ஏரியில் தலை, கை, கால்கள் இல்லாத ஆண் சடலம் மீட்பு!
30 Dec,2023
செம்பரம்பாக்கம் ஏரியில் தலை, கை, கால்கள் இல்லாத ஆண் சடலம் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லியை அடுத்துள்ளது செம்பரம்பாக்கம் ஏரி. இது சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக ஏரி முழுவதும் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஏரியின் மற்றொரு பகுதி குன்றத்தூர் சிறு களத்தூரில் உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஏரிக்கரையில் இன்று காலை சிலர் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, நீரில் தலை, கை, கால்கள் இல்லாத சடலம் ஒன்று மிதந்து கரையை ஒட்டியுள்ள, சுவற்றின் ஓரம் வந்தது.
இதனைப் பார்த்து அதிர்ந்து போன அவர்கள் உடனடியாக குன்றத்தூர் காவல் துறைக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், தண்ணீரில் மிதந்த அந்த உடலை மீட்டனர். அந்த உடல் 30 வயது மதிக்கத்தக்க ஆணுடையதாக இருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த உடல் நீரில் மிதக்காமல் இருக்க, 2 கற்கள் வைத்து கட்டப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த உடல் பாகத்தை, குன்றத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு பாதி உடலைப் பார்த்த மருத்துவர்கள், அது தண்ணீரில் வீசப்பட்டு 4 நாட்கள் ஆகியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து. இந்த உடல் யாருடையது? அவர் அதே பகுதியை சேர்ந்தவரா? அல்லது வேறு எங்கேனும் கொலை செய்து உடலை இங்கு கொண்டு வந்து போட்டனரா என்ற கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.