வீட்டிற்குள் கிடந்த 11 சடலங்கள்
12 Jan,2024
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளது அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவில் உள்ள லக்கி மார்வாட் மாவட்டத்தில் தக்தி கேல் என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் கிளம்புவதாக அங்கிருந்த மக்கள் நேற்று மாலை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீஸார், வீடு முழுவதும் பிணங்களாக கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அடையாளம் காட்டியதில் அந்த வீட்டில் வசித்து வந்த சகோதரர்கள் இருவர், அவர்களது மனைவிகள், குழந்தைகள் மற்றும் விருந்தினர் உட்பட மொத்தம் 11 பேர் அங்கு சடலங்களாக கிடந்ததைக் கண்டறிந்தனர். அவர்களின் சடலங்களைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், இதுகுறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
உணவில் விஷம் கலந்து அருந்தியதால் அவர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற முதற்கட்ட தகவல்கள் தெரிய வந்துள்ள நிலையில் இது தற்கொலையா அல்லது கொலையா என்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு கிடைத்துள்ள தடயங்களின் அடிப்படையில் அந்த குடும்பத்தினரின் உணவில் விஷம் கலந்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது சொத்துக்காக நடந்த கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக நடந்ததா? ஏதேனும் அமைப்பைச் சேர்ந்தவர்களால் இந்த கொலைகள் நடத்தப்பட்டு இருக்கலாமா என்கிற கோணத்தில் போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.