மசாடா யூதர்களின் விடுதலை சின்னம்,இந்தக் கோட்டை,

05 Dec,2023
 

 
நாங்கள் கடைசியாக இஸ்ரேலில் பார்த்த இடம் மசாடா (Masada). இங்கு போவதற்குச் சொந்தமாக டாக்சி வைத்திருக்கும் ஒரு பயண வழிகாட்டி கிடைத்தார். பிழைப்புக்காக இவர் இந்தத் தொழிலைச் செய்யவில்லை. கொஞ்சம் வருமானம் வருகிறது என்பதோடு ஏதாவது செய்துகொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவும் இதைச் செய்து வருகிறார். அமெரிக்காவில் எங்கள் யூத நண்பர் ஒருவரின் நண்பர் மூலம் இவருடைய முகவரி கிடைத்தது.
 
இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டதும் உலகின் பல நாடுகளிலிருந்தும் யூதர்கள் இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்தனர். எங்கள் நண்பரின் நண்பரும் அவர் மனைவியும் இப்படி இஸ்ரேலுக்கு அமெரிக்காவிலிருந்து வந்தவர்கள். இவர் மனைவி ஹீப்ரு பல்கலைக் கழகத்தில் வேலைபார்க்கிறார்.
 
இவர்களிடமிருந்து பயண வழிகாட்டியின் முகவரியைப் பெற்றுக்கொண்டதும் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். மிகவும் வெக்கையான இடம், நிறையத் தண்ணீர் கொண்டுவாருங்கள், உடன் தலையை நன்றாக மூடிக்கொள்ள ஒரு தொப்பியையும் கொண்டுவாருங்கள் என்று முதலிலேயே எங்களை எச்சரித்தார்.
 
சென்னை வெயிலுக்குப் பழகிப் போயிருந்த எங்களுக்கு அப்படி என்ன வெயில் இருந்துவிடப் போகிறது என்று நினைத்தோம். அங்கு காரில் போகும்போதும் அந்த இடத்தை அடைந்த பிறகும் இருந்த வெக்கையைப் பார்த்த பிறகுதான் அவர் சொன்னது எவ்வளவு சரி என்று தோன்றியது.
 
வழி நெடுக பாலைவனப் பிரதேச மணல் குன்றுகளும் ஆங்காங்கே பேரீச்சம்பழத் தோட்டங்களும் இருக்கின்றன. ஜெருசலேம் நகரிலிருந்து 30 மைல் தொலைவில் இருக்கும் மசாடாவிற்குச் செல்லும் சாலை நேர்த்தியாக இருக்கிறது. வழியில் எந்த விதமான கட்டடங்களும் இல்லை. ஒரே மணல் காடாகக் காட்சியளிக்கிறது.
 
பாலஸ்தீனம் முழுவதும் சிறிய குன்றுகளும் சமவெளிகளும் நிறைந்து காணப்படுகிறது. அதற்கு மேல் பாலைவனப் பிரதேசம் மிகுதியாக இருக்கிறது. மத்திய தரைக் கடலை நோக்கிச் செல்லும்போதுதான் சமவெளிப் பிரதேசம் இருக்கிறது. மசாடா, இஸ்ரேலின் தென்கிழக்குக் கோடியில் உள்ள ஜுடாயா (Judean) பாலைவனப் பகுதியில் இருக்கிறது.
 
இதற்குப் பக்கத்தில் இருக்கும் உயிரற்ற கடலின் (Dead Sea, இதற்கு ‘சாக்கடல்’ என்றும் பெயர்) மட்டத்திலிருந்து மசாடா 1,300 அடி உயரத்தில் இருக்கிறது. இதை ஊர் என்பதை விட பெரிய குன்றின் மேல் உள்ள சமதளப் பகுதியில் கட்டப்பட்ட, மதில் சுவரால் சூழப்பட்ட அரண் என்று கூறலாம்.
 
