புதுடெல்லி: 2024-ம் ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலான ‘ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்’ வெளியிட்டுள்ளது. இதன்படி பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளும், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய ஆசிய நாடுகளும் முதலிடம் பிடித்துள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் தொடர்ந்து முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டு வருகிறது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான், ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் முறையே 101, 102, 103, 104 ஆகிய இடங்களைப் பிடித்து பட்டியலில் பின்தங்கியுள்ளன. இந்தியாவின் பிற அண்டை நாடுகளான மாலத்தீவு 58-வது இடத்தையும், சீனா 62-வது இடத்தையும், பூடான் 87-வது இடத்தையும், மியான்மர் 92-வது இடத்தையும், இலங்கை 96-வது இடத்தையும், வங்கதேசம் 97-வது இடத்தையும், நேபாளம் 98-வது இடத்தையும் பெற்றுள்ளன.
இந்தத் தரவரிசைப் பட்டியலில் இந்தியா தனது முந்தைய இடமான 80-வது இடத்தை இந்த ஆண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்திய பாஸ்போர்ட் மூலமாக 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸால் வெளியிடப்பட்டிருக்கும் 2024-ம் ஆண்டுக்கான சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை ஒரு குறிப்பிட்ட நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகள் அல்லது இடங்களுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும் என்ற அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
உதாரணமாக, இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 194 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டு பாஸ்போர்ட் மூலமாக 28 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் பயணிக்க முடியும். இவை அனைத்தும் சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (IATA) தரவுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன. ஆஸ்திரேலியா, டென்மார்க், நெதர்லாந்து ஆகிய நாடுகள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன. அமெரிக்க பாஸ்போர்ட்டானது கனடா மற்றும் ஹங்கேரி நாட்டு பாஸ்போர்ட்களுடன் 7-வது இடத்தை பகிர்ந்து கொள்கிறது. இங்கிலாந்து, பெல்ஜியம், லக்சம்பர்க், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் 11-வது இடத்தை பிடித்துள்ளது. இஸ்ரேல் 21-வது இடத்தில் உள்ளது. இதனிடையே ரஷ்யா 51-வது இடத்தில் உள்ளது.
சர்வதேச குடியுரிமை மற்றும் குடியிருப்பு குறித்த ஆலோசனைகள் வழங்கும் நிறுவனமான ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் என்ற லண்டனை அடிப்படையாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸை வெளியிட்டு வருகிறது. இது உலகின் அனைத்து பாஸ்போர்ட்களின் அசல் தரவரிசை என்று கூறப்படுகிறது. இது, உலகின் 227 இடங்களையும், 199 நாடுகளின் பாஸ்போர்ட்களையும் உள்ளடக்கியுள்ளது.