தொண்டை அல்லது குரல்வளைப் பகுதியில் ஏற்படக் கூடிய புற்றுநோயை வாய் புற்றுநோய் அல்லது தொண்டை புற்றுநோய் என்று குறிப்பிடுகின்றனர். நம் தொண்டையின் உள்பகுதியில் உள்ள தட்டையான செல்களின் மீது இந்தப் புற்றுநோய் உருவாகிறது. கடந்த 20 ஆண்டுகளில் தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு மனித பேபிலோமாவைரஸ் காரணமாக ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த வைரஸ் தான் கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் ஆசனவாய் புற்றுநோய் ஏற்படவும் காரணமாக இருக்கிறது. தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடும் தம்பதியர்கள் வாய்வழி புணர்ச்சியை மேற்கொள்வதால் தான் இந்த புற்றுநோய் பாதிப்பு மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது என்றும் பரவலாக பேசப்படுகிறது. ஆனால், நிபுணர்கள் இந்தக் கருத்தில் மாறுபடுகின்றனர்.
வாய் புற்றுநோய்க்கு வாய்வழி புணர்ச்சி என்பது ஓரளவுக்கு காரணம் என்றாலும், ஆழ்ந்த முத்தத்தின் வழியாகப் பரவுகின்ற ஹெச்பிவி வைரஸ் காரணமாகவும் இந்த புற்றுநோய் ஏற்படலாம் என்று தெரிவிக்கின்றனர்.
இணையர்கள் ஒன்று சேரும்போது பரஸ்பரம் சருமங்கள் இணைவதாலும், பெண்ணுறுப்பு - ஆணுறுப்பு சேர்ந்த புணர்ச்சி, பெண்ணுறுப்பு அல்லது ஆசனவாய் வழி புணர்ச்சி, பெண்ணுறுப்பு வாய்வழி புணர்ச்சி, ஆணுறுப்பு வாய்வழி புணர்ச்சி போன்றவை காரணமாகவும் இதுபோன்ற வைரஸ் பரவக் கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹெச்பிவி வைரஸ் மூலமாக பாதிக்கப்படும் செல்கள், பாலுறுப்பு பகுதியை புற்றுநோய் செல்களாக மாற்றும். இதனால் புற்றுநோய் கட்டிகள் வளர்ச்சி அடையத் தொடங்கும். அமெரிக்காவில் தொண்டை புற்றுநோய் ஏற்பட்டவர்களில் 70 சதவீதம் பேருக்கு ஹெச்பிவி வைரஸ் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
நாக்கின் பின்பகுதியில் இந்த புற்றுநோய் செல்கள் வளர்ச்சி அடையும் என்று கூறுகின்றனர். லேன்சட் கோபல் ஹெல்த் என்ற அமைப்பு வெளியிட்ட ஆய்வுத் தகவலின்படி உலகில் மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு 15 வயதிலேயே புற்றுநோய் ஏற்படுவதற்கு ஹெச்பிவி காரணமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 5ல் ஒரு நபருக்கு பெரும் அபாயம் கொண்ட ஆன்கோஜெனிக் மற்றும் ஹெச்பிவி டைப் 2 வைரஸ் காரணமாக புற்றுநோய் ஏற்படும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை புற்றுநோய் : உலகெங்கிலும் 3.40 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்டுதோறும் கர்ப்பப்பை புற்றுநோயால் உயிரிழந்து வருகின்றனர் என்று உலக சுகாதார ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.
வாய்வழி புணர்ச்சி பாதுகாப்பானதா : வாய்வழி புணர்ச்சி என்பது இணையர்களின் பாலுறுப்பு மீது வாய் மூலமாக உணர்ச்சியை தூண்டுவதாகும். இதில் வாய் புற்றுநோய்க்கான ஹெச்பிவி வைரஸ் மட்டுமல்லாமல், சிப்ளிஸ், கோனேரியா போன்ற பிற வகை பாலியல் நோய்களும் கூட பரவக் கூடும். இருப்பினும் 12 வயதில் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ஹெச்பிவி வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.