியமாகி விட்டது. எனக்குக் கிடைக்காத பாக்கியம் என் பிள்ளைக்காவது கிடைக்கட்டுமே- என்றுதான் உன் தமையனைச் சிங்கள தீவுக்கு அனுப்பினேன். இன்னும் எனக்கு எந்தச் சிறுபிள்ளையினிடமாவது அதிகமான பிரியம் இருந்தால், அவனையும் கடற் பிரயாணம் செய்து வரும்படி அனுப்புவேன்" என்றார் சக்கரவர்த்தி.
"அப்படியானால் உங்களுக்கு என்னிடம் மட்டும் பிரியம் இல்லை போலிருக்கிறது" என்று குந்தவி சொல்வதற்குள்ளே, "உன்னைக் கப்பல் ஏற்றி அனுப்ப எனக்குப் பூர்ண சம்மதம்! ஆனால் நீ பெண்ணாய்ப் பிறந்து விட்டாயே, என்ன செய்கிறது? ஒவ்வொரு சமயம் நீ பிள்ளையாய்ப் பிறந்திருந்து, உன் தமையன் பெண்ணாய்ப் பிறந்திருக்கக் கூடாதா? - என்று எனக்குத் தோன்றுவதுண்டு" என்றார் சக்கரவர்த்தி. "நான் மட்டும் ஆண் பிள்ளையாய்ப் பிறந்திருந்தால், உங்களை இத்தனைக் காலமும் இந்தச் சிம்மாசனத்தில் வைத்திருப்பேனா? கம்சன் செய்ததைப் போல் உங்களைச் சிறையில் போட்டுவிட்டு நான் பட்டத்துக்கு வந்திருக்க மாட்டேனா? அண்ணாவுக்கு ஒன்றுமே தெரியாது, சாது! அதனால் நீங்கள் சொன்னதும் கப்பலேறிப் போய்விட்டான்" என்று குந்தவி சொல்லிவிட்டு அந்த மலைக் கோயில்களைச் சுற்றி ஓடியாடிப் பார்க்கத் தொடங்கினாள்.
சிறிது நேரத்துக்கெல்லாம் சக்கரவர்த்தி "வா! குழந்தாய்! இன்னொரு தடவை சாவகாசமாய்ப் பார்க்கலாம், ஊரில் ஜனங்கள் எல்லோரும் நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்" என்றதும் குந்தவி வரண்டை வந்து "அப்பா! இந்தக் கோயில்கள் இன்னும் அரைகுறையாகத்தானே இருக்கின்றன? மீண்டும் நீங்கள் ஆரம்பிக்க போகும் திருப்பணி வேலை இங்கேயும் நடக்குமல்லவா? இந்தக் கோயில்களுக்குள்ளே எல்லாம் என்னென்ன சுவாமியைப் பிரதிஷ்டை செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்டாள். சற்று தூரத்தில் பல்லக்கும் குதிரையும் ஒரு மரத்தடியில் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த மரத்தை நோக்கி இருவரும் நடக்கத் தொடங்கினார்கள். குந்தவியின் கேள்விக்குப் பதிலாகச் சக்கரவர்த்தி பின்வருமாறு சொன்னார்:-
"இல்லை, குழந்தாய்! இந்தக் கோயில்கள் இப்படியே தான் பூர்த்தி பெறாமல் இருக்கும். இந்த இடத்தைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் வேலை நடக்கும். குந்தவி! ஆயனர் என்ற மகாசிற்பி இந்த ஊரில் இருந்தார். அவருடைய தலைமையில்தான் இந்தக் கோயில்களின் வேலை ஆரம்பமாயிற்று. அவர்தான் இவ்வளவு வரை செய்து முடித்தவர். பிறகு அவர் சில துரதிர்ஷ்டங்களுக்கு ஆளானார்; கொஞ்ச நாளைக்கு முன் சொர்க்கம் சென்றார். அவர் தொடங்கிய வேலையைச் செய்து முடிக்கக்கூடிய சக்தியுள்ளவர்கள் இப்போது யாரும் இல்லை, இனிமேல் வரப்போவதும் இல்லை!"
