வட கொரியாவில் இருந்த கிம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சாத்தியமற்றதாகக் கருதப்படும் ஒரு விஷயத்தை செய்தார். அவர் தனது குடும்பத்துடன் கடல் வழியாக வட கொரியாவை விட்டுத் தப்பி ஓடினார்.
தனது கர்ப்பிணி மனைவி, தாய், சகோதரரின் குடும்பத்தினர் மற்றும் தனது தந்தையின் சாம்பல் அடங்கிய கலசம் ஆகியவற்றோடு அவர் இந்தப் பயணத்தை ஆரம்பித்தார்.
இந்த ஆண்டில் நாட்டைவிட்டு வெளியேறி தென் கொரியாவிற்கு வந்த முதல் நபர்கள் இவர்களே. கோவிட் பேரிடர் தாக்கியபோது, வட கொரியாவின் அரசாங்கம் பீதியடைந்து உலகின் பிற பகுதிகளோடு தங்களது நாட்டிற்கு இருந்த தொடர்புகளைத் துண்டித்தது. அதன் எல்லைகளை மூடியது மற்றும் வர்த்தகத்தை துண்டித்தது.
ஒரு காலத்தில் அடிக்கடி மக்கள் நாட்டை விட்டு தப்பி ஓடும் சம்பவங்கள், இந்தத் துண்டிப்பிற்குப் பிறகு முற்றிலுமாக நின்றது.
கிம் பேசுகையில் வடகொரியாவில் மக்கள் பட்டினியால் இறக்கும் சம்பவங்கள் மற்றும் அடக்குமுறை அதிகரிப்பது உள்ளிட்ட புதிய விவரங்களை அவர் தெரிவித்தார். அவர் தனது முழு பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், சியோலில் உள்ள தனது குடும்பத்தைப் பாதுகாக்கவும் எங்களிடம் கேட்டுக் கொண்டார்.
கிம்மின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் சரிபார்க்க முடியவில்லை. ஆனால் பெரும்பாலான விவரங்கள் மற்ற ஆதாரங்கள் மூலம் நாம் இதற்கு முன்பு கூறியவற்றுடன் ஒத்துப்போகின்றன.
கிம் மற்றும் அவரது சகோதரர் தப்பிக்க முயன்ற அந்த இரவில் பலத்த புயல் காற்று வீசி கடல் கொந்தளிப்பாக இருந்தது. கடல் சீற்றத்தோடு இருக்கும்போது கடலோர காவல் படையினரால் கரையில் இருந்து வெகு தூரம் வர முடியாது என்பது கிம்முக்கு தெரியும். இப்படிப்பட்ட ஒரு இரவுக்காகத்தான் கிம் பல ஆண்டுகள் காத்திருந்தார்.
கிம்மின் சகோதரர் குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை வழங்கப்பட்டு அவர்கள் தூங்க வைக்கப்பட்டனர். அவர்கள் வேறொரு படகு ரகசியமாக நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு காவலர்களின் தேடுதல் விளக்குகளில் இருந்து தப்பிக்க கவனமாகச் சென்றனர்.
அவர்கள் படகை அடைந்ததும், பழைய அரிசி சாக்குகளுக்குள் குழந்தைகளை மறைத்து சாக்கு மூட்டைகளைப் போல ஓரமாக வைத்தனர். அதனுடன், தென் கொரியாவுக்கான அவர்களது பயணம் தொடங்கியது.
கிம்மும், அவரது சகோதரரும் கையில் ஆளுக்கொரு வாளை எடுத்துக் கொண்டனர். பெண்கள் தங்களது கைகளில் முட்டையில் ஓட்டை போட்டு அதில் மிளகாய் தூள் மற்றும் கருப்பு மணலை நிரப்பி கடலோர காவல் படையை எதிர்கொண்டால் அவர்களைத் தாக்கத் தயாராக இருந்தனர்.
கிம்மை தென் கொரியாவின் தலைநகர் சியோலில் காவல்துறையின் பாதுகாப்பில் அவர் இருந்தபோது சந்தித்தோம். வட கொரியாவில் இருந்து தென் கொரியாவிற்கு தப்பி வருபவர்களுக்கான முகாமில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டு சில வாரங்கள்தான் ஆகியிருந்தது.
வட கொரியாவில் இருந்த நிலைமை குறித்து அவர் கூறுகையில், "கொரோனா தொற்றில் ஆரம்ப காலகட்டத்தில் மக்கள் மிகவும் பயத்தில் இருந்தனர். வடகொரியாவில் கோவிட் விதிகள் மிகவும் கடுமையாக இருந்தன. யாராவது விதியை மீறியதாகத் தெரிய வந்தால் காவல்துறையினர் அந்த கிராமத்தையே தனிமைப்படுத்துவார்கள். அங்கிருக்கும் மக்களால் வெளியே செல்ல முடியாது. முக்கியமாக அவர்களுக்கு உணவும் வழங்கப்படாது," என அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "உணவில்லாமல் மக்கள் சிறிது காலம் பட்டினியால் அவதிப்பட்ட பின்பு, அரசு லாரியில் உணவு விநியோகம் செய்யும். அந்த உணவின் விலை குறைவாக இருப்பதால் மக்கள் அரசைப் பாராட்ட வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்," என்று கிம் கூறினார்.
