இன்றைய காலகட்டத்தில் எம்மில் பலரும் தங்களது கைகளில் ஆறாவது விரலாக செல்போன்களை வைத்திருப்பதாலும், சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துவதாலும், சிறிய தவறு செய்தவர்களை கூட அல்லது பொதுவெளியில் தவறான வார்த்தைகளை உச்சரித்தவர்களை கூட நீங்கள் கடுமையாக விமர்சித்து, சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு, லைக்குகளை வாங்கலாம்.
ஆனால் விமர்சனம் என்பது இரண்டு பக்கமும் கூராக உள்ள கத்தி என்பதனை உணர்ந்து கொண்டு விமர்சனத்தை தொடர வேண்டும். ஏனெனில், நீங்கள் முன்வைக்கும் கடும் விமர்சனம் உங்களுடைய பாவக் கணக்குகளில் பதிவு செய்யப்பட்டு கர்ம வினையாக மாற்றம் பெறக்கூடும்.
மேலும் இன்றைய சூழலில் எம்மில் பலருக்கு திடீரென்று நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் இழப்பு ஏற்படும். அவை அகாலமானதாகவும் இருக்கக்கூடும். அவற்றை உங்களால் ஏற்றுக் கொள்ளவே இயலாது. இந்த இழப்பு ஏற்பட்ட சிறிது நாளில் உங்களுடைய நெருங்கிய நட்புகளில் ஒருவருக்கு விபத்து ஏற்படக்கூடும். உயிரிழப்பு, விபத்து போன்றவை தொடர்ந்து அடுத்தடுத்து ஏற்பட்டால்... உங்களது கர்ம வினைகளின் கடுமையான பலன்களை நீங்கள் அனுபவிக்கிறீர்கள் என பொருள்.
உடனே எம்மில் சிலர் இதிலிருந்து விடுதலை பெற பரிகாரம் இல்லையா என எளிதாக கேட்பர். பரிகாரம் உண்டு. ஆனால் உங்களது கர்ம வினைகள் குறைய வேண்டும் என்ற அசலான அக்கறை மனதில் எழ வேண்டும். இறை மீது நம்பிக்கை கொண்டு சோதிட நிபுணர் ஒருவரின் வழிகாட்டலுடன் கர்மவினைக்கான பரிகாரத்தை தொடங்கிட வேண்டும்.
கர்ம வினைகளை நீங்குவதற்கு தமிழகத்தின் கோயில் நகரம் என்று அழைக்கப்படும் மதுரை அருகே உள்ள சோழ வந்தான் எனும் பகுதியிலிருந்து எட்டு கிலோ மீற்றர் தொலைவில் அமைய பெற்றிருக்கும் குருவித்துறை சித்திர இரத வல்லப பெருமான் ஆலயத்துக்கு செல்ல வேண்டும்.
இந்த ஆலயத்துக்கு நீங்கள் உங்களுடைய ஜாதகத்தை சாதாரண ஒரு மஞ்சள் பையில் வைத்துக்கொண்டு, அதனுடன் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சந்தன குச்சியை அதனுடன் வைத்து விடுங்கள். இந்தப் பையை நீங்கள் உங்களது கைகளில் வைத்துக்கொண்டு, இந்த ஆலயத்துக்குள், 21 முறை அடி பிரதட்சணம் செய்து வலம் வந்து பெருமானை வணங்கினால் உங்களுடைய கர்ம வினை அகலும்.
மேலும் இந்த பரிகாரத்தை சனிக்கிழமை அல்லது வியாழக்கிழமைகளில் மேற்கொள்வது நல்லது.
வ்யாதீபாதம், வைதிருதி போன்ற சில நாம யோகங்களில் பிறந்தவர்களுக்கு விபத்து, துர்மரணம், அகால மரணம் போன்றவை தொடர்ந்து ஏற்படக்கூடும். அவர்களும் இந்த ஆலய பரிகாரத்தை மேற்கொள்வது நல்லதொரு பலனை அளிக்கும்.
ஆலய வழிபாட்டு பரிகாரத்தை மேற்கொள்ள இயலாதவர்கள் அல்லது விரும்பாதவர்கள், புரட்டாசி மாதங்களில் வரும் மஹாளய பட்ச தினங்களுக்குள் கடல், ஆறு, நீர்வீழ்ச்சி, குளம், நீரூற்று அதாவது தொட்டி போன்ற ஐந்து நீர் நிலைகளில் நீராடினால்.. கர்ம வினைகள் குறையும். வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். இவற்றில் ராமேஸ்வரத்தில் கடல், குளம், நீரூற்று ஆகியவை இருக்கிறது. அருகில் ஆறு மற்றும் நீர்வீழ்ச்சி இருக்கிறது. இதனை குறிப்பிட்ட தினங்களுக்குள் சென்று நீராடினால் கர்ம வினைகள் குறையும்.