,
நடை, உடை, பாவனைகளில் மட்டுமல்ல. தூக்கத்திலும் கூட ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. வாயைத் திறந்தபடி தூங்குவது அவற்றில் ஒன்று.
அது ஸ்டைல் அல்ல,அதன் பின்னணியில் களைப்பு, உடல் நலக் குறைபாடு, சுவாசக் கோளாறு, கன்னம் மற்றும் தாடை அமைப்பில் பிரச்சினை என இதற்கு பலவிதமான காரணங்கள் இருக்கலாம்.
குழந்தைகளுக்கு மூக்கின் பின்புறம் மற்றும் தொண்டைக்கு மேலே Adenoids என்ற சதைப்பகுதி காணப்படும். தொடர்ந்து ஐஸ்க்ரீம், சொக்லேட் சாப்பிடுவது இந்த சதை வளர்வதற்கு முக்கிய காரணம். 6 வயது முதல் 8 வயதுக்குள் இந்த சதை பெரிதாகும். அந்த நேரத்தில் குழந்தைகள் வாயைத் திறந்து வைத்தவாறு தூங்குவார்கள். இதனால் மூக்கடைப்பு ஏற்பட்டு அவதிப்படுவார்கள்.
12 வயதை அடையும்போது, சதை தானாகவே கரைந்துவிடும். அப்படிக் கரையாமல் தொடரும்போது, மேல் பல் வரிசை சரியாக இருக்காது. எப்போதும் தூங்கிக்கொண்டு இருப்பார்கள். சோர்வாக காணப்படுவார்கள்.
மூக்கு மற்றும் கன்னங்களின் சதைப்பகுதி பெரிதாக வளரும். இந்த சதை பெரிதாக வளர்வதை மருந்து, மாத்திரைகளால் தடுக்க முடியாது. அறுவை சிகிச்சை தேவைப்படும். நடுத்தர வயதினருக்கு அலர்ஜி காரணமாக சளி, தும்மல், மூக்கில் நீர்க்கட்டி (Polyp) வரும். இந்தப் பிரச்சினைக்காக இவர்கள் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும். மூக்கில் சொட்டுமருந்து விட வேண்டும்.
சளி, தும்மல், நீர்க்கட்டி பிரச்சினை உள்ளவர்கள் வாய் திறந்த நிலையில் தூங்குவார்கள். இதனால், குறட்டை வெளிப்படும். கீழ்த்தாடை வளர்ச்சி குறைவாக இருக்கும்.
வாய் திறந்தவாறு தூங்குவதால் உயிருக்கு ஆபத்து கிடையாது. ஆனால், சரியாக தூங்க முடியாமல் எந்நேரமும் சோர்வாக இருப்பார்கள். இதயத்தின் வலது பக்கம் அழுத்தம் இருக்கும். நுரையீரலில் நீர்க்கட்டி வரும்.
இப்பாதிப்பு உள்ளவர்களை இரவு முழுவதும் தூங்கவைத்து, ஒட்சிசன் அளவு குறைகிறதா, மூளை நன்றாக இயங்குகிறதா, நுரையீரல் நன்றாக விரிகிறதா, இதயத்துடிப்பு நிற்கிறதா, எனக் கண்காணிக்க வேண்டும். ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும்.