கொரோனாவின் தாக்கம் குறைந்த பின்பும் நீண்ட காலத்திற்கு இதே நிலைமை நீடித்தது என்றும் இது மக்களை ஒடுக்குவதற்கான ஒரு வழிமுறையா என மக்களுக்கு சந்தேகம் எழத் தொடங்கியது என்றும் கிம் கூறினார்.
மேலும், பட்டினியால் நிறைய பேர் இறந்துபோனதாகவும் கிம் கூறுகிறார். கடந்த பிப்ரவரி மாதம் ஒரு வயதான தம்பதியை கொலை செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆனால், விசாரணையில் அவர்கள் பசியில் இறந்ததாகவும் அவர்களின் உடல்களை எலிகள் கடித்திருந்ததாகவும் தெரிய வந்ததாக கிம் தெரிவித்தார்.
இதுதவிர தென் கொரியாவிற்கு ஆதரவாகச் செயல்படுவதாகத் தெரிய வந்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை வடகொரிய அரசு 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொண்டு வந்தது.
இந்தக் காரணங்களால் மிகவும் வேதனைக்குள்ளான கிம், வட கொரியாவை விட்டு தப்பிக்க முடிவெடுத்ததாகக் கூறுகிறார்.
முதலில், கடலுக்குள் செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி தேவைப்பட்டது. அருகிலுள்ள ராணுவ தளத்தைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டுள்ளார்கள். அங்கு பொதுமக்கள் மீன் பிடிக்க அனுப்பப்பட்டனர். பின்னர் அவை ராணுவ உபகரணங்கள் வாங்குவதற்காக விற்கப்படும். கிம்மின் சகோதரர் இந்தத் திட்டத்தில் சேர்ந்தார்.
இதற்கிடையில், கிம் அப்பகுதியில் ரோந்து சென்ற கடலோரக் காவலர்கள் மற்றும் பாதுகாவலர்களுடன் நட்பாகத் பழகத் தொடங்கினார். அவர்களின் இயக்கங்கள், நெறிமுறைகள் மற்றும் ஷிஃப்ட் முறைகள் பற்றிய தகவல்களை ரகசியமாகச் சேகரித்தார். இதன்மூலம் அவரும் அவரது சகோதரரும் இரவில் எப்போது படகை எடுத்துச் செல்ல முடியும் என்று அவர் முடிவு செய்தார்.
பின்னர்தான் அவருக்கு இருந்த மற்றொரு கடினமான பணி நினைவிற்கு வந்தது. வயதான தாயையும் மனைவியையும் தன்னுடன் சேரும்படி சமாதானப்படுத்துவது. இருவரும் வெளியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில் சகோதரர்கள் தங்கள் தாயை சம்மதிக்கச் செய்தனர்.
"எங்கள் தாய் கலக்கமடைந்து நிறைய அழுதார். ஆனால் இறுதியாக ஒப்புக்கொண்டார்" என்று கிம் கூறினார்.
அவர்கள் தப்பித்த பிறகு அதிகாரிகள் தங்கள் தந்தையின் கல்லறையை இழிவுபடுத்துவார்கள் என்று பயந்து கிம் மற்றும் அவரது சகோதரர் அவரது உடலைத் தோண்டி எடுத்தனர். பிறகு தோண்டிய இடத்தை மூடிவிட்டு, அவர்களது தந்தையின் உடலை ஒதுக்குப்புறமாகக் கொண்டு சென்று எரித்து சாம்பலை எடுத்துக்கொண்டனர்.
அவர்கள் பின்னர் இருட்டில் கடக்க வேண்டிய கண்ணி வெடிகள் நிறைந்த இடத்தை ஆய்வு செய்தனர். அவர்கள் மருத்துவ மூலிகைகளை எடுப்பது போல் பாசாங்கு செய்து, அதன் வழியாக தெளிவான பாதையை வரைந்தனர். மக்கள் வெளியேறுவதைத் தடுக்க கடற்கரையோரத்தில் சமீபத்தில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டன. ஆனால் அங்கு குறைவான காவலர்கள் இருப்பதால், அது பாதுகாப்பான வழியாக இருந்ததாக கிம் கூறினார்.
மே 6ஆம் தேதி இரவு 10 மணிக்கு அவர்கள் படகில் பயணம் செய்தனர். அவர்கள் அனுமதிக்கப்பட்ட தூரம் வரை பயணம் செய்தவர்கள், அங்கிருந்து தொடர்ந்து சென்றனர். குறைந்த அலைகள் பாறைகள் மற்றும் கற்பாறைகளை வெளிப்படுத்தியிருந்தன.
