அமெரிக்காவில் இந்திய மாணவரைத் தாக்கும் கொள்ளையர்கள்
07 Feb,2024
சிகாகோவில் கொள்ளையர்களால் இந்திய மாணவர் தாக்கப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சையது மசாஹிர் அலி. இவர் அமெரிக்காவில் சிகாகோவில் உள்ள இண்டியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். இவர் பிப்.4-ம் தேதி பல்கலைக்கழகத்தில் இருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆயுதம் தாங்கிய 4 கொள்ளையர்கள் அவரை வழிமறித்து தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து சையது தப்பியோடியுள்ளார். ஆனால், கொள்ளையர்கள் அவரை துரத்திச் சென்று தாக்கி சையதுவின் செல்போன், பணப்பையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் சையது படுகாயமடைந்தார். இந்த நிலையில் அமெரிக்காவில் இந்திய மாணவர் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சிகாகோவில் உள்ள கேம்ப்பெல் அவென்யூவில் உள்ள அவரது அபார்ட்மெண்ட் அருகே மாணவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியபோது தாக்குதல் நடத்தியவர்கள் அவரைத் துரத்துகின்றனர். அவரின் செல்போன், மற்றும் பணப்பையை எடுத்துக்கொண்டு ஓடுவதற்கு முன்னர் கொள்ளையர்கள், தாக்கியதாக மாணவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கான மாணவருக்கு இந்திய அரசு தலையிட்டு அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என சையத் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், சையது மசாஹிர் அலியின் மனைவி அமெரிக்காவிற்குச் செல்வதற்கு உதவி செய்யுமாறு மத்திய அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.