பூமியிலிருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் நீர் இருக்கும் கிரகம் - நாசா
27 Jan,2024
பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான 'நாசா' தெரிவித்துள்ளது.
பூமிக்கு வெளியே நீர் மூலக்கூறுகளை அதிகளவில் கொண்ட கிரகத்தை 'நாசா' விஞ்ஞானிகள் ஹப்பிள் விண்வெளி தொலை நோக்கி மூலம் கண்டறிந்துள்ளனர். பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த கிரகத்துக்கு 'ஜிஜே 9827டி' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கிரகத்தின் விட்டம், பூமியின் விட்டத்தை விட இரு மடங்கு பெரியதாகும். அதன் வளிமண்டலத்தில் நீராவி மூலக்கூறுகள் உள்ளன. அங்குள்ள வெப்பநிலை 800 டிகிரி ஃபாரன்ஹீட்டாக உள்ளதால், 'ஜிஜே 9827டி' கிரகத்தில் எந்த வகையான உயிரினங்களும் இருப்பதற்கு சாத்தியமில்லை.
நாசா வெளியிட்டுள்ள தகவலின்படி, ஹப்பிள் தொலைநோக்கி, 'ஜிஜே 9827டி' கிரகத்தை 3 ஆண்டு காலத்தில் அதன் நட்சத்திர சுற்றுப்பாதையை கடக்கும் போது ஆய்வு செய்து தற்போதைய தகவல்கள் கடண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனம் நட்சத்திர மண்டலத்தில் இருக்கும் ஒரு குறு விண்மீனை சுற்றி வரும் இந்த கிரகம், ஒவ்வொரு முறை சூரியனை கடந்து செல்லும் நேரத்தில் கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில் இந்த கிரகத்தில் உள்ள மூலக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் 'ஜிஜே 9827டி' கிரகத்தில் நீர் மூலக்கூறு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.