ட்ரிப்ஸ் மருந்துக்கு பதிலாக குழாய் நீரை ஏற்றிய நர்ஸ்,10 நோயாளிகள் பலியான மர்மம்
06 Jan,2024
வலி நிவாரணிக்கான ட்ரிப்ஸ் மருத்துக்கு பதிலாக குழாயில் பிடித்த சுகாதாரமற்ற நீரை நோயாளிக்கு ஏற்றிய நர்ஸால், 10 நோயாளிகள் இறந்து போனது தாமத விசாரணையில் வெளிப்பட்டிருக்கிறது.
உடலுக்கு நோவு கண்டவர்கள் மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களை நம்பியே மருத்துவமனையில் சேர்கிறார்கள். கடவுளுக்கு இணையான மருத்துவப் பணியாளர்களில் சில புல்லுருவிகள் கலப்பதால், அப்பாவிகளின் உயிர் போவதும் நடக்கிறது. அப்படி குறிப்பிட்ட வலி நிவாரணிக்கான ’ஐவி ட்ரிப்ஸ்’ மருந்துகளை நோயாளிகளுக்கு ஏற்றுவதற்கு பதிலாக, குழாயில் பிடித்த சுகாதாரமற்ற தண்ணீரை நோயாளிக்கு ஏற்றியதில் சுமார் 10 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவின் மெட்ஃபோர்டில் உள்ள அசாண்டே ரோக் பிராந்திய மருத்துவமனையில் இந்த விபரீத சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இந்த மருத்துவமனையில் மருந்துகளை ஊழியர்கள் சிலர் திருடியதாக வெளியான புகாரை போலீஸார் விசாரித்தபோது, ஒரு வருடத்துக்கு முன்பாக அரங்கேறிய கோரச் சம்பவங்கள் வெளிபட்டுள்ளன.
மருத்துவமனையின் சேகரிப்பில் இருந்த விலையுயர்ந்த மருந்துகள் சிலவற்றை அங்கு பணியாற்றிய நர்ஸ் ஒருவர் தொடர்ந்து திருடி உள்ளார். பின்னர் கணக்கு காண்பிப்பதற்காக அவற்றை நோயாளிகளுக்கு வழங்கியதாக பொய் தகவலை பதிவு செய்திருக்கிறார். ஐவி ட்ரிப்ஸ் எனப்படும் ரத்தக்குழாய்க்கு நேரடியாக செலுத்தப்படும் மருந்துகளை திருடிவிட்டு அவற்றை நிர்வாகத்தின் பார்வையில் இருந்து மறைப்பதற்காக, குழாய் நீரை பயன்படுத்தி இருக்கிறார். அவ்வாறு குழாய் நீர் செலுத்தப்பட்டதில் நோய்த்தொற்று ஏற்பட்டு சுமார் 10 நோயாளிகள் இறந்துபோனது பின்னர் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக வலி நிவாரணத்துக்கு பயன்படுத்தப்படும் ஃபெண்டானில் மருந்துக்கு பதிலாக அந்த நர்ஸ் குழாயில் வந்த நீரை பயன்படுத்தி உள்ளார். மெட்ஃபோர்ட் போலீஸார் மேற்கொள்ளும் விசாரணையில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமிருக்கும் எனத் தெரிய வருவதால், பலியானோர் எண்ணிக்கை மேலும் கூடலாம் என அஞ்சப்படுகிறது. இது தொடர்பான விசாரணையில், மருத்துவமனையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட நர்ஸ் ஒருவரிடம் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.