"ஆயனரைப் பற்றிக் கேட்டிருக்கிறேன் அப்பா! அவருடைய மகள்....?" என்று குந்தவி சொல்வதற்குள் "அதோ யாரோ குதிரைமேல் வருகிறானே யாராயிருக்கும்?" என்றார் மகாமல்லர். பேச்சை மாற்றுவதற்காகவே அவர் சொன்ன போதிலும் உண்மையில் கொஞ்ச தூரத்தில் ஒரு குதிரை வந்து கொண்டுதானிருந்தது. சக்கரவர்த்தியும் குந்தவியும் மரத்தடிக்குப் போய் நின்றதும், அங்கே குதிரை வந்து நின்றதும் சரியாயிருந்தன. குதிரைமேலிருந்தவன் விரைவாக இறங்கிப் பயபக்தியுடன் சக்கரவர்த்தியின் அருகில் வந்து ஓர் ஓலையை நீட்டினான். "அடியேன் தண்டம்! உறையூரிலிருந்து வந்தேன்! அச்சுத பல்லவராயர் இந்த ஓலையை ஒரு கணமும் தாமதியாமல் சக்கரவர்த்தியின் திருச் சமூகத்தில் சேர்ப்பிக்க வேண்டுமென்று கட்டளையிட்டார்!" என்றான்.
சக்கரவர்த்தி ஓலையை வாங்கிக் கொண்டார். அதில் என்ன எழுதியிருக்கிறதென்று பார்க்காமலே தூதனை நோக்கி "நீ போகலாம்! இதில் அடங்கிய விஷயத்தைப் பற்றிய கட்டளை நேற்றே அனுப்பிவிட்டோம்" என்றார். தூதன் தண்டம் சமர்ப்பித்துவிட்டுத் திரும்பி விரைந்து சென்றான். "நன்றாயிருக்கிறது அப்பா, நீங்கள் ராஜ்ய பாரம் செய்கிற இலட்சணம்? ஓலை வந்தால் அதைப் படித்துக் கூடப் பார்க்கிறதில்லையா?" என்று கோமகள் கேட்டாள். "என்னுடைய ஞான திருஷ்டியில் உனக்கு நம்பிக்கை இல்லை போலிருக்கிறது! இந்த ஓலையில் என்ன எழுதியிருக்கிறதென்று சொல்லட்டுமா? சோழராஜ குமாரன் விக்கிரமன் இந்தப் புரட்டாசிப் பௌர்ணமியன்று சோழ நாட்டின் சுதந்திரக் கொடியை உயர்த்த உத்தேசித்திருக்கிறான். அவனை என்ன செய்வது என்று தளபதி அச்சுத பல்லவராயன் கேட்டிருக்கிறான். நீ வேணுமானால் படித்துப் பார்!" என்று ஓலையைக் குந்தவியிடம் கொடுத்தார்.
குந்தவி அதைப் படித்துவிட்டு வியப்புடன் சக்கரவர்த்தியை நோக்கினாள். "உங்களிடம் ஏதோ மந்திர சக்தி இருக்கிறது, அப்பா! அந்த மந்திரத்தை எனக்கும் சொல்லிக் கொடுக்கக் கூடாதா?" என்றாள். சக்கரவர்த்தி குதிரையின் மேலும், குந்தவி பல்லக்கிலும் அமர்ந்தார்கள். வழியில் கோமகள், "அப்பா! அந்த இராஜகுமாரனுக்கு என்ன அவ்வளவு அகந்தை? மாமல்ல சக்கரவர்த்தியின் கீழ் கப்பம் கட்டிக் கொண்டு வாழக் கொடுத்துவைக்க வேண்டாமா? அவனை நீங்கள் சும்மா விடக்கூடாது; தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்" என்றாள். "ஆமாம், குழந்தாய்! ஆமாம்! அவனைச் சும்மாவிடப் போவதில்லை. காஞ்சிக்கு அழைத்து வரச் செய்து நானே தகுந்த தண்டனை விதிக்கப் போகிறேன்" என்றார் சக்கரவர்த்தி.
