ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்; முட்டைகளை வீசி தாக்குதல்
02 Feb,2024
ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சி மாநாடு நடைபெற்று கொண்டிருந்த போது நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட விவசாயிகள், முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றம் நிலவியது. ஐரோப்பிய ஒன்றியத்தில் வேளாண் விளைபொருட்களை உற்பத்தி செய்வதில் பிரான்ஸ் முன்னணியில் இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்திய புதிய கட்டுப்பாடுகள் விவசாயிகளை பாதிப்பதாக புகார் எழுந்தது.
மேலும் விவசாய தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும், வேளாண் விளைபொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரான்சில் கடந்த மாதம் விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். முக்கிய சாலைகளில் டிராக்டர் பேரணி நடந்ததில் பிரான்ஸ் அரசை விவசாயிகள் திணறடித்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக ஸ்பெயின், பெல்ஜியம், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்தது. இந்நிலையில் பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரத்திற்குள் டிராக்டர்களுடன் நுழைந்த விவசாயிகள், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். அங்கு ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு நடந்து கொண்டிருந்த போது விவசாயிகள் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றம் நிலவியது.