மரண வழிபாடு நடத்திய பாதிரியார். கென்யாவில் 191 குழந்தைகள் கொலை!
10 Feb,2024
கென்யா நாட்டில் உண்ணாவிரதம் இருந்தால் தான் இயேசுவை தரிசிக்க முடியும் என்று கூறி வழிபாடு நடத்தியதன் மூலம் 191 குழந்தைகள் உட்பட 400-க்கும் மேற்பட்டவர்களை கொலை செய்ததாக பாதிரியார் ஒருவர் மீது பரபரப்பு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கென்யா நாட்டில் மாலிண்டி என்ற கடற்கரை நகரத்தில் ’குட் நியூஸ் இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பின் பாதிரியாராக பால் மெக்கன்சி நெதாங்கே என்பவர் செயல்பட்டு வந்தார். இவர் தனது பிரசங்கத்தின் போது, 'உபவாசம் இருந்து பிரார்த்தனை செய்பவர்கள்தான் இயேசுவை சந்திக்க முடியும், சொர்க்கத்திற்குச் செல்ல முடியும்' என போதனை செய்துள்ளார். அதை நம்பி பலர் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதில், 191 குழந்தைகள் உட்பட 400-க்கும் மேற்பட்டோரை கொன்றதாக பகீர் தகவல் வெளியானது. பாதிரியார் பால் மெக்கன்சி மற்றும் அவரது சீடர்கள் 29 பேர் 191 குழந்தைகளைக் கொலை செய்ததாக மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்ட உடல்களில் நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வுகளில் அவர்களில் பலரும் பட்டினி, மூச்சுத்திணறல் மற்றும் பொருட்களால் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் போன்ற காரணங்களால் இறந்தது தெரியவந்தது.
அதையடுத்து பால் மெக்கென்சி மற்றும் அவரது சீடர்கள் 30 பேரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையின்படி, ’கொலை செய்யப்பட்ட 191 குழந்தைகளில் 180 குழந்தைகளின் சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லை என பால் மெக்கென்சி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இவ்விவகாரம் தொடர்பாக பால் மெக்கென்சி விசாரணைக்கு ஒத்துழைக்க இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பால் மெக்கன்சியுடன் அவரது சீடர்கள் 29 பேரும் அடுத்த மாதம் (மார்ச்) 7- ம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அன்று முதல் வழக்கு விசாரணை தொடங்கி நடைபெறும் எனத் தெரிகிறது. இந்த வழக்கில் என்ன நடக்கும் என உலகம் முழுவதும் உற்று கவனிக்கப்படுகிறது.