கலைத் திருநாள்.6
மாமல்லபுரத்தில் சக்கரவர்த்தி மூன்று தினங்கள் தங்கியிருந்தார். அந்த மூன்று நாட்களும் அந்நகரம் ஆனந்த கோலாகலத்தில் மூழ்கிக் கிடந்தது. முதல் நாள் பட்டணப் பிரவேச ஊர்வலம் வந்தது. சக்கரவர்த்தியையும் அவருடைய திருமகளையும் மாமல்லபுர வாசிகள் அவரவர்களுடைய வீட்டு வாசலில் தரிசித்து உபசரித்து மகிழ்ந்தார்கள். மறுநாள் சரஸ்வதி பூஜையன்று காலையில் நகர வாசிகள் தத்தம் வீடுகளில் வாணி பூஜை நடத்தினார்கள். பிற்பகலிலும் சாயங் காலத்திலும் பொது இடங்களில் கலைமகளின் திருநாளைக் கொண்டாடினார்கள். கோயில்கள், மடாலயங்கள், கலா மண்டபங்கள், வித்யாசாலைகள் எல்லாம் அமோகமான அலங்காரங்களுடன் விளங்கின.
அன்று சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் சிவன் கோயில்களுக்கும் விஷ்ணு ஆலயங்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்து, அர்ச்சகர்களுக்குக் சன்மானம் அளித்தார்கள். கலைக் கூடங்களுக்கும், வித்யாசாலைகளுக்கும் விஜயம் செய்து, ஆசாரியர்களுக்குப் பொன்னும் புதுவஸ்திரங்களும் பரிசளித்தார்கள். அவர்கள் நகரில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் போகும் போதெல்லாம் வீதியில் ஜனங்கள் கும்பல் கும்பலாக நின்று பலவித வாழ்த்தொலிகளினால் தங்களுடைய குதூகலத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள். ஆனால், மாமல்லபுர வாசிகளுடைய குதூகலத்தின் முழு அளவையும் மறுநாள் விஜய தசமியன்றுதான் பார்க்கக் கூடியதாயிருந்தது. அன்று திருவிழா நகருக்கு வெளியே நடந்தது. மாமல்லபுரத்துக்குத் தெற்கே நெடுந் தூரத்துக்கு நெடுந்தூரம் பரவி நின்ற சிறு குன்றுகளும், பாறைகளும் அன்று அற்புதமான தோற்றங்கொண்டு விளங்கின. பாறைகளின் சுவர்களிலெல்லாம் விதவிதமான வர்ண வேறுபாடுகளுடன் புராணக் கதைகள் சித்திரிக்கப்பட்டிருந்தன. ஒரு விசாலமான பாறையிலே, நந்த கோகுலத்தில் பாலகோபாலன் செய்த லீலைகள், பூதனை சம்ஹாரத்திலிருந்து காளிங்க நர்த்தனம் வரையில் வெகு அழகாகச் சித்திரிக்கப்பட்டிருந்தன. தயிர் கடைந்து கொண்டிருந்த யசோதையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு வெண்ணெய் வேண்டுமென்று கண்ணன் கெஞ்சிக் கொண்டிருந்த சித்திரத்தைப் பார்த்த வண்ணமே வாழ்நாளைக் கழித்துவிடலாமென்று தோன்றியது.
இரு பிளவாகப் பிளந்திருந்த இன்னொரு பாறையில் ஆகாச கங்கையைப் பூமிக்குக் கொண்டு வருவதற்காகப் பகீரதன் கடுந்தவம் செய்த காட்சி சித்திரிக்கப்பட்டிருந்தது. அவனுடைய தவ மகிமையினால் கவரப்பட்டுத் தேவர்கள் முனிவர்கள் எல்லாரும் வந்து இருபுறமும் நிற்கிறார்கள். அவர்களுடைய முகங்களில் வியப்பும் பக்தியும் காணப்படுகின்றன. இந்த ஒப்பற்ற சித்திரக் காட்சியை எழுதிய ஓவியக்காரன் நகைச்சுவை நிரம்ப உள்ளவனாகவும் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் ஒரு மூலையில் கண்ணைமூடிக் கொண்டு தவஞ் செய்வதாகப் பாசாங்கு செய்த ஒரு பூனையின் உருவத்தையும் அவன் எழுதியிருந்தான்.
