தீர்த்தங்கரர் என்போர் சமண மதத்தை தழுவிய பெரியோர்கள் ஆவர்.
'தீர்த்த' என்ற சொல்லின் வாசகப் பொருள், ஆற்றைக் கடக்கும் துறை என்பதாகும். உருவகப் பொருளில் அது, இவ்வுலகில் தொடர்ந்து வரும் பிறவிக் கடலை கடப்பதற்கு துணை செய்யும் ஆன்மிக வழிகாட்டி அல்லது தத்துவத்தை குறிக்கிறது. 'கரர்' என்னும் சொல் 'செய்பவர்' என்று பொருள்படும். ஆக, 'தீர்த்தங்கரர்' என்ற முழுமையான சொல் ஜைன மதப் புனித குருவை குறிக்கும்.
இந்த தத்துவத்தின்படி, 'காலம் பல பருவங்களாக பிரிக்கப்பட்டுளளது. அந்த ஒவ்வொரு பருவத்திலும் அவ்வப்போது 24 தீர்த்தங்கரரர்கள் நீண்ட இடைவெளியில் புதுப்பித்த கொள்கைகளை போதிப்பார்கள்' என்பது சமண மதத்தவர்களின் நம்பிக்கை.
விருசப தேவர், அஜித்தநாதர், சம்பவநாதர், அபிநந்தனார், சுமதி நாதர், பதும நாபர், சுபார்சவ நாதர், சந்திரப் பிரபா, புஷ்ப தந்தா (சுவிதி நாதர்), சீதள நாதர், சீறியாம்ச நாதர், வாசு பூஜாயா, விமல நாதர், அநந்த நாதர் (அநந்தஜித் பட்டாரகர்), தருமநாதர், சாந்தி நாதர், குந்துநாதர் (குந்து பட்டாரகர்), அரநாதர், மல்லிநாதர், முனிசு வர்த்தர், நமிநாதர் (நமிபட்டாரகர்), நேமிநாதர் (அரிஷ்ட நேமி), பார்சுவ நாதர் மற்றும் வர்த்தமான மகாவீரர் ஆகிய சமண மத பெரியோர்களே இதுவரை தோன்றிய 24 தீர்த்தங்கரர்கள் ஆவர்.
சமண மதத்தில் இந்த 24 தீர்த்தங்கரர்களும் தெய்வங்களாக போற்றப்பட்டார்கள். இருந்த போதிலும் தெய்வங்களால் அருளப்படும் முத்தொழில்களாகிய ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகியவற்றில் இவர்கள் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. ஏனெனில், இவர்கள் தம்முடைய ஆன்மிக தன்மையின் அடிப்படையில் வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாதவர்களாக தன்னையே தான் அறிந்து வீடுபேறாகிய பேரின்ப நிலையில் இருப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றினார்கள்.
வீடுபேற்றை அடைவதற்குத் தடையாக இருந்த வினைகளை முற்றிலுமாக போக்கி உலக நன்மை ஒன்றையே விரும்பி இருந்தார்கள்.
கடவுளாய் வணங்கப்பட்ட தீர்த்தங்கரர்கள்
சமண மதத்தில் தோன்றிய எல்லா தீர்த்தங்கரர்களையும் சமணர்கள் தெய்வமாகவே போற்றி வணங்கினார்கள்.
தீர்த்தங்கரர்களின் துறவறத் தன்மையும் போதனைகளும் சமணர்கள் அவர்களை பெரிதும் மதிப்பதாகவே இருந்தது. தம்மை வணங்குபவர்களுக்கு அவர்கள் எதையும் தருவதோ அல்லது தவறுகள் செய்தோரை தண்டிப்பதோ இல்லை. பின் எதற்காக இவர்களை தெய்வங்களாக வணங்க வேண்டும் என்று மக்களில் ஒரு சாரார் கேட்கின்றனர்.
அதற்கான பதிலாக போதிக்கப்படுவது என்னவென்றால், தீர்த்தங்கரர்கள் சென்ற புனித பாதையில் அதாவது நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் இவற்றின் அடிப்படையில் வாழ வேண்டும் என்ற தூண்டுதலை பெறுவதற்குத் தானே தவிர வேறு எதற்காகவும் அல்ல என்பதுதான்.
உலகத்தில் நல்ல நெறிகளை கடைபிடித்து நல்ல விதமாக வாழ்ந்து அதன் பின்னர் தெய்வநிலை அடைவதற்காகவே சமணர்கள் தீர்த்தங்கரர்களை வணங்குகின்றார்கள்.
மேலும் மனிதப் பிறவியின் குறிக்கோளே மேலே சொல்லப்பட்ட நல்ஞானமும் நல்லொழுக்கமும்.
மேலும் அதுவே சமண மதத்தில் போற்றப்படுகின்ற மிக உன்னதமான பண்புகளாகும்.