303 இந்திய பயணிகளுடன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட விமானம்,பிரான்சில் இருந்து புறப்பட அனுமதி!
25 Dec,2023
.
மனிதக் கடத்தல் புகாரில் 303 இந்திய பயணிகளுடன், பிரான்சில் 4 நாள்களாக தடுத்து நிறுத்தப்பட்ட விமானம், இன்று அங்கிருந்து வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலிருந்து மத்திய அமெரிக்க நாடான நிகாரகுவாவுக்கு 303 இந்தியர்களுடன் 'ஏ-340’ என்ற விமானம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த விமானம் பிரான்சின் வட்ரி விமான நிலையத்தில் திடீரென தரையிறக்கப்பட்டது.
எரிபொருள் நிரப்புவதற்காக விமானம் தரையிறங்கியது என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் விமானத்தில் 11 சிறுவர்கள் பயணித்ததும், இந்த விமானத்தில் மனிதக் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் விமானம் பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளால் தரையிறக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளும் கீழே இறக்கப்பட்டு, விமான நிலைய வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் கடந்த 2 நாட்களாக தங்கவைக்கப்பட்டனர்.
அவர்களில் இருவரை பிரான்ஸ் போலீஸ் அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், இந்த விமானத்தில் பயணித்த அனைவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த பிரான்சில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் வட்ரி விமான நிலையம் சென்று விசாரணை நடத்தினர். மேலும், இந்தியர்களுக்கு தூதரக ரீதியிலான உதவிகளை அளித்தனர். இதற்கிடையே இந்த விமானத்தில் பயணித்த அனைவரும் நிகாரகுவா சென்று, அங்கிருந்து அமெரிக்கா, கனடாவுக்குள் சட்ட விரோதமாக நுழைய திட்டமிட்டனர் என்று சர்வதேச ஊடக தகவல் வெளியானது.
இந்த கண்ணோட்டத்திலும், விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இரண்டு நாள் தீவிர விசாரணைக்குப் பிறகு 303 இந்தியர்களுடன் தடுத்து வைக்கப்பட்ட விமானம் இன்று பிரான்சை விட்டு வெளியேறலாம் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், விமானம் நிகாரகுவா செல்லுமா அல்லது எங்கு சென்று தரையிறங்கும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால், பிரான்ஸ் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “தடை விலக்கப்பட்ட பிறகு 303 பயணிகளுடன் 'ஏ-340’ விமானம் இந்தியா சென்றடைய உள்ளது" என தெரிவித்தனர்.