இந்த மாதிரி எத்தனையோ அற்புதச் சித்திரங்கள் காட்சிகள் ஒவ்வொரு பாறை முகப்பிலும் காணப்பட்டன. இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு ஸ்திரீகளும் புருஷர்களும் சிறுவர் சிறுமிகளும் கும்பல் கும்பலாக அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லாரும் பட்டுப் பட்டாடைகளை அணிந்து, திவ்ய ஆபரணங்களைப் பூண்டிருந்தார்கள். ஸ்திரீகள் கூந்தலில் மலர் சூடியிருந்தார்கள். புருஷர்கள் கழுத்தில் பூமாலைகளை அணிந்திருந்தார்கள். எங்கே பார்த்தாலும் ஒரே கோலாகலமாகவும் குதூகலமாகவும் இருந்தது.
ஜனங்களின் குதூகலத்தை அதிகப்படுத்துவதற்குச் சித்திரக் காட்சிகளைத் தவிர இன்னும் பல சாதனங்களும் அங்கேயிருந்தன. ஆங்காங்கு வாழை மரங்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட சிறு சிறு பந்தல்கள் காணப்பட்டன. அந்தப் பந்தல்களில் இசை விருந்துகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு பந்தலிலிருந்து வீணையின் ஒலி எழுந்தது. இன்னொரு பந்தலிலிருந்து குழலோசை வந்து கொண்டிருந்தது. வேறொரு பந்தலில் வேதியர்கள் ஸாமகானம் செய்து கொண்டிருந்தார்கள். மற்றொரு பந்தலில் ஓர் இசைப் புலவர் அப்பர் பெருமானின் தேவாரப் பதிகங்களைப் கல்லுங்கனியப் பாடிக் கொண்டிருந்தார்.
ஜனங்கள் அவரவர்களுக்கு இஷ்டமான இடத்திலே போய் நின்று சித்திரக் காட்சிகளையும், இசை விருந்துகளையும் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர்ப் பந்தல்களிலும் கூட்டத்துக்குக் குறைவில்லை. அவல் பொரியும் சர்க்கரையும் பானகமும் நீர்மோரும் வந்தவர்களுக்கெல்லாம் உபசரிப்புடன் வழங்கப்பட்டன. இவ்விதம் கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே ஜன சமுத்திரமாய்த் தோன்றியதாயினும் அந்த ஜனத்திரளுக்கு மத்தியில் ஓரிடத்தில் மிகவும் நெருங்கிய ஜனக் கூட்டம் காணப்பட்டது. இக்கூட்டம் ஒரே இடத்தில் நிலைத்து நில்லாமல் போய்க் கொண்டிருந்தது. அந்தக் காட்சியானது சிறு சிறு அலைகள் எழுந்து விழுந்து கொண்டிருக்கும் சமுத்திரத்தில் ஒரே ஒரு பெரிய அலை மட்டும் தொடர்ச்சியாகப் போய்க் கொண்டிருப்பது போல் தோன்றியது. இந்தப் பெரிய அலைக்குக் காரணமாயிருந்தவர்கள் சக்கரவர்த்தியும் அவருடைய செல்வப் புதல்வியுந்தான். நரசிம்மவர்மர் உயர்ந்த ஜாதிப் புரவி ஒன்றின் மேல் வீற்றிருந்தார். குந்தவி தேவியோ பக்கத்தில் இருந்தாள். இவர்களுக்கு முன்னாலும் பின்னாலும் கூட்டத்தை விலக்கி வழி செய்வதற்காக ஒரு சில வீரர்கள் மட்டுமே சென்றார்கள். அவர்களுக்குச் சற்று முன்னால், சக்கரவர்த்தியின் வருகையை அறிவிப்பதற்காக, ஒரு பெரிய ரிஷபத்தின் மேல் முரசு வைத்து அடித்துக் கொண்டு போனார்கள்.