அது பாதுகாப்பானது என்பதை உணர்ந்தவுடன், அவர்கள் நீரோட்டங்களின் பாதையில் முழு வேகத்தில் சென்றனர். ஒரு கப்பல் பின்தொடர்வதை கிம் பார்த்தார். ஆனால் அது அவர்களைப் பிடிக்க முடியவில்லை. சில நிமிடங்களில் அவர்கள் கடல் எல்லையைத் தாண்டினர்.
"அந்த நேரத்தில், பதற்றத்தின் உச்சியில் இருந்தேன். நான் இடிந்து விழுவது போல் உணர்ந்தேன்," என்று கிம் கூறினார். தென் கொரியாவின் யோன்பியோங் தீவை நெருங்கியபோது அவர்கள் டார்ச் லைட்டுகளை கரையை நோக்கி அடித்தனர். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு கடற்படையால் மீட்கப்பட்டனர்.
எல்லாம் திட்டமிட்டபடியே நடந்தன. "பருவ நிலை எங்களுக்கு உதவியது போல் இருந்தது," என்று அவர் கூறினார்.
'கடல் மூலமாக வட கொரியாவை விட்டு தப்பிப்பது மிகவும் அரிது'
கிம் தப்பித்த சம்பவம் அரிதானது என்பதற்குப் பல காரணங்கள் உள்ளதாக வட கொரியாவில் உள்ள லிபர்ட்டியைச் சேர்ந்த சொகீல் பார்க் கூறினார். அவர் கூறுகையில்,"கடல் வழியாக தப்பிக்க துல்லியமான திட்டமிடல், நம்ப முடியாத தைரியமும் வேண்டும். பல வருடங்களாக பல வட கொரியர்கள் கடல் வழியாக தப்பிக்க முயன்றனர். ஆனால் யாரும் வெற்றி பெறவில்லை," என அவர் கூறினார்.
வட கொரியாவை விட்டு சீனா வழியாக தப்பிக்க நினைப்பவர்களுக்கு உதவுபவரான ஸ்டீபன் கிம் கூறுகையில், "பணக்காரர்கள் மற்றும் வலிமையான தொடர்புகள் இருப்பவர்களால் மட்டுமே வடகொரியாவை விட்டு தப்பிக்க முடியும். கொரோனாவிற்கு முன்பு வருடத்திற்கு வட கொரியாவில் இருந்து 1000 பேர் சீனாவிற்கு தப்பிச் செல்வார்கள். ஆனால், கொரோனாவிற்கு பின்பு கடந்த நான்கு ஆண்டுகளில் 20 பேர் மட்டுமே தப்பித்தனர்," எனக் கூறினார்.
வட கொரியா தற்போது சீனா மற்றும் ரஷ்யாவுடனான தனது உறவுகளை ஆழப்படுத்துகிறது. அதே நேரத்தில் மேற்கு நாடுகளுடனான வட கொரியாவின் உறவு மோசமாக உள்ளது. இந்த நிலைமையால் மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காண்பது சர்வதேச சமூகத்திற்கு மிகவும் கடினமாகிவிட்டது.
கிம்மின் குடும்பத்தினர் மீட்கப்பட்ட பிறகு, அவர்கள் வட கொரிய உளவாளிகள் அல்ல என்பதை தென் கொரியாவின் உளவுத்துறையிடம் விளக்க வேண்டும். பின்னர் அவர்கள் மீள்குடியேற்ற மையத்தில் தென் கொரியாவில் வாழ்வது பற்றிக் கற்பிக்கப்பட்டனர்.
கிம்மின் குடும்பம் அக்டோபர் மாதம் மீள்குடியேற்ற மையத்தில் இருந்து ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறியது. அவரது மனைவிக்கு குழந்தையும் பிறந்தது. கிம்மின் தனது மனைவிக்கு தென் கொரியாவின் சப்வேக்களை பயன்படுத்தத் தெரியவில்லை என்றும் அதனால் அவர் வழி தவறித் தொலைந்து போயிருக்கிறார். இது அவரது மனைவியின் தன்னம்பிக்கையைக் குறைக்கிறது என அவர் கூறினார். ஆனால் கிம்முக்கு தென் கொரியாவில் வாழ்வது கடினமாக இல்லை.
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, அவர் ஆர்வத்துடன் எங்கள் பக்கத்தில் இருந்த மேசையிலிருந்து எனது ஏர்போட்ஸ் பெட்டியை எடுத்து, அதைத் தன் கையில் திருப்பினார். அது வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் என நான் கூறியபோது அவர் நம்பவில்லை. நான் அதை என் காதுகளில் வைத்த பிறகுதான் அவர் முகத்தில் ஒரு புரிதல் அலை வீசியது, அவர் சிரித்தார்.
இதுபோன்ற பல ஆச்சரியங்கள் மற்றும் சவால்கள் அவர்களுக்கு காத்திருக்கிறது. இது அவற்றின் தொடக்கம் மட்டுமே.