பன்றி வைரஸ்ஸ இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக !
29 Nov,2023
.
பன்றிகளில் பரவும் ‘ஸ்வைன் ப்ளூ’ எனப்படும் பன்றிக்காய்ச்சல் வைரஸைப் போன்ற தன்மை கொண்ட வைரஸ் முதன்முறையாக மனிதனிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அடையாளம் தெரியாத அந்த நபர், சுவாசக் கோளாறு அறிகுறிகளை அனுபவித்ததாகவும் அதைத் தொடர்ந்து அவர் A(H1N2)v எனப்படும் H1N2 வைரஸின் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை சோதனை அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்தது. ஆனால் அவருக்கு எப்படி இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது.
மேலும், H1N2 வைரஸின் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட அந்த நபர் தற்போது குணமடைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் பாதிப்பு குறித்து இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘நெருங்கிய தொடர்புகளைக் கண்டறியவும், சாத்தியமான பரவலைக் குறைக்கவும் நாங்கள் விரைவாகச் செயல்படுகிறோம்’ என சுகாதார அதிகாரி கூறினார்.
இதற்கிடையில், அங்கு பன்றி வளர்ப்பவர்கள் எச்சரிக்கப்பட்டு, தங்கள் மந்தைகளில் பன்றிக்காய்ச்சல் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக தங்கள் உள்ளூர் கால்நடை மருத்துவரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
2005ஆம் ஆண்டு முதல் உலகளவில் 50 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், இங்கிலாந்தில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதன்முறை.