ஜனத் திரளுக்கு இடையே சென்று கொண்டிருந்த இந்த ஊர்வலம் ஆங்காங்கு நின்று நின்று போகவேண்டியிருந்தது. சித்திரக் காட்சியைப் பார்ப்பதற்காகச் சக்கரவர்த்தி நின்ற இடங்களில் எல்லாம் அவர் மேலும் குந்தவி தேவியின் மேலும் பூமாரி பொழிந்தார்கள். நறுமணம் பொருந்திய பனி நீரை இரைத்தார்கள். சந்தனக் குழம்பை அள்ளித்தெளித்தார்கள். "ஜய விஜயீ பவ!" என்றும், "தர்ம ராஜாதிராஜர் வாழ்க!" "திருபுவனச் சக்கரவர்த்தி வாழ்க!" "நரசிம்ம பல்லவரேந்திரர் வாழ்க!" "மாமல்ல மன்னர் வாழ்க" என்றும் கோஷித்தார்கள்.
சக்கரவர்த்தி ஒவ்வொரு சித்திரக் காட்சியையும் விசேஷ சிரத்தையுடன் பார்வையிட்டு, ஆங்காங்கு பயபக்தியுடன் நின்று கொண்டிருந்த ஓவியக்காரர்களிடமும், சிற்பக் கலைஞர்களிடமும் தமது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொண்டு வந்தார். இவ்விதம் சுற்றிப் பார்த்துக்கொண்டு கடைசியாக ஊர்வலம் துர்க்கை ஆலயத்தண்டை வந்து சேர்ந்தது. இந்தத் துர்க்கை ஆலயம் மகேந்திரவர்மனின் காலத்திலே குன்றில் குடைந்து நிர்மாணித்தது. திருப்பணி வேலை இடையில் தடைப்பட்டுப் பூர்த்தியாகாமல் இருந்தது. அன்று நடந்த கோலாகலமான விழாக் கொண்டாட்டத்தில் இந்தத் துர்க்கை ஆலயந்தான் நடுநாயகமாயிருந்தது. அந்தப் பாறைக் கோயிலுக்கு எதிரே மிகவும் விஸ்தாரமான பந்தல் போடப்பட்டிருந்தது. அந்தப் பந்தலுக்கு உள்ளேயிருந்து அண்ணாந்து பார்த்தால் அமாவாசையன்று நள்ளிரவில் துல்லியமான ஆகாயத்தைப் பார்க்கிறோமோ? என்ற பிரமை உண்டாகும். அவ்விதம் பிரகாசமான நட்சத்திரங்களைப் போல ஜொலித்த எண்கோணப் பொட்டுக்கள் அமைந்த நீலப் பட்டாடையினால் மேல் விதானம் கட்டியிருந்தார்கள். பந்தலின் தூண்களில் விதவிதமான வர்ணப் பட்டாடைகளைச் சுற்றியிருந்தார்கள். பந்தலுக்கு மேலே வரிசையாகச் சிங்கக் கொடிகள் மாலைக் கடற்காற்றில் அசைந்து ஆடிக் கொண்டிருந்தன. பந்தலின் விளிம்புகளில் இளந்தென்னங் குருத்துக்களினாலான தோரணங்கள் தொங்கி ஆடிக் கொண்டிருந்தன.
பந்தலின் மத்தியில், தேவியின் சன்னதிக்கு எதிரே, சக்கரவர்த்திக்கும் அவருடைய புதல்விக்கும் இரண்டு அழகிய சிம்மாசனங்களும், அவற்றைச் சுற்றிலும் வரிசை வரிசையாகிய இன்னும் பல ஆசனங்களும் அமைக்கப்பட்டிருந்தன. புலிகேசியின் படையெடுப்பினால் தடைப்பட்டுப் போன சிற்பத் திருப்பணியை இந்தத் துர்க்கா தேவியின் கோயிலில் விஜயதசமி தினத்தில் மீண்டும் தொடங்குவதற்காக ஏற்பாடாகி இருந்தது. சக்கரவர்த்தி வருவதற்கு நெடுநேரத்திற்கு முன்னமேயே பந்தலில் மந்திரி மண்டலத்தாரும், மற்ற அதிகாரிகளும் வந்து அவர்களுக்குரிய ஆசனங்களில் அமர்ந்து விட்டார்கள். சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் பந்தலுக்குள் வந்ததும் சபையினர் அனைவரும் எழுந்து நின்றதுடன், ஜய கோஷங்களும் வாழ்த்தொலிகளும் வாத்திய முழக்கங்களும் வானை அளாவி எழுந்தன.
