அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலமான அயோவாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சக மாணவர் ஒரு கொல்லப்பட்டதாகவும் 5 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்ததைத் தொடர்ந்து அங்கு போலீஸார் அவசர உதவி வாகனங்களுடன் பெர்ரி உயர்நிலைப் பள்ளிக்கு விரைந்து சென்றனர்.
இதுகுறித்து அயோவா பிரிவு குற்றப்புலனாய்வு உதவி இயக்குநர் மிட்ச் மோர்ட் வெடிட் கூறுகையில், " 17 வயது மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் ஆறாம் வகுப்பு மாணவர். 11 - 12 வயதுடைய அம்மாணவர் காலை உணவுக்காக அங்கு வந்திருக்கலாம். இந்தச் சம்பவத்தில் 4 மாணவர்களும், ஒரு பள்ளி நிர்வாகியும் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியை அறிய அதிகாரிகள் முயன்ற போது, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்ட காயத்துடன் இருந்ததைக் கண்டறிந்தனர். காயம் அடைந்தவர்களின் உயிருக்கு ஆபத்தில்லை" என்று தெரிவித்தார்.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி மாணவி அவா அகஸ்டஸ் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றிடம், "துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் நான் வகுப்பறைக்குள் மறைந்து கொண்டேன். துப்பாக்கிச் சூடு முடிந்தது என்று அதிகாரிகள் வந்து தெரிவித்ததும் நான் வெளியே ஓடினேன். தரையெல்லாம் கண்ணாடிகளும் ரத்தமுமாக சிதறியிருந்தன. நான் என் காருக்குச் சென்றேன். அதிகாரிகள் காலில் சுடப்பட்ட ஒரு மாணவியை ஆடிட்டோரியத்தில் இருந்து வெளியே எடுத்துச் சென்றனர்" என்று கூறினார்.
பெர்ரி பள்ளியில் குளிர்கால விடுமுறைக்குப் பின்னர் புதிய செமஸ்டருக்காக வியாழக்கிழமை தான் முதன்முதலாக வகுப்புகள் தொடங்கின. இந்தச் சம்பவத்தினைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை பள்ளி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில தலைநகரான டெஸ் மோனிஸில் இருந்து பெர்ரி 35 மைல் (55 கிலோ மீட்டர்) தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பெர்ரி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததுக்கு ஒரு நாளைக்கு முன்பாக வெர்ஜினியாவில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே 15 வயது மாணவர், மற்றொருவரை சுட்டுக் கொன்றதாக ஒரு வழக்கு பதிவாகியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய இருவரும் மாணவர்களா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
எஜுகேஷன் வீக் செய்தி பத்திரிக்கையின் தரவுகளின் படி, பெர்ரி உயர் நிலைப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு இந்த ஆண்டில் நடந்த 2-வது சம்பவம் என்றும், கடந்த 2018-ம் ஆண்டிலிருந்த நடந்த துப்பாக்கிச் சூட்டில் 182-வது நிகழ்வு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவம் அமெரிக்காவில் பொதுவான ஒன்றாக மாறிவருகிறது. மக்கள்தொகையை விட துப்பாக்கிகள் புழக்கம் அதிகமுள்ள நாட்டில், அதன் பரவலாக்கத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகள் அரசியல் முட்டுக்கட்டையைச் சந்திக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிகளில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நாட்டின் அரசியல் முட்டுக்கட்டையை நினைவுபடுத்தும் ஒன்றாக மாறியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் டெக்சாஸின் உவால்டோவின் தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் பெர்ரி துப்பாக்கிச் சூடு சம்பவம், நாட்டின் 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் சீசனுக்கான முதல் போட்டியை தொடங்கி வைக்கும் அயோவா காகஸ் தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக நிகழ்ந்துள்ளது. இந்தத் தேர்தலில் துப்பாக்கி கலாச்சாரம் மீண்டும் ஒரு விவாதப் பொருளாக மாறும் என்ற நிலையில் அதற்கு முன்பாக சிறிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, குடியரசு கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளர் விவேக் ராமசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவொன்றில், “பெர்ரி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பொற்றோரைச் சந்தித்தேன். எங்களின் நோக்கம் அவர்களுக்கு எங்களின் பிரார்த்தனைகளை தெரிவிப்பதும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்ற எண்ணத்தை பிரதிபலிப்பதுமேயாகும்” என்று தெரிவித்துள்ளார்.