பச்சை நிற மணல் கொண்ட ஹவானா கடற்கரை.,. குவியும் சுற்றுலா பயணிகள்,
20 Jan,2024
பசிபிக் பெருங்கடலில் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும் எட்டு தீவுக்கூட்டங்கள் தான் ஹவாய். இங்கு அதிசியமும் தனித்துவமும் நிறைந்த வித்தியாசமான கடற்கரை உள்ளது. அதன் பெயர் மஹானா பீச். சமீப காலமாக மஹானா பீச் தொடர்பான வீடியோக்கள் இன்ஸ்டாவில் அதிகமாக காணக் கிடைக்கின்றன.
இதனால் பலரும் ஹவாய் தீவிற்கு சுற்றுலா செல்ல ஆர்வமாக இருக்கிறார்கள். பெரிய தீவு என அழைக்கப்படும் ஹவாய் தீவில் இந்த மஹானா பீச் உள்ளது. இந்தக் கடற்கரையின் விசேஷம் என்னவென்றால், இங்குள்ள மணல் முழுதும் பச்சை நிறமாக இருக்கும்.
உள்ளூர் மக்களால் பாப்பாகோலியா பீச் அல்லது பச்சை மணல் பீச் என அழைக்கபடும் இந்த கடற்கரை அதிசியம், ஹவாய் தீவின் தெற்கு முனையில் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாவாசிகளிடம் ஹவாய் தீவு பிரபலமாக இருப்பதற்கு இந்த கடற்கரையும் ஒரு காரணம்.
வழக்கமாக கடற்கரையில் இருக்கும் மணல் போல் அல்லாமல் பச்சை நிறமாக இருப்பதால் தான் பலரும் மஹானா பீச்சை பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள். உலகில் இதுபோல் பச்சை நிற மணல் இருக்கும் கடற்கரை நான்கு மட்டுமே உள்ளது. அதில் மஹானா பீச்சும் ஒன்று. சரி, இந்தக் கடற்கரையில் மட்டும் ஏன் பச்சை நிறத்தில் இருக்கிறது என்பதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா?
இந்த மணலில் ஒலிவின் என்ற மதிப்புமிக்க கற்கள் இருப்பதால்தான் இப்படி பச்சை நிறத்தில் இருக்கிறது. பழங்கால எரிமலையான மவுனா லோவாவின் தென்மேற்கு பகுதியில் இருந்துதான் இந்த ஒலிவின் துகள்கள் தோன்றுகின்றன. இதை ஹவாய் வைரம் என அழைக்கிறார்கள். ஒலிவினின் பச்சை நிறம்தான் இங்குள்ள கடற்கரையின் மணலுக்கும் தனித்துவமிக்க பச்சை நிறத்தை தருகிறது. இதனால்தான் மஹானா பீச் மற்ற எல்லா கடற்கரையும் விட மயக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.
ஆனால் இந்த கடற்கரைக்கு அவ்வுளவு எளிதாக நாம் சென்றுவிட முடியாது. வாகனம் எதுவும் செல்ல இயலாததால் நாம் சில சாகச பயணத்தில் ஈடுபட வேண்டும். மஹானா கடற்கரையின் தனித்துவமான அடர் பச்சை நிற மணலை காண வேண்டுமென்றால், இரண்டரை கி.மீ தூரம் டிரெக்கிங் செல்ல வேண்டும். அப்போதுதான் அதன் அழகை ரசிக்க முடியும்.
இன்ஸ்டாகிராமில் மஹானா கடற்கரையின் வீடியோக்கள் வைரலாகியுள்ள நிலையில், பலரும் இந்த அதிசய காட்சியை பார்க்க ஆவலாக இருக்கின்றனர். இத்தகைய அரிதான மற்றும் அதிசிய மணல் ஹவாய் தீவின் புவியியல் பண்முகத்தண்மைக்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. கண்ணைக் கவரும் நிலப்பரப்புகளும் இயற்கை அதிசயமும் நிறைந்த ஹவாய் தீவிற்கு மற்றொரு மகுடமாக இருக்கிறது மஹானா கடற்கரை.