திருப்பணி ஆலயம்.7
சக்கரவர்த்தியும் குந்தவியும் முதலில் கோவிலுக்குள்ளே சென்று அம்பிகையைத் தரிசித்து விட்டு வந்தார்கள். பந்தலின் நடுவில் அமைந்திருந்த சிம்மாசனங்களில் சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் வந்து அமர்ந்ததும் மந்திரி மண்டலத்தாரும் மற்றவர்களும் தத்தம் ஆசனங்களில் அமர்ந்தனர். கோயில் குருக்கள்மார் தொடர்ந்து வந்து சக்கரவர்த்திக்கும் மற்றவர்களுக்கும் விபூதி குங்குமப் பிரசாதங்களை அளித்து, மலர் மாலைகள் சூட்டி முழக்கங்களுக்கிடையே சக்கரவர்த்தி தம் திருக்கரத்தினால் ஆசாரிய ஸ்தபதியின் தலையில் பட்டுப் பரிவட்டம் கட்டினார். பிறகு உயர்ந்த பட்டு வஸ்திரங்களும் நூறு பொன் கழஞ்சுகளும் வைத்திருந்த தாம்பூலத் தட்டையும் அவரிடம் கொடுத்தார். அவற்றை ஆசாரிய ஸ்தபதி வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டார். அவ்விதமே அங்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான சிற்பிகளுக்கும் மந்திரி மண்டலத்தாருக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் தலையில் பரிவட்டம் கட்டிப் பட்டு வஸ்திரங்களையும் பொன் கழஞ்சுகளையும் பரிசளித்தார்கள்.
பின்னர் மந்திரி மண்டலத்தின் தலைவரான விஷ்ணு சர்மர் எழுந்து சபையோரைப் பார்த்துப் பேசினார். பல்லவ ராஜ வம்சத்தில் தோன்றிய பெயர் பெற்ற மன்னர்களின் வீரதீர பராக்கிரமங்களை அவர் வர்ணித்தார். அவர்களில் கடைசி மன்னரான மகேந்திர வர்மரின் அற்புத குணாதிசயங்களைப் புகழ்ந்தார். அவருடைய அருந்தவப் புதல்வரான மாமல்ல சக்கரவர்த்தி பட்டத்துக்கு வந்த பிறகு பல்லவ சாம்ராஜ்யத்தின் புகழ் கடல்களுக்கு அப்பாலும் பரவியிருக்கிறதென்றும், அதற்கு உதாரணமாக இந்தச் சபையிலேயே ஒரு சம்பவம் நடக்கப்போகிறதென்றும், செண்பகத் தீவிலிருந்து வந்திருக்கும் பிரதிநிதிகள் தங்களுடைய தீவைப் பல்லவ சாம்ராஜ்யத்தில் சேர்த்துக்கொண்டு பரிபாலிக்கும் படி சக்கரவர்த்தியை வேண்டிக்கொள்ளப் போகிறார் என்றும் விஷ்ணு சர்மர் தெரிவித்த போது, சபையோர் தங்களுடைய குதூகலத்தைப் பலவித கோஷங்களினால் வெளியிட்டனர்.
