10ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்.!
25 Nov,2023
ஆந்திராவில் 10 ஆம் வகுப்பு மாணவியை அதே பள்ளியின் ஆசிரியர் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி வீட்டில் இருந்து அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டுள்ளார்.
ஆந்திராவில் மேற்கு கோதாவரியில் யெண்டகண்டி கிராமத்தில் இயங்கிவரும் பள்ளியில் 46 வயதான சோம்ராஜு என்பவர் ஹிந்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் இதே பள்ளியில் பயின்று வரும் 15 வயதாகும் 10 ஆம் வகுப்பு மாணவியைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
சுமார் 4 மாதங்களாக மாணவியிடம் பேசி வந்த நிலையில், நவம்பர் 19 ஆம் தேதி மாணவியை அவரின் வீட்டிலிருந்து அழைத்து சென்று திருமணம் செய்துகொண்டுள்ளார்.
மேலும், மாணவியை வலுக்கட்டாயமாக அவரின் வீட்டில் 2 நாட்களுக்கு உடன் வைத்துக்கொண்டு பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இவரிடம் இருந்து தப்பிய மாணவி, அவரின் சொந்த ஊருக்குச் சென்று பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து, மாணவியின் தந்தை இதுகுறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், ஆசிரியர் சோம்ராஜை ததேரு கிராமத்தில் வைத்து காவல்துறையினர் கைதுசெய்தனர். காவல்துறை விசாரணையில், மாணவிக்கு இவரின் ஸ்மார்ட்போனை கொடுத்து ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிவந்தது தெரியவந்தது.
மேலும், சோம்ராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மகள்கள் இருப்பதும், அவரின் மனைவி இவரை விட்டு 7 வருடங்களுக்கு முன்பே பிரிந்துசென்றதும் தெரியவந்தது. யெண்டகண்டி கிராமத்துக் காவல்துறையினர் சோம்ராஜு மீது ஐபிசி பிரிவு 376, 342 மற்றும் 506 கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், போக்சோ சட்டம் பிரிவு 5 மற்றும் 6, குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் பிரிவு 9 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது. வரும் வெள்ளிக்கிழமை அன்று சோம்ராஜை காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தவுள்ளனர்.