நைட்ரஜன் வாயு பயன்படுத்தி மரணதண்டனை' மூச்சுத்திணறி'துடிதுடித்து உயிரிழந்த கொடூரம்!
27 Jan,2024
அமெரிக்காவில் முதன்முறையாக நைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் குறிப்பிட்ட குற்றங்களுக்கு மரண தண்டனை என்ற விதிமுறை நடைமுறையில் இருந்து வருகிறது. அப்படி மரண தண்டனை விதிக்கப்படுவோருக்கு, பொதுவாக உடலில் ஊசி செலுத்தப்பட்டு, தண்டனை நிறைவேற்றப்படும். இந்தச் சூழலில், அங்கு தற்போது முதன்முறையாக நைட்ரஜன் வாயு செலுத்தப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவைப் பொறுத்தவரைக் கடந்த 1999 ம் ஆண்டு நைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது அதற்கு கிளம்பிய எதிர்ப்பு காரணமாக அதன் பிறகு நைட்ரஜன் பயன்படுத்தி மரண தண்டனை விதிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர், தற்போது மீண்டும் ஒருவருக்கு வாயு செலுத்துவதன் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த முறையில், ஒரு சுவாச மாஸ்க் கைதியின் முகத்தில் வைக்கப்படும். ஆக்சிஜனுக்கு பதிலாக தூய நைட்ரஜன் வாயு செலுத்தப்படும். அதை சுவாசிக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர், மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பார்.
அமெரிக்க மாகாணமான அலபாமாவில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அம்மாகாணத்தைச் சேர்ந்த கென்னத் யூஜின் ஸ்மித் என்பவருக்கு இந்த முறையில் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்மித்தின் மரணதண்டனையை முழுமையாக நிறைவேற்ற சுமார் 22 நிமிடங்கள் ஆனது. முதல் பல நிமிடங்கள் அவர் சுயநினைவுடன் இருந்துள்ளார்.
அடுத்த சில நிமிடங்கள் அவர் சிரமப்பட்டது போலத் தோன்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்கள், ஸ்மித்துக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டபோது அருகே இருக்க அனுமதிக்கப்பட்டனர். உயிரிழக்கும் முன்பு ஸ்மித் கடைசியாக தனது மனைவியைப் பார்த்து ‘ஐ லவ் யூ’ என்று கூறியிருக்கிறார்.
மேலும், ஸ்மித் உயிரிழக்கும் நேரத்தில் "இன்று அலபாமா மனித நேயத்தைக் காப்பதில் ஒரு ஸ்டப் பின்னோக்கி சென்றுள்ளது" என்று கூறிவிட்டுத் துடிதுடித்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விதமாக நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை மனிதாபிமானம் அற்றது என்றும், கொடூரமானது என்றும் அங்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருக்கின்றன. ஆனாலும் இந்த மரண தண்டனை முறையைச் சரி என்றும், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மரண தண்டனை முறைகளில் இதுதான் மிகவும் மனிதாபிமான முறையில் இருப்பதாகவும் அலபாமா மாகாணம் தெரிவித்துள்ளது.