இதற்குள் மூன்று அரண்மனைகள், யூதர்களின் கோயிலான சினகாக் ஒன்று, பல வீடுகள், சிப்பாய்களின் குடியிருப்புகள், தானியக் கிடங்குகள், தண்ணீரைச் சேமித்து வைக்கப் பெரிய தொட்டிகள், பொது மற்றும் தனிப்பட்டவர்களின் குளியல் அறைகள் என்று அக்காலத்திய பொறியியல் விநோதங்கள் பல இருக்கின்றன.
 
 
 
மசாடா 2001-இல் ஐ.நா.வின் உலகப் பாரம்பரிய இடங்களில் (UN World Heritage Sites) ஒன்றாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. மசாடா என்றால் ஹீப்ரு மொழியில் கோட்டை என்று அர்த்தமாம். இது கி.மு. இரண்டாம், முதலாம் நூற்றாண்டுகளிலேயே கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
 
கி.மு. 42 – 4 வரை யூத மன்னனாக விளங்கிய ஹெராட் (Herod) (இவன் ரோமானிய அரசர்களின் ஆளுகைக்குக் கீழ் இருந்தவன்) ஒரு வேளை தன் பதவிக்குப் பங்கம் வந்தால் தான் அதில் தங்கிக்கொண்டு மறுபடி ஆட்சியைப் பிடிக்க ஏதுவாக இதை விரிவுபடுத்திக் கட்டினானாம். ஆனால் அதை உபயோகிக்கும் தேவை ஹெராட் மன்னனுக்கு ஏற்படவில்லை.
 
ஹெராட் இறந்ததும் மசாடா ரோமானியர்களின் வசம் சிக்கியது. கி.பி. 66-இல் யூதர்கள் ரோமானியர்களை எதிர்த்துப் போராடி மறுபடி இதைத் தங்கள் வசமாக்கிக்கொண்டனர். ஆனால் கி.பி. 70-இல் தங்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த யூதர்களை ரோமானிய அரசன் நசுக்கி ஜெருசலேமில் இருந்த அவர்களின் இரண்டாவது கோவிலையும் இடித்துத் தரைமட்டமாக்கினான். (அதன் வெளிச் சுவர் ஒன்று மட்டும் இப்போது இருக்கிறது. இது இஸ்ரேலியர்களின் புனித இடங்களில் முதல் இடத்தைப் பெற்றிருக்கிறது.)
 
ஜெருசலேமை இழந்த பிறகு பல யூதர்களுக்கு பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் ரோமானியர்களை எதிர்த்தே தீருவது என்று முடிவுசெய்து 960 யூதர்கள் மட்டும் – இவர்களுடைய குடும்ப அங்கத்தினர்களும் சேர்ந்து – ரோமானியர்களிடமிருந்து தப்பிக்கத் தங்கள் வசமிருந்த மசாடாவிற்குப் போய்த் தங்கினர். அங்கு இரண்டு வருடங்கள் தங்கி ரோமானியர்களிடமிருந்து தங்களைக் காத்துக்கொண்டனர்.
 
கி.பி. 73-இல் ஃப்ளேவியஸ் சில்வா (Flavius Silva) என்னும் ரோமானிய படைத் தளபதி மசாடாவை முற்றுகையிட்டான். மலையின் அடிவாரத்தில் 10,000 ஆட்களைக் கொண்ட படையைத் தங்கச் செய்து மலைக்கு மேல் செல்வதற்கு படிகளைக் கொண்ட சாய்தளத்தைக் (ramp) கட்டினான்.
 
இந்தப் படை கோட்டையைச் சூழ்ந்துகொண்டு கோட்டைக்குள் இருப்பவர்கள் தப்பிக்க முடியாமல் செய்தது. கடைசியாகச் சுவர்களைத் தகர்க்கும் இயந்திரங்களை இந்தச் சாய்தளம் மூலம் மேலே கொண்டுசென்று கோட்டையை ரோமானியப் படை தகர்த்தது.
 
