பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சினையாக இருந்த ராமர் கோயில் பிரச்சினை இன்று முடிவுக்கு வந்துவிட்டது.
இந்துக்களின் முக்கிய கடவுள்களில் ஒருவரான மகா விஸ்ணுவின் தசா அவதாரங்களில் ஒன்றான ராம அவதாரம் பாரதத்தில் நடந்ததாக இந்துக்கள் நம்புகின்றனர். அதாவது பாரதத்தில் உள்ள உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் உள்ள சரயு நதிக்கரையில் அமைந்துள்ள அயோத்தி நகரில்தான் இராமன் பிறந்தார். இதற்கு ஆதாரமாக இந்துக்களின் மிக பெரிய இதிகாசங்களுள் ஒன்றான இராமாயணம் விளங்குகின்றது.
அயோத்தியை ஆண்ட தசரத சக்கரவர்த்திக்கும் கோசலைக்கும் மகனாக ராமர் பிறந்தார். தீமைகளை அழிப்பதற்காகவே தசரத சக்கரவர்த்திக்கு மகனாக பிறந்த ராமன், அரக்க குணம் கொண்ட இராவணனை வதம் செய்ய வேண்டிய பிறப்பின் நோக்கத்திற்காக 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல நேரிடுகிறது.
இதன்போது அவரது மனைவியான சீதையை இலங்கை வேந்தன் இராவணன் கவர்ந்து செல்ல, யுத்தம் ஏற்பட்டு இறுதியில் இராவணனை வதம் செய்கின்றார். இந்த இராமாயணம் நடந்ததாக கூறப்படும் இடங்கள் அனைத்தும் தற்போதும் உலகில் ஆதாரமாக உள்ளன. இலங்கையிலும் சீதை இராவணனால் சிறைவைக்கப்பட்ட இடம் நுவரெலியாவில் உள்ள சீத்தா எலியவில் சிதை அம்மன் ஆலயமாக வீட்டிருக்கின்றது. அதுபோல ராமன் இராவணனை வதம் செய்வதற்கு முன்னர் வழிபட்ட ஆலயங்கள் , வதம் செய்த பின்னர் வழிபாடு நடத்திய ஆலயம் என பல இடங்கள் இன்றும் உள்ளன.
அந்தவகையில், ராமன் தனது மனைவியான சீதையை இராவணனிடம் இருந்து மீட்பதற்காக இலங்கை வருவதற்கு கடல் மார்க்கமாக அமைக்கப்பட்ட பாலம் ராமர் பாலம் என்றழைக்கப்படுகின்றது. தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல் முனையில் இருந்தே ராமர் பாலம் அமைத்து, இலங்கைக்கு சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.
இது வெறும் கட்டுக்கதை என்று ஒரு தரப்பு கூறிவந்தது. ஆயினும் ராமர் பாலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இந்துக்கிளன் மத நம்பிக்கையாக இருந்தது.
இந்நிலையில், பல வருடங்களாகவே ராமர் பாலத்தைத் தேசிய பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க வேண்டும் என பலரும் இந்த குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் இந்தியாவை ஆண்ட மத்திய காங்கிரஸ் ஆட்சியின் போது சேதுசமுத்திரம் திட்டம் மூலமாக ராமர் பாலம் அழியும் அபாயத்திற்கு சென்றது. ஆனால் அதற்கெதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் காரணமாக அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் சிக்கல் உருவானது. இந்த ராமர் பாலத்தை தேசிய மரபு சின்னமாக அறிவிக்க கோரி சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட பலரும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதேவேளை ராமர் பாலம், கட்டுக்கதை அல்ல என்றும் அது 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டது எனவும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்து காணொளி ஒன்றை சில வருடங்களுக்கு முன்னர் வௌியிட்டிருந்தனர்.
அமெரிக்காவில், இந்தியானா பல்கலைக்கழகம், தெற்கு ஓரிகன் பல்கலைக்கழகம், கொலராடோ பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதை கண்டறிந்துள்ளனர். ராமர் பாலம் அமைந்துள்ள இடத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆய்வுகளை வைத்து அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
கடலுக்கு அடியில் அமைந்துள்ள மணல் திட்டுகள் வேண்டுமானால் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்கையாக உருவானவையாக இருக்கலாம். ஆனால் பாலம் கட்டப்பட்டது உண்மைதான் என்று கூறி காணொளி வெளியிட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தெற்கு ஓரிகன் பல்கலைக்கழக வரலாற்று அகழ்வாராய்ச்சியாளர் செல்சியா ரோஸ் கூறுகையில், ராமர் பாலம் பகுதியில் உள்ள சுண்ணாம்புக்கல் பாறைகள், மனிதர்களால் உருவாக்கப்பட்டவைதான். இந்த கற்கள் 7 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் முந்தையதாக சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை இடிக்க வேண்டும் என்று கடந்த 2012ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசு கூறியது. ஆனால் , 2014 க்கு பின்னர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு ராமர் பாலத்தை இடிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் தற்போது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சியில் சர்ச்சைக்குரிய அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகமும் நடைபெற்று விட்டது. இதற்கு முன்னதாக பிரதமர் மோடி இராமேஸ்வரம் உள்ளிட்ட ராமாயணத்தில் இடம்பெறும் இடங்களில் சென்று வழிபாடு நடத்தினார்.
மேலும், இவ்வைபவத்திற்காக பிரதமர் மோடி 11 நாட்கள் விரதமிருந்து இராமேஸ்வரம் சென்று அங்கு இராமநாதசுவாமியை தரிசனம் செய்ததுடன், புனித நீரை எடுத்து அயோத்தி சென்றார். அப்புனித நீரைக்கொண்டு அயோத்தியில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட இருந்த விக்ரகத்திற்கு அபிஷேகம் செய்தனர். மேலும் இராமேஸ்வரத்தில் இருந்து அரிச்சல்முனை சென்ற பிரதமர் மோடி, கடற்கரையில் வண்ண மலர்கள் தூவி வழிபாடு செய்தார். இந்த அரிச்சல்முனையில் இருந்தே இலங்கைக்கு ராமன் பாலம் கட்டியதாக கூறப்படுகின்றது. இங்கு சென்ற பிரதமர் மோடி, கடற்கரையில் வண்ண மலர்கள் தூவி வழிபாடு செய்தார்.
இந்நிலையில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் ராமர் பாலம் தொடர்பில் மீண்டும் பேச்சு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டின் தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரை 23 கி.மீ. கடல் பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை இந்திய அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இது தொடர்பான பேச்சுவார்த்தை இரு நாடுகளிடையே பல ஆண்டுகளாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த ஆண்டு இந்தியா சென்றிருந்த போது, இந்த பாலம் அமைப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள ஒப்புதல் தெரிவித்திருந்தார். தற்போது, பாலம் கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள இந்திய வெளியுறவுத்துறை மற்றும் அரசுத் துறைகள் இணைந்து ஆலோசனை நடத்தியதாகவும், அதில் பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த பாலம் அமைக்கப்படுமாயின் அதுவும் அயோத்தி ராமர் கோவில் போல வரலாற்று சிறப்பு மிக்கதாக அமையும்.