உக்ரைனுக்கு 5 ஆயிரம் கோடி யூரோ நிதியுதவி, ஐரோப்பிய யூனியன் முடிவால் அதிர்ச்சியில் ரஷ்யா!
05 Feb,2024
ரஷ்யா போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு 5,000 கோடி யூரோ நிதியுதவி அளிக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் அமைப்பின் பொருளாதார விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேல் தகவல் வெளியிட்டுள்ளார். 'உக்ரைனுக்கு நிதியுதவி அளிக்கும் விவகாரத்தில் ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளிடையே ஒருமித்த ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. உக்ரைனுக்கு நிதியுதவி வழங்குவதற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஒப்புக்கொண்டு விட்டன. ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு உதவியளிப்பதற்கான பொறுப்பை நிறைவேற்றுவதில் ஐரோப்பிய யூனியன் முன்னிலை அடைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின்மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை அளித்தன. எனினும், அமெரிக்க எம்.பி.க்களில் ஒரு பிரிவினரின் எதிர்ப்பு காரணமாக அந்த நாடு உக்ரைனுக்கு மேற்கொண்டு உதவிகள் அளிப்பதில் பின்னடைவு ஏற்பட்டது.