இனி மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்பதை அறிந்த யூதர்கள் ரோமானியர்களிடம் சிக்குவதற்குப் பதிலாக உயிரை இழப்பதே மேல் என்று முடிவுசெய்து எல்லோரும் இறந்துவிடுவது என்று முடிவுசெய்தார்களாம். யார் யாரைக் கொல்ல வேண்டும் என்று சீட்டுப்போட்டு எடுத்தார்களாம். முதலில் பத்துப் பேர் மற்றவர்களைக் கொல்ல வேண்டும் என்றும் பின் அந்தப் பத்துப் பேரை யார் கொல்ல வேண்டும் என்றும் முடிவுசெய்தார்களாம். இதற்குரிய சான்றுகளை இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். இரண்டு பெண்களும் மூன்று குழந்தைகளும் எப்படியோ தப்பித்தார்களாம். மசாடா கோட்டைதான் பாலஸ்தீனத்தில் யூதர்களின் கடைசி இடமாக விளங்கியது.
 
மசாடா ஒரு செங்குத்தான குன்று. இதன் மேல்தளம் சமதளமாக இருக்கிறது. அதன் விஸ்தீரணம் இருபது ஏக்கர். இந்தக் கோட்டைக்கு இரண்டு சுற்றுச் சுவர்கள் உண்டு. வெளிச்சுவரின் நீளம் 1,400 மீட்டர். இதற்கு இணையாக இதற்கு உள்புறம் இன்னொரு சுவர் இருக்கிறது. இவை இரண்டும் எளிதில் தகர்க்க முடியாதவை. வெளிச் சுவரின் அகலம் 1.5 மீட்டர்; உயரம் நான்கு முதல் ஐந்து மீட்டர். உள்சுவரின் அகலம் ஒரு மீட்டர். இரண்டு சுவர்களுக்கும் இடையேயுள்ள நான்கு மீட்டர் இடம் 110 அறைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறைகளுக்குள்ளே நுழைய வடக்குப் புறமாக வாசல் அமைக்கப்ப்பட்டிருக்கிறது.
 
மசாடா முழுவதும் கற்களால் கட்டப்பட்டிருப்பதாலும் இங்குள்ள சீதோஷ்ணநிலை மிகவும் ஈரச்சத்தில்லாமல் வெப்பமாக இருப்பதாலும் பல நூற்றாண்டுகளாக இவை அப்படியே பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. வெளிச்சுவரில் 37 கோபுரங்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் இடையே 35-90 மீட்டர் இடைவெளி இருக்கிறது. இந்தக் கோபுரங்களில் ஏறுவதற்கு உள்ளேயே படிகள் கொண்ட சாய்தளம் இருக்கிறது.
 
இரண்டு சுவர்களுக்கும் இடையே உள்ள அறைகளின் மேலே கூரை வேயப்பட்டிருக்கிறது. இந்தக் கூரைகள் மரக்கட்டைகளாலும் அவற்றிற்கு குறுக்கே செங்கோணத்தில் (right angle) அமைக்கப்பட்டிருக்கும் நாணல்களாலும் கட்டப்பட்டிருக்கின்றன. இதற்கு மேலே பின்னப்பட்ட பாய்களை வைத்துக் கூரையை மூடியிருக்கிறார்கள். இந்தக் கூரைகள் மிகவும் பலமாக இருந்ததால் வீரர்கள் இதன் மீது நடக்கவும் கனமான பொருட்களை வைத்துக்கொள்ளவும் வசதியாக இருந்திருக்க வேண்டும்.
 
மலை மீது ஏறிவந்த எதிரிகளின் மீது வீரர்கள் எறிந்த கற்கள் இடிபாடுகளுக்கிடையே கிடைத்திருக்கின்றன. சுவர்களுக்கு இடையே இருந்த அறைகள் வீரர்கள் தங்கிகொள்வதற்காகக் கட்டப்பட்டவை. ஆனால் ஹெராட் காலத்தில் இந்த அறைகளில் யாரும் தங்கியிருக்கவில்லை. ரோமானியரை எதிர்த்துப் போராடிய யூதர்கள் காலத்தில் அவர்கள் இந்த அறைகளில் தங்கியிருந்திருக்க வேண்டும். அவர்கள் உபயோகித்த அடுப்புகள், பாத்திரங்கள் இன்னும் இருக்கின்றன.
 
