மெக்சிகோ பிறந்தநாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு,6 பேர் பலி,26 பேர் காயம்
30 Dec,2023
மெக்சிகோவில் அதிகாலையில் நடைபெற்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர், 26 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள சோனோரா மாகாணத்தின் சிடெட் ஒபெகன் என்ற நகரத்தில் 15வயது சிறுமி ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக பலரும் கூடியிருந்தனர். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பலரும் உற்சாகமாக பார்ட்டியில் கலந்து கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் நிகழ்விடத்திலேயே பலியானார். 26 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மெக்சிகோவில் அதிகாலையில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு அந்நாட்டை அதிரவைத்துள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கடந்த 17ம் தேதி மெக்சிகோவில் நடந்த கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2006ம் ஆண்டு முதல் இதுவரை மெக்சிகோ நாட்டில் 4 லட்சத்து 20 ஆயிரம் பேர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தடுக்க மெக்சிகோவில் கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும் என பலதரப்பிலிருந்து அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.