தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை விட வரி பிறக்கும் என்ற நிலையில் இலங்கை மக்கள் கடும் நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ளனர்.
வரி அதிகரிப்புகளால் கடும் பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் நாட்டு மக்கள் என்ன செய்வது என்று தலையைப் பிய்த்துக்கொண்டிருக்க அதற்கு நிவாரணமாக தற்கொலையே ஒரே வழி என்ற வகையில் போதனைகளை ஆரம்பித்த ருவான் பிரசன்ன குணரட்ன என்ற ஆன்மிகவாதி முதலில் தானே அதற்கு முன்மாதிரியாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கொட்டாவ மாக்கும்புரவில் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வசித்து வந்த ருவான் பிரசன்ன குணரட்னவிற்கு வயது 47. இவர் ஒரு ஆசிரியராவார்.
அதேவேளை சில தத்துவங்களை பிரதேச மக்கள் மத்தியில் பரப்பி வந்துள்ளார். அதில் மறுபிறவிக்கு உடனடி தீர்வு தற்கொலையே என்ற வகையில் இவர் தனது கூட்டங்களுக்கு வரும் மக்களை மூளைச்சலவை செய்துள்ளார். மட்டுமின்றி நாட்டின் பல பாகங்களில் இவ்வாறு போதனைகளை இவர் முன்னெடுத்து வந்துள்ளார்.
இப்போது நாம் அனுபவிக்கும் கஷ்டங்களிலிருந்து விடுபட்டு அடுத்த பிறவியில் துன்பங்கள் இல்லாத மனிதர்களாக உடனடியாக பிறக்கலாம். அதற்கு தற்கொலையே தீர்வு என போதித்துள்ளார்.
காலி, குருணாகல், அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் இந்த தற்கொலை போதனைகளை நடத்திய இவர் இறுதியாக ஹபராதுவயில் போதனை செய்துள்ளார். பின்னர் இதற்கு தன்னையே முதலில் பலி கொடுத்துள்ளார் ருவான்.
கடந்த வருடம் டிசம்பர் 28ஆம் திகதி ஹோமாகமவில் உள்ள தனது வீட்டில் ஒரு வகை விஷத்தை அருந்தி இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இரசாயன கலவைகள் கொண்ட இந்த விஷமானது சயனைட்டை ஒத்ததாக இருந்துள்ளது. இவரது இறுதி கிரியைகள் இடம்பெற்ற முடிந்த 30ஆம் திகதியே இவரது மனைவி தனது மூன்று பிள்ளைகளுக்கும் அதே விஷத்தை பருகச்செய்து தானும் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குடும்பச் சுமை அல்லது தனிப்பட்ட காரணங்கள் என இந்த சம்பவங்கள் பற்றி ஊடகங்கள் அப்போது செய்திகள் வெளியிட்டிருந்தன.
ஆனால் குற்றப்புலனாய்வு பிரிவினர் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டவர்களிடம் இது குறித்து இரகசியமாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதில் ருவான் பிரசன்ன குணரட்ன தற்கொலை மூலமான மரணம் சிறந்த மறுபிறவிக்கு வழிவகுக்கும் என்ற போதனைகளை முன்னெடுத்ததாக பலரும் தெரிவித்திருக்கின்றனர்.
அம்பலாங்கொடையைச் சேர்ந்த 34 வயது இளைஞர் ஒருவர் இது குறித்த பல தகவல்களை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.
இந்த சம்பவங்கள் இடம்பெற்று சில நாட்களில் புது வருடமும் பிறந்தது. ஆனால் அதிர்ச்சிகள் காத்திருந்தன. ஜனவரி 2ஆம் திகதி யக்கலவில் யுவதி ஒருவரும் மஹரகமவில் இளைஞர் ஒருவரும் இதே பாணியில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அந்த இளைஞர் வேறு யாருமில்லை. பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கிய அம்பலாங்கொடை இளைஞர் தான் அவர். மஹரகமவில் உள்ள விடுதி ஒன்றில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட இவர் போதகர் ருவான் இறந்த பாணியில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
யக்கலவில் தற்கொலை செய்து கொண்ட யுவதிக்கு 21 வயது. இவர் ருகுணு பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவி. போதகர் ருவான் பிரசன்னவின் போதனைகளில் கலந்து கொண்ட இவர் போதகர் மற்றும் அவரது மனைவி பிள்ளைகளில் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டவர் என்பது முக்கிய விடயம். அவர் தனது வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார்.
எனினும் தற்கொலை செய்துகொண்ட அனைவருமே ஒரே விஷ கலவையை பாவித்தமை பொலிஸாருக்கு மேலும் சந்தேகங்களை ஏற்படுத்தியது.
ஜனவரி 3ஆம் திகதி மேற்படி இளைஞர் மற்றும் யுவதியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டவர்களிடமும் பொலிஸார் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். குறித்த இரசாயன விஷக் கலவைகளை போதகர் ருவான் பிரசன்ன தனது ஆதரவாளர்களுக்கு விநியோகித்துள்ளாரா என்ற சந்தேகம் பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்தே உடனடியாக செயற்பட்ட பொலிஸார் பொது மக்களுக்கு அறிவுறுத்தல்களை விடுத்துள்ளனர்.
ருவான் பிரசன்னவின் போதனைகளில் கலந்துகொண்டவர்களுக்கு ஏதாவது இரசாயன கலவைகள் வழங்கப்பட்டிருக்குமாயின் அதை பயன்படுத்த வேண்டாம் என்றும் கலந்துகொண்டவர்களின் உறவினர்கள் அது குறித்து விழிப்பாக இருக்குமாறும் வேண்டுகோள் விடப்பட்டது.
நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் தலைதூக்கியிருக்கும் இக்காலகட்டத்தில் இவ்வாறு மக்களை மூளைச்சலவை செய்து தற்கொலை செய்யத்தூண்டும் நபர்களும் உருவாகியுள்ளனர்.
கடந்த வருடம் மே மாதம் இவ்வாறானதொரு சம்பவம் ஆபிரிக்க நாடான கென்யாவில் இடம்பெற்றது.
போல் மெக்கன்சி என்ற போதகர் பட்டினி கிடந்து இறந்தால் சொர்க்கத்துக்கு சென்று ஏசுவை அடையலாம் என தனது ஆதரவாளர்களுக்கு கூற அவருக்கு சொந்தமான எண்ணுறு ஏக்கர் பண்ணையில் பலரும் வந்து உணவில்லாது பட்டினி கிடக்க ஆரம்பித்தனர்.
இவ்வாறு பட்டினி கிடந்து இறந்தவர்களின் எண்ணிக்கை இருநூறை தாண்டியது. பலரை மீட்டு பொலிஸார் காப்பாற்றினர். ஆனால் வழிபாடுகளில் கலந்துகொண்டதாகக் கூறப்படும் 600 பேரை காணவில்லை.
உயிரிழந்த சிலரின் உடல் உள்ளுறுப்புகள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி செய்திகள் வெளியாகின. அந்த போதகர் அவரது மனைவி உள்ளிட்ட பலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர், அந்நாட்டு பொலிஸார். ஆனால் இலங்கையில் போதகர் உட்பட அவரது குடும்பமே இன்று உயிருடன் இல்லை.
ஆகவே பல இரகசியங்கள் அவர்களுடனேயே புதைந்து போய்விட்டன. எனினும் அடுத்தடுத்து இந்த பாணியில் தற்கொலைகள் எதுவும் நாட்டில் இடம்பெறலாமா என்ற சந்தேகத்திலும் அச்சத்திலும் பொலிஸ் தரப்பினர் உள்ளனர்.