உலகின் அரிதான வெள்ளை முதலை
09 Dec,2023
அமெரிக்காவின் புளோரிடா விலங்கு பூங்கா ஒன்றில், உலகின் மிகவும் அரிதான வெண்ணிற முதலை ஒன்றின் பிறப்பைக் கொண்டாடி இருக்கிறார்கள்.
உலகில் இருக்கும் வெறும் 8 வெண்ணிற முதலைகளில் இதுவும் ஒன்றாக தற்போது சேர்ந்திருப்பதால், சமூக ஊடகங்களில் இதன் பிறப்பை விலங்கு ஆர்வலர்கள் சிலாகித்து வருகின்றனர். நாமறிந்த முதலை இனத்தை சேர்ந்தவை என்ற போதும், அமெரிக்க அலிகேட்டர் ரக முதலைகளில் இருந்து இந்த வெண்ணிற ரகரங்கள் உருவெடுத்துள்ளன.
புளோரிடாவில் புகழ்பெற்ற கேட்டர்லேண்ட் ஆர்லாண்டோ முதலை பூங்கா உள்ளது. 36 ஆண்டுகளுக்கு முன்பு லூசியானாவில் இத்தகைய லூசிஸ்டிக் முதலைகள் அடையாளம் காணப்பட்ட பிறகு, அதன் முதல் குஞ்சு பொரிக்கும் விதம் தற்போதுதான் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கேட்டர்லேண்ட் ஆர்லாண்டோ பூங்கா, “அரிதானது; முற்றிலும் அசாதாரணமானது மற்றும் உலகில் இதுவே முதலானதும் கூட" என்று வர்ணித்துள்ளது.
உலகளவில் ஏழு லூசிஸ்டிக் முதலைகள் மட்டுமே எஞ்சியிருந்தன. அவற்றில் மூன்று கேட்டர்லாண்ட் பூங்காவில் உள்ளன. லூசிஸ்டிக் முதலைகள் மிகவும் அரிதான மரபணு மாறுபாடு கொண்டவை. இந்த முதலைகள் நீல நிற கண்களைக் கொண்டுள்ளன. தேகத்தில் வெள்ளை நிறம் காரணமாக சூரிய ஒளிக்கு அவை அஞ்சுகின்றன. சூரிய ஒளி அதன் உடலை பாதிக்கவும் செய்யும்.
இரு தினங்களுக்கு முன்னர் எட்டாவதாக சேர்ந்த புதிய வெண் முதலையின் பிறப்பு, மிகவும் அரிதான அதன் இனத்தை பாதுகாப்பதற்கான அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு முயற்சிகளுக்கு வாய்ப்புகளை வழங்கி உள்ளது. புதிதாகப் பிறந்த வெள்ளை முதலையை புத்தாண்டில் பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்த கேட்டர்லேண்ட் ஆர்லாண்டோ திட்டமிட்டுள்ளது. இயற்கையின் விலைமதிப்பற்ற அற்புதத்தைக் காண வாருங்கள் என இப்போதே பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் ஆரம்பித்துள்ளது.