ஓர் இந்து எப்படி அமெரிக்க அதிபராக இருக்க முடியும்?,விவேக் ராமசாமியின் ‘வைரல்’ பதில்
15 Dec,2023
.‘ஓர் இந்து எப்படி அமெரிக்க அதிபராக இருக்க முடியும்?’ என்ற கேள்விக்கு விவேக் ராமசாமி அளித்த பதில் வைரலாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வு தீவிரமடைந்து வருகிறது. குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் பதவிக்குப் போட்டியிடுபவர்களில் ஒருவரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பலரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, ''அமெரிக்காவை நிறுவியவர்களின் மதம் வேறு. உங்கள் மதம் வேறு. எனவே, நீங்கள் அமெரிக்க அதிபராக இருக்க முடியாது' என்று கூறுபவர்களுக்கு உங்கள் பதில் என்ன?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த விவேக் ராமசாமி, ''நான் ஓர் இந்து. நான் என் அடையாளத்தைப் போலியாகக் காட்ட மாட்டேன். இந்து மதமும் கிறிஸ்தவமும் ஒரேமாதரியான மதிப்பீடுகளைக் கொண்டிருக்கின்றன. எனது மத நம்பிக்கையின் அடிப்படையில், ஒவ்வொரு நபரும் ஒரு காரணத்துக்காக இங்கே இருக்கிறார்கள் என்பதும், அந்த காரணத்தை நிறைவேற்றுவது நமது தார்மிக கடமை என்பதும் எனது புரிதல். ஏனெனில், கடவுள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கிறார். நம் மூலம் பல்வேறு வழிகளில் அவர் செயல்படுகிறார். எனவே, நாம் அனைவரும் சமம்.
எனது வளர்ப்பு மிகவும் வழக்கமானது. திருமணங்கள் புனிதமானவை என்றும், குடும்பங்கள் சமுதாயத்தின் அடித்தளம் என்றும் எனது பெற்றோர்கள் எனக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள். திருமணத்துக்கு முன்பாக மதுப்பழக்கத்தை விட்டுவிடுவது சாத்தியமானது. தகாத உறவு தவறானது. வாழ்வின் இன்பங்களை அனுபவிக்க சிலவற்றை விட்டுக்கொடுக்க வேண்டும். இந்த மதிப்பீடுகள் மிகவும் முக்கியம் அல்லவா?
அமெரிக்காவின் மூலமாக கிறிஸ்தவத்தைப் பரப்ப நான் சிறந்த அதிபராக இருப்பேனா என்று கேட்டால், நிச்சயம் இருக்க மாட்டேன். அதற்கு நான் சரியான தேர்வு அல்ல. ஆனால், அமெரிக்கா நிறுவியுள்ள மதிப்பீடுகளை பேணிக்காக்க நான் உறுதியாக நிற்பேன்'' என்று தெரிவித்துள்ளார். 38 வயதாகும் விவேக் ராமசாமி, தென்மேற்கு ஓஹியோவைச் சேர்ந்தவர். இவரது தந்தையும், தாயும் கேரளாவில் இருந்து அமெரிக்கா சென்று குடியேறியவர்கள் என்பதும், விவேக் ராமசாமி தனக்கு தமிழ் தெரியும் என்று கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.