அரணிற்கு உள்ளே மூன்று அரண்மனைகள் இருக்கின்றன. அரண்மனைகளுக்கு அருகே உள்ள வீடுகள் எல்லாவற்றிலும் கிட்டத்தட்ட ஒரே அமைப்பில் கட்டப்பட்டிருக்கின்றன. முதலில் ஒரு அறை, பின் முற்றம், அதற்குப் பின் அறைகள் இருக்கின்றன. இவற்றின் சுவர்களில் சுவர்ச் சித்திரங்கள் காணப்படுகின்றன.
 
தொல்பொருள் ஆராய்ச்சிக்குப் பிறகு அவற்றை மூடியிருந்த மண் அகற்றப்பட்டதால் சில சித்திரங்கள் மங்க ஆரம்பித்தனவாம். அவற்றை ஜெருசலேமிற்கு எடுத்துச் சென்று புதுப்பித்து மறுபடி அதே இடங்களிலேயே பொருத்தினார்களாம். மசாடாவில் உள்ள கட்டடங்கள் யாவும் அந்தக் கால கட்டடக்கலையின் நேர்த்திக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
 
பல காலம் தங்குவதற்குத் தேவையான வசதிகள் கோட்டைக்குள் இருந்தனவாம். மழைத் தண்ணீர் ஒரு இடத்தில் சேர்ந்து பின் தொட்டிகளில் சேர்வதற்குரிய வகையில் அமைத்திருக்கிறார்கள். அங்கு வருஷம் முழுவதும் பெய்த மழையின் அளவு 22 செண்டி மீட்டர்கள்தான். வடக்குப் பகுதியில் இருக்கு அரண்மனைக்குப் பக்கத்தில் உள்ள இடம் மிகவும் செழிப்பானதாம். இந்த இடத்தை மற்ற எந்தக் காரியத்திற்காகவும் உபயோகித்ததாகத் தெரியவில்லை.
 
இரண்டு வருடங்களுக்கு மேலேயே அவர்கள் அங்கு தங்க நேர்ந்திருந்தாலும் இந்த இடத்தில் விளைந்ததை வைத்து சமாளித்திருப்பார்களாம். மூன்று அரண்மனைகள் இருக்கின்றன. ஹெராட் தங்குவதற்கான அரண்மனை, விருந்தினர்களை வரவேற்கும் இடம், சிப்பாய்கள் தங்கும் விடுதிகள், விசாலமான குளியல் அறைகள், பொழுதுபோக்கிற்கான இடம் என்று இன்று இடிபாடுகளாகக் காணப்படும் இடங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.
 
மலைக்கு மேல் செல்வதற்கு மூன்று வழிகள் இருக்கின்றன. முதலாவது முதல் முதலாக யூதர்கள் கட்டிய ‘பாம்புப் பாதை’. இது மிகவும் செங்குத்தாக இருக்கிறது. இதை யாரும் இப்போது உபயோகிப்பதில்லை. இரண்டாவதாக ரோமானியர்கள் கட்டிய படிகளைக் கொண்ட சாய்தளப் பாதை. மலைக்கு மேல் போவதற்கு இந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள் இருக்கிறார்கள். படிகளில் ஏறிச் செல்வதற்கு மலைக்காதவர்கள் இதில் செல்லலாம்.
 
அதிக தூரம் ஏற முடியாதவர்களுக்கு ‘கேபிள் கார்’ வசதி இருக்கிறது. மலையடிவாரத்திலிருந்து ஆரம்பிக்கும் இந்த சேவை மூலம் நேரே மலை உச்சிக்குப் போய்விடலாம். மலைக்கு மேலே இருக்கும் இந்த அரண் முழுவதும் சமதளத்தில் இருக்கிறது. கேபிள் காரிலிருந்து இறங்கியவுடன் நேரே அரணின் எல்லா இடங்களுக்கும் நடந்து செல்லலாம்.
 
