கனடாவில் இந்து கோயில்களை உடைத்து திருட்டு: இந்திய வம்சாவளி நபர் கைது
30 Dec,2023
கனடாவின் துர்ஹாம் பிராந்தியம், கிரேட்டர் டொராண்டோ பகுதிகளில் உள்ள இந்து கோயில்களில் கடந்த சில மாதங்களாக கதவுகளை உடைத்து, திருட்டு சம்பவங்கள் நடந்தன. இந்த சம்பவம் குறித்து கனடா போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இந்திய வம்சாவளி நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து கனடாவின் துர்ஹாம் மண்டல போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், துர்ஹாம், கிரேட்டர் டொராண்டோ பகுதிகளில் இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டு, திருட்டு சம்பவங்கள் நடந்தன. கடந்த அக்டோபர் 8ம் தேதி அதிகாலை, பிக்கரிங், பெய்லி ஸ்ட்ரீட், க்ரோஸ்னோ புலிவார்டு பகுதியில் உள்ள ஒரு இந்து கோயிலில் நன்கொடை பெட்டியை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர் திருடி சென்றார்.
இதுதொடர்பான புகாரில் அங்கு சென்று விசாரணை நடத்தப்பட்டது. அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், இந்தோ-கனடிய நபரான பிராம்படன் நகரை சேர்ந்த ஜெகதீஷ் பாந்தர் (41) என்பவர் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிக்கரிங் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் உள்ள பல்வேறு இந்து கோயில்களில் ஜெகதீஷ் பாந்தர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.