புத்தாண்டு தினத்தன்று ஜப்பானின் வடமேற்கு கடற்கரையில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர், அதுமட்டுமின்றி 2011-ல் நாட்டின் வடக்குப் பகுதியைப் பேரழிவிற்குள்ளாக்கிய சுனாமி பற்றிய அச்சத்தையும் மீண்டும் எழுப்பியது.
உலகின் மிகவும் அதிகமாக நில அதிர்வு ஏற்படும் மண்டலங்களில் ஜப்பான் நாடு ஒன்றாகும். முழு நாடும் நிலநடுக்கங்களால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நிலநடுக்கம் மற்றும் அதன் விளைவுகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
ஜப்பானின் வடமேற்கு கடற்கரையில் உள்ள நோட்டோ தீபகற்பத்தில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கடந்த ஜனவரி 1ஆம் தேதி மாலை 4 மணிக்கு உள்நாட்டில் ஏற்பட்டது. குறைந்தது 48 பேர் இதில் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கம் ஜனவரி 1ஆம் தேதி நாட்டின் கடலோரப் பகுதிகள் அனைத்திற்கும் சுனாமி எச்சரிக்கையைத் தூண்டியது. புத்தாண்டின் தொடக்கத்தில், பலர் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடிக் கொண்டிருந்த போது, நாட்டை சுனாமி அச்சம் பற்றிக் கொண்டது. ஜப்பான் வானிலை ஆய்வு மையம் ஜனவரி 1 அன்று ஐந்து மீட்டர் (16 அடி) அலைக்கான எச்சரிக்கையை வெளியிட்டது. ஆனால், அது ஜனவரி 2ஆம் தேதி காலை 10 மணிக்கு குறைந்தது 1.2 மீட்டர் உயர அலையைப் பதிவுசெய்த பின்னர் அனைத்து சுனாமி எச்சரிக்கைகளையும் நீக்கப்பட்டது.
இது 2018 ஆம் ஆண்டிலிருந்து ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகும். இதன் விளைவாக குறைந்தது 200 கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்பட்டது, ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் மற்றும் நீர் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகினர், மேலும் அப்பகுதியைச் சுற்றியுள்ள ரயில் மற்றும் சாலை போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
ஜப்பானில் இதே அளவுள்ள மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கடந்த கால நிகழ்வுகள் காட்டுகின்றன என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது. அப்பகுதியில் வசிப்பவர்கள் தொடர்ந்து நில அதிர்வுகளால் பாதிக்கப்படுகின்றனர், இது இப்பகுதியில் உள்ள கட்டமைப்புகளை இன்னும் பெரிய ஆபத்தில் ஆழ்த்துகிறது என கூறியுள்ளனர்.
ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் படி, மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அடுத்த வாரத்தில் பெரிய பூகம்பங்கள் மற்றும் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டிலிருந்து இப்பகுதியில் நிலநடுக்கங்கள் அதிகரித்து வருகின்றன, கடந்த மூன்று ஆண்டுகளில் நில அதிர்வு நிகழ்வு அதிகமாக உள்ளது. அதாவது, நவம்பர் 2020ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 2023ஆம் ஆண்டு வரை நில அதிர்வு திரளில் நோட்டோ தீபகற்பத்தில் 14,000-க்கும் மேற்பட்ட லேசான பூகம்பங்கள், 1 அல்லது அதற்கு மேற்பட்ட அளவுகளில் ஏற்பட்டதாக ஜப்பானிய பல்கலைக்கழகங்களின் நிபுணர்களின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் நோட்டோ பகுதியில் ஏற்பட்ட 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது ஒரு நபராவது உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
நோட்டோ தீபகற்பத்தில் கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் நோட்டோ-ஹான்டோ பூகம்பம் ஆகும். இது மார்ச் 25, 2007 அன்று 6.9 ரிக்டர் அளவில் ஏற்பட்டது.
ஜப்பானில், கடந்த பல ஆண்டுகளில் பெரும் பூகம்பங்களால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். 2011ஆம் ஆண்டின் கிரேட் ஈஸ்ட் ஜப்பான் பூகம்பம் என்று உள்நாட்டில் அழைக்கப்படும் வடக்குப் பகுதியின் பெரும்பகுதி மீண்டும் கட்டமைக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த பூகம்பமும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியும் சுமார் 20,000 பேரைக் கொன்றது. ஜப்பான் அரசு புள்ளிவிபரங்களின்படி சுமார் 2,500 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிகிறது.
ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்தன. 2011-ல் 1,20,000-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து விழுந்தன. இந்த பேரழிவின் விளைவாக டோக்கியோ எலக்ட்ரிக் ஃபுகுஷிமா ஆலையில் ஜப்பானின் மிக மோசமான அணுசக்தி பேரழிவு ஏற்பட்டது. அரசு அதன் வடக்குப் பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப வரிகளை உயர்த்தியது.
1995ஆம் ஆண்டில், கோபி நிலநடுக்கத்தில் 6,000 க்கும் அதிகமானோர் இறந்தனர். மேலும் சமீபத்திய ஆண்டுகளில், 2016-ல் குமாமோட்டோ நிலநடுக்கம் 200-க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது. 1923-ல் டோக்கியோவைத் தாக்கிய நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,00,000-ஐத் தாண்டியதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.