மசாடா பாலஸ்தீனத்தின் ஒரு கோடியில் இருப்பதாலும் இங்கு யாரும் வரவில்லையாதலாலும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக பாழடைந்து போயிருந்த கோட்டையை இஸ்ரேலிய அரசு தேவையான இடங்களில் புதுப்பித்திருக்கிறது. 1965-இல் இந்த அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டது. இப்போது முன்னால் எப்படி இருந்தது என்று கற்பனை செய்து புதுப்பித்திருகிறார்கள்.
 
ஜோஸபஸ் ஃப்ளேவியஸ் (Josephus Flavius) என்னும் வரலாற்று ஆசிரியர் யூதர்கள் ரோமானியர்களை எதிர்த்து மசாடாவில் தங்கிப் போர்புரிந்ததை யூதர்களின் யுத்தம் (The Jewish war) என்ற தன் நூலில் எழுதியிருக்கிறார். இவர் யூதராகப் பிறந்தவர். யூதர்கள் ரோமானியரை எதிர்த்ததைத் தடுத்து நிறுத்த முயன்றார்; ஆனால் முடியவில்லை.
 
பின்னர் யூதர்களின் சார்பில் சண்டையிட்டு ரோமானியர்களால் சிறைபிடிக்கப்பட்டுப் பின்னால விடுவிக்கப்பட்டார். யூதர்களுக்கும் ரோமானியர்களுக்கும் இடையே தூது போய்க்கொண்டும் இருந்திருக்கிறார். கடைசியாக ரோமானியர் பக்கம் சேர்ந்து ரோமானியக் குடிமகன் ஆனார். ரோமானிய அரசன் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த யுத்தத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்.
 
பயணிகளுக்கு வசதியாக மலைக்கு மேலேயே இப்போது குடிதண்ணீர் வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள். களைப்படையும் பயணிகள் ஓய்வு எடுக்க நிழல் தரும் இடமும் கல்லினால் செய்யப்பட்ட பெஞ்சுகளும் இருக்கின்றன. இத்தனை வசதிகள் இருந்தும் அங்கு அடிக்கும் வெயில் யாரையும் அசத்திவிடும். தண்ணீரைக் குடித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. வெயிலிலிருந்து காத்துக்கொள்ள தலையில் தொப்பியையும் எப்போதும் அணிந்துகொள்ள வேண்டும்.
 
மசாடா யூதர்களின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் சின்னமாக இப்போது விளங்குகிறது. இஸ்ரேலியப் பள்ளிக் குழந்தைகளை இங்கு அழைத்து வந்து யூதர்கள் ரோமானியர்களை எதிர்த்து நின்ற வீரத்திற்குச் சான்றாக இந்தக் கோட்டையைக் காட்டுவார்களாம். இஸ்ரேலியப் படைகள் தங்கள் பயிற்சிகளை முடித்த பிறகு இங்கு வந்து ‘மசாடா இனி ஒரு போதும் வீழ்ச்சி அடையாது’ (‘Masada shall not fall again’) என்று சூளுரைப்பார்களாம்.
 
மசாடாவிலிருந்து சிறிது தொலைவில் இருக்கும் உயிரற்ற கடலைப் பார்க்கச் சென்றோம். இதன் நீர் மிகவும் உப்பாக இருப்பதால் இதில் உயிரினங்கள் எதுவும் இல்லை. இந்தக் கடல் நீருக்கும் மண்ணிற்கும் நிறைய மருத்துவக் குணங்கள் இருக்கின்றன என்கிறார்கள். இதனால் இதன் அருகில் உடல் பயிற்சிக்குத் தேவையான வசதிகள் கொண்ட ஓட்டல்கள் இருக்கின்றன.
 
இது ஒரு சிறிய ஏரியின் அளவுதான் இருக்கும். ஆனாலும் நீர் உவர்ப்பாக இருப்பதால் கடல் என்று அழைக்கிறார்கள். இதன் ஒரு பகுதி ஜோர்டான் நாட்டிலும் ஒரு பகுதி இஸ்ரேலிலும் இருக்கிறது. இதன் நீளம் தெற்கு வடக்காக 47 மைல்கள்தான்; அகலம் 10 மைல்கள். இது கடல் மட்டத்திற்குக் கீழே 1300 அடியில் இருக்கிறது. இதுதான் உலகிலேயே தாழ்ந்த இடம் என்கிறார்கள். ஜோர்டன் நதிதான் இதில் கலக்கிறது. இப்போது ஜோர்டன் நதியின் நீரின் பெரும் பகுதியை விவசாயத்திற்குப் பயன்படுத்துவதால் இந்தக் கடலின் நீர் மட்டம் குறைந்துகொண்டே போகிறதாம்.
 
இந்தக் கடல் பற்றிய விளம்பரங்களில் ‘இதில் மூழ்கவே முடியாது. அப்படியே மிதந்துகொண்டே இருக்கலாம். இதற்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு’ என்று போட்டிருக்கிறார்கள். அந்த இடம் மிகவும் வெக்கையாக இருப்பதால் கடல் நீர் மிகவும் சூடாக இருக்கிறது. கரையில் உள்ள மணலில் கால் வைக்கவே முடியவில்லை. அப்படி ஒரு சூடு. சிலர் தண்ணீரின் மேலே மிதந்துகொண்டிருந்தார்கள். கடலின் கரைக்கு அருகிலேயே உப்பற்ற குளிர்ந்த நீர், குழாய்கள் மூலம் வருவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கடலில் மிதந்துவிட்டு இவற்றில் நீராடிவிட்டு வரலாம். கடலுக்குப் பக்கத்திலேயே உல்லாசப் பயணிகளுக்கு வசதியாக உணவகங்கள் இருக்கின்றன.
 
இதையடுத்து நாங்கள் பார்க்கச் சென்றது உயிரற்ற கடல் சுவடிகள் (Dead Sea Scrolls) கண்டுபிடிக்கப்பட்ட கும்ரான் (Qumran) என்னும் குகைகள் அடங்கிய இடம். கி.மு. 150-க்கும் கி.பி. 68-க்கும் இடையில் யூத இனத்தைச் சேர்ந்த ஒரு பகுதியினர் தங்களுடைய கடவுளின் தூதர் வருவார் என்று எதிர்பார்த்து மற்றவர்களிடமிருந்து தனித்து எளிய வாழ்க்கை வாழ்ந்துகொண்டு தூதரை வரவேற்கும் ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். இவர்கள் இந்தச் சுவடுகளை விட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
1948-இல் பெடுயின் (Bedouin) என்னும் ஆடு மேய்க்கும் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் தற்செயலாக இந்தக் குகைகளுக்குள் ஒன்றில் காணாமல் போய்விட்ட தன் ஆட்டுக்குட்டி ஒன்றைத் தேடிச் சென்றிருக்கிறான். அங்கு தாழிகளுக்குள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த சுவடிகளைக் கண்டிருக்கிறான். இந்தச் சுவடிகள் கிறிஸ்துவுக்கு முன் எழுதப்பட்ட யூதர்களின் வேத புத்தகமான தோராக்களின் (Torah) விளக்கங்கள்.
 
இவை கண்டுபிடிக்கப்பட்டதும் முதலில் இவை கிறிஸ்துவ சமயத்தின் வரலாற்றையே மாற்றிவிடலாம் என்று கிறிஸ்துவர்கள் பயந்தார்களாம். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. முன்பே கூறியபடி, இந்தச் சுவடிகள் இப்போது மிகவும் பத்திரமாக இஸ்ரேல் மியுசியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies