வாரம் 4 வேலை நாள் முறைக்கு மாறும் நாடுகள், ஜெர்மனியில் இன்று முதல் அமல்
01 Feb,2024
பெர்லின்: ஜெர்மனியில் இன்று முதல் வாரத்துக்கு 4 நாள் வேலை முறை சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக 4 நிறுவனங்களில் வாரம் 4 வேலை நாள் திட்டத்தைச் செயல்படுத்த ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. வாரம் 4 நாள் வேலை முறையால் உற்பத்தி திறன் மேம்படுகிறதா அதன் பொருளாதார விளைவு என்ன போன்றவை ஆராயப்படும். இன்று முதல் 6 மாதங்களுக்கு வாரம் 4 நாள் வேலை முறையை செயல்படுத்தி அதன் விளைவுகளை ஆராய ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது.
வளர்ந்த நாடுகளில் உள்ள பல நிறுவனங்கள் வாரத்துக்கு 4 வேலை நாட்கள் முறைக்கு படிப்படியாக மாறி வருகின்றன. வேலை நாட்களை 4 ஆகக் குறைப்பதன் மூலம் தொழிலாளர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்க முடியும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சில நாடுகளில் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் வீதம், 4 நாட்களுக்கு 32 மணி நேரம் வேலை நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில நாடுகளில் நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம் வீதம், வாரம் ஒன்றுக்கு 40 மணி நேரம் வேலை நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பல நாடுகள் 2022-லிருந்தே சோதனை அடிப்படையில் வாரம் 4 நாள் வேலை முறையை செயல்படுத்தி வருகின்றன. ஆஸி., ஐஸ்லாந்து, ஸ்காட்லாந்து, பெல்ஜியம், அயர்லாந்து, ஸ்பெயின், கனடா, ஸ்வீடன் நாடுகளில் வாரம் 4 நாள் வேலை அமல்படுத்தப்பட்டுள்ளது. டென்மார்க், யு.ஏ.இ, பின்லாந்து, நெதர்லாந்து, இங்கிலாந்திலும் வாரம் 4 நாள் வேலை முறை சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.