மீண்டும் அமைச்சர் தலைவர் கூறியதாவது:- "மகாஜனங்களே! காஞ்சியும் மாமல்லபுரமும் பல்லவ சாம்ராஜ்யத்தின் இரு கண்களாகும். சாம்ராஜ்யத்துக்குத் தலை நகரமான காஞ்சி எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு துறைமுகப்பட்டினமான மாமல்லபுரம் நெடுநாளாக முக்கியமாயிருந்து வந்தது. ஆனால் காலஞ்சென்ற மகேந்திர சக்கரவர்த்தி இங்கே சிற்பத் திருப்பணியை ஆரம்பித்த பிறகு, காஞ்சியின் பெருமை சிறிது தாழ்ந்து மாமல்லபுரத்தின் புகழ் ஓங்கிவிட்டது. எட்டு வருஷங்களுக்கு முன்பு நமது சக்கரவர்த்திப் பெருமான் வடதேசத்துக்குப் படையெடுத்துச் சென்ற போது, இங்கு நடந்துவந்த சிற்பத் திருப்பணியை நிறுத்த வேண்டியிருந்தது. பாதகனான புலிகேசியைக் கொன்று வாதாபியைத் தீக்கிரையாக்கி விட்டுத் திரும்பிய பிறகு சில காலம் தேசத்திலிருந்து பஞ்சம் பிணிகளை நீக்கும் முக்கியமான பிரயத்தனங்களிலும், உள்நாட்டுச் சிறு பகைகளை அழிக்கும் முயற்சியிலும் சக்கரவர்த்தி ஈடுபட்டிருந்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பராசக்தியின் அருளினாலும், பல்லவ குலத்தின் பரம்பரையான தர்ம பலத்தினாலும், சக்கரவர்த்தி ஈடுபட்டிருந்த அந்தக் காரியங்கள் எல்லாம் இனிது நிறைவேறிவிட்டன. சக்கரவர்த்தியின் திருப்பெயரைப் பூண்ட இந்தப் பட்டினத்திலே சிற்பத் திருப்பணிகள் இன்று மறுபடியும் ஆரம்பமாகின்றன. இனிமேல் சக்கரவர்த்தியும் இந்த நகருக்கு அடிக்கடி விஜயம் செய்து திருப்பணி வேலைகளை மேற்பார்வை செய்வதாகக் கிருபை கூர்ந்து வாக்களித்திருக்கிறார்."
இவ்விதம் அமைச்சர் தலைவர் கூறிச் சபையோரை ஆனந்தக் கடலில் ஆழ்த்திய பிறகு, செண்பகத் தீவின் தூதர்கள் சக்கரவர்த்தியின் சமூகத்துக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களுடைய தலைவன் பேசியது தமிழ்மொழியேயானாலும் சற்று விசித்திரமான தமிழாயிருந்த படியால், சபையோர்களுக்குப் புன்னகை உண்டு பண்ணிற்று. அந்தத் தூதர் தலைவன் கூறியதின் சாராம்சம் பின்வருமாறு:- செண்பகத் தீவின் வாசிகள், சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் கரிகால் சோழரின் காலத்தில் சோழ நாட்டிலிருந்து அங்கே போய்க் குடியேறிய தமிழர்களின் சந்ததிகள், அந்தத் தீவை ஆண்டு வந்த ராஜ வம்சம் சந்ததியில்லாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு நசித்துப் போய்விட்டது. ஆகவே, செண்பகத் தீவு தற்சமயம் ராஜா இல்லாத ராஜ்யமாயிருந்து வருகிறது. இதை அறிந்ததும் பக்கத்துத் தேசங்களிலுள்ள மக்கள் - முக்கியமாகத் தட்டை மூக்குச் சாதியினர் - அடிக்கடி செண்பகத் தீவில் வந்திறங்கிக் கொள்ளையிட்டும், இன்னும் பலவித உபத்திரங்களை விளைவித்தும் செல்லுகிறார்கள். இதையெல்லாம் உத்தேசித்துச் செண்பகத் தீவின் ஜனங்கள் மகாசபை கூட்டி ஏக மனதாக ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதாவது தற்சமயம் தாய்நாட்டிலே பிரசித்த சக்கரவர்த்தியாய் விளங்கும் நரசிம்ம பல்லவேந்திரருக்குத் தூதனுப்பி, செண்பகத் தீவைப் பல்லவ சாம்ராஜ்யத்தில் சேர்த்துக் கொண்டு சக்கரவர்த்தியின் சார்பாகத் தீவை ஆட்சி புரிவதற்கு இராஜ வம்சத்தைச் சேர்ந்த வீர புருஷர் ஒருவரை அனுப்பும்படி பிரார்த்திக்க வேண்டியது.
