கால்பந்து மைதானத்தில் பகிரங்கமாக சுட்டுக் கொல்லப்பட்ட குற்றவாளிகள்...
22 Feb,2024
ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபன்கள், கொலைக்குற்றவாளிகள் இருவரை பொதுவெளியில் வைத்து சுட்டுக்கொன்று நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றி உள்ளனர்.
’பல்லுக்குப் பல்; கண்ணுக்கு கண்’ என்பது காட்டுமிராண்டித்தனமான தண்டனை முறையாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மத மற்றும் நாகரிகங்களின் பின்னணியிலும் இந்த தண்டனை முறைகள் இருந்தபோதும், நவீன காலத்தில் அவை அப்படியே பின்பற்றப்படுவதில்லை. ஆனால் ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபன்கள் இதில் விதிவிலக்கு.
இன்றைய தினம் கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கஜினி நகர் கால்பந்து மைதானத்தில், கொலைக்குற்றம் சாட்டப்பட்ட இருவரை தலிபான் அதிகாரிகள் பகிரங்கமாக சுட்டுக்கொன்றுள்ளனர். தாலிபன் உச்ச தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்சாதாவின் கையொப்பமிடப்பட்ட மரண உத்தரவை, உச்ச நீதிமன்ற அதிகாரியான அதிகுல்லா தர்வீஷ் உரக்க வாசித்ததை அடுத்து, கொலைக் குற்றவாளிகள் இருவர் மீது தொடர் துப்பாக்கிச் சூடுகள் நிகழ்த்தப்பட்டன.
இந்த பகிரங்க தண்டனையை நேரில் காண ஆயிரக்கணக்கான ஆண்கள் கால்பந்து மைதானத்தில் கூடியிருந்தனர். 2021-ல் ஆப்கனில் மீண்டும் தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றினர். இவர்களது ஆட்சியை சர்வதேச நாடுகளில் பெரும்பாலானவை அங்கீகரிக்கவிலை என்ற போதும், தாலிபன்கள் தங்களது காட்டாட்சியை தொடர்ந்து வருகின்றனர். அதில் ஒன்றாக கிசாஸ் எனப்படும் ’கண்ணுக்குக் கண்’ தண்டனை உட்பட அடிப்படைவாத சட்டத்தின் அனைத்து அம்சங்களையும் முழுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன்கள், பெரும்பாலான நவீன முஸ்லீம் அரசுகளால் பயன்படுத்தப்படாத மரணதண்டனை மற்றும் உடல் ரீதியான தண்டனைகளை பின்பற்றி வருகின்றனர். மேலும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும் அமல்படுத்தி வருகின்றனர். அதன்படி பெண்களுக்கான உயர்கல்வி மறுக்கப்பட்டதோடு, பொது இடங்களில் குடும்பத்து ஆண் துணையின்றி பெண் தனியாக செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது. பெண்கள் சுயமாக வருமானம் ஈட்டுவதற்கும் அங்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.