ஏடிஎம் கார்டுகளைத் திருடி பல லட்ச ரூபாய் மோசடி: இருவர் கைது!
07 Dec,2023
புதுக்கோட்டையில் ஏடிஎம்மில் பணம் எடுப்பவர்களுக்கு உதவிடுவது போல் நடித்து, ஏடிஎம் கார்டுகளைத் திருடி பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் கடந்த மாதம் 7-ம் தேதி கீழச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் சக்திவேல் என்பவர் தனது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுப்பதற்காக நின்றுள்ளார். அப்போது அங்கு வந்த இரண்டு நபர்கள், சக்திவேலின் கவனத்தை திசை திருப்பி அவரது ஏடிஎம் கார்டை நூதன முறையில் திருடி சென்றுள்ளனர்.
பின்பு அவர்கள் ஆவுடையார் கோயில் பகுதிக்குச் சென்று அங்குள்ள ஏடிஎம் மையத்தில் சக்திவேலின் ஏடிஎம் கார்டு பயன்படுத்தி 98 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சக்திவேல், இதுகுறித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த போலீஸார், வேலூர் மாவட்டம், கோனார் வட்டம் பகுதியைச் சேர்ந்த முதர்சீர் (38) மற்றும் திண்டுக்கல் மாவட்டம், புகையிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அபேல் (32) ஆகிய இருவரையும் இன்று கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ஏராளமான ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருவரிடமும் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஏடிஎம் மையத்திற்கு வரும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை குறிவைத்து, அவர்களுக்கு உதவுவது போல் நடித்து, அவர்களின் ஏடிஎம் கார்டுகளைப் பறித்து சென்று, பின்னர் கார்டில் இருந்து பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், பின்னர் சிறையில் அடைத்தனர்.