சக்கரவர்த்தி தூதர்களின் பிரார்த்தனைக்கு உடனே மறுமொழி சொல்லவில்லை. சில நாள் யோசித்தே முடிவு செய்யவேண்டுமென்றும், அதுவரை அந்தத் தூதர்கள் பல்லவ சாம்ராஜ்யத்திலுள்ள காஞ்சி முதலிய நகரங்களைப் பார்த்துக் கொண்டிருக்கலாமென்றும், ஒருவாரத்துக்குள் அவர்களுக்கு மறுமொழி சொல்லக்கூடும் என்றும் தெரிவித்தார். இதன் பின்னர் நரசிம்மவர்மரும் குந்தவி தேவியும் மந்திரிகளும் ஸ்தபதிகளும் பின் தொடர்ந்துவர துர்க்கா தேவியின் கோயிலுக்கு மறுபடியும் வந்தனர். அந்தக் கோயிலின் வெளி மண்டபத்தில் இருபுறத்துச் சுவர்களும் வெறுமையாக இருந்தன. சக்கரவர்த்தி ஒரு பக்கத்துச் சுவரின் அருகில் வந்து, குந்தவிதேவியின் கையிலிருந்த காவிக் கட்டியை வாங்கி, அந்தச் சுவரில் சித்திரம் வரையத் தொடங்கினார். அருகில் இருந்தவர்கள் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு நிற்கும்போதே, வெகு சீக்கிரத்தில் சிம்மவாகனத்தின் மீது போர்க்கோலத்துடன் வீற்றிருக்கும் துர்க்கை தேவியின் திரு உருவம் அந்தச் சுவரில் சாக்ஷ£த் காரமாய்த் தோன்றியது. குந்தவி தேவி பயம் தொனித்த குரலில், "அப்பா! தேவியின் உக்கிரம் தாங்க முடியவில்லை. யாருடன் அம்பிகை சண்டையிடுகிறாளோ, அந்த அசுரனுடைய உருவத்தையும் எழுதிவிடுங்கள்" என்றாள். உடனே சக்கரவர்த்தி தேவிக்கு எதிரே கையில் கதாயுதம் தரித்த மகிஷாசுரனுடைய உருவத்தையும் எழுதினார். "இப்போது தான் பயமின்றிப் பார்க்க முடிகிறது!" என்றாள் குந்தவி. பிறகு, சக்கரவர்த்தி அங்கே அருகில் நின்ற ஆசாரிய ஸ்தபதியைப் பார்த்து, "ஸ்தபதியாரே, இந்த விஜயதசமி தினத்தில் தான் அம்பிகை மகிஷாசுரனை வதம் செய்தாள். நமது திருப்பணியை அந்தக் காட்சியுடனேயே ஆரம்பித்து வைக்கலாமல்லவா?" என்றார். ஆசாரிய ஸ்தபதியும் வணக்கத்துடன் ஆமோதித்துத் தம் கையிலிருந்த கல்லுளியைச் சக்கரவர்த்தியின் பால் நீட்ட, சக்கரவர்த்தி அதை வாங்கிக் கொண்டு தாம் எழுதிய சித்திரத்தின் மேல் கல்லுளியால் சில முறை பொளிந்தார். பிறகு கல்லுளியை ஸ்தபதியிடம் கொடுத்தார். ஸ்தபதியார் அதைப் பக்தியுடன் பெற்றுக் கொண்டு அம்பிகைக்கும் சக்கரவர்த்திக்கும் வணக்கம் செலுத்தி விட்டுச் சிற்ப வேலையை ஆரம்பித்தார். அன்று முதற்கொண்டு பல வருஷ காலம் மாமல்லபுரத்தில் ஆயிரக்கணக்கான கல்லுளிகள் சத்தம் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது.