உலக அதிசயம் , இடிந்து விழத் தயாராகும் இத்தாலியின் இன்னொரு சாய்ந்த கோபுரம்!
03 Dec,2023
,
இத்தாலி நாட்டில் சாய்ந்த நிலையில் உள்ள 11ம் நூற்றாண்டு கோபுரம் ஒன்று விரைவில் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தாலி நாட்டின் பிசா நகரில் உள்ள சாய்ந்த கோபுரம், உலக அதிசயங்களில் ஒன்றாகும். ஆனால் இந்த ஒரு கட்டிடம் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் இது போன்ற ஏராளமான கட்டிடங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. இத்தாலியிலேயே இது போன்று ஏராளமான கட்டிங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. அந்த வகையில் அந்நாட்டின் போலோக்னா நகரில் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட 2 கோபுரங்களில் ஒன்று சாய்ந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
,
1400-ம் ஆண்டு வாக்கில், கரிசெண்டா என்றழைக்கப்படும் இந்த கோபுரத்தில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வந்ததாகவும், அங்கு அமைக்கப்பட்டிருந்த அடுப்புகளில் இருந்து வெளியான வெப்பம் காரணமாக கட்டிடத்தின் அடித்தளம் பலவீனமடைந்ததால், இந்த கோபுரம் சுமார் 4 டிகிரி வரை சாய்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் கோலோக்னா நகரில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளதாலும், சமீபத்தில் அங்கு வீசிய புயலாலும் கட்டிடம் மேலும் பலவீனமடைந்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் இந்த கோபுரம் இடிந்து விழும் நிலையில் இருந்து வருகிறது.
,
இதையடுத்து கட்டிடத்தை பாதுகாப்பதற்காக சுமார் 3.7 மில்லியன் பவுண்டுகள் செலவில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இவை கைகொடுக்காவிட்டால், அடுத்த கட்டமாக இடிந்து விழும் கோபுரத்தின் இடிபாடுகள் அருகில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழாமல் இருக்க சுமார் 3 மீட்டர் சுற்றளவிற்கு தடுப்புகள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிசா சாய்ந்த கோபுரத்தை விட இந்த கோபுரம் ஒரு டிகிரி குறைவாகவே சாய்ந்த நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது