சென்னையில் இருந்து பிராங்க் பார்ட் நகருக்கு செல்ல வேண்டிய லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம் இன்று ரத்து: பயணிகள் அவதி
20 Feb,2024
சென்னை: சென்னையில் இருந்து பிராங்க் பார்ட் நகருக்கு செல்ல வேண்டிய லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து ஜெர்மன் நாட்டில் உள்ள பிராங்க் பார்ட் நகருக்கு, லுப்தான்சா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தினமும் இயக்கப்படுகிறது. இரவு 11.50 மணிக்கு பிராங்க்பார்டிலிருந்து லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை வரும். மீண்டும் நள்ளிரவு 1.50 மணிக்கு, சென்னையில் இருந்து பிராங்க்பார்ட் நகருக்கு விமானம் புறப்பட்டு செல்லும்.
சென்னையிலிருந்து அமெரிக்கா, கனடா, ஜெர்மன் செல்லும் பயணிகள், இந்த விமானத்தைப் பயன்படுத்துவதால், இந்த விமானத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். தினமும் சுமார் 300க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விமானத்தில் பயணிப்பர். இந்த நிலையில், ஜெர்மன் நாட்டில் உள்ள லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள் சமீப காலமாக ஊதிய உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்படும் விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது.
இதனால், நேற்றிரவு 11.50 மணிக்கு பிராங்பார்ட் நகரில் இருந்து 268 பயணிகளுடன் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம், சென்னை விமான நிலையத்துக்கு வந்தது. சென்னையிலிருந்து இன்று பிராங்க் பார்ட் நகருக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்கள் போராட்டத்தால் அமெரிக்கா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய 250க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னையில் தவித்து வருகின்றனர்