இலங்கைக்கு கடத்தப்பட்ட ஒரு இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் மீட்பு :
13 Dec,2023
இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை அடுத்த வேதாளை கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு செவ்வாய்க்கிழமை (12) கடத்த முயன்ற சுமார் ஒரு இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் இந்திய கடலோர காவல் படையினரால் நடுக்கடலில் சுற்றிவளைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இந்திய கடலோர காவல் படை வீரர்களை கண்டதும் படகில் இருந்தவர்கள் கடலில் குதித்து தப்பித் ததால் படகுடன் வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்து இந்திய காவல் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள் போதை மாத்திரைகளாக இலங்கையில் பயன்படுத்தப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் இதன் மொத்த இந்திய மதிப்பு சுமார் ரூ.8 இலட்சம் இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.