பார்த்தீபன் கனவு.2
சிவனடியார்.1
பொழுது புலர இன்னும் அரை ஜாமப் பொழுது இருக்கும். கீழ்வானத்தில் காலைப் பிறையும் விடிவெள்ளியும் அருகருகே ஒளிர்ந்து கொண்டிருந்தன. உச்சிவானத்தில் வைரங்களை வாரி இறைத்தது போல் நட்சத்திரங்கள் பிரகாசித்தன. வடக்கே ஸப்த ரிஷி மண்டலம் அலங்காரக் கோலம் போட்டதுபோல் காட்சியளித்தது. தெற்கு மூலையில் சுவாமி நட்சத்திரம் விசேஷ சோபையுடன் தனி அரசு புரிந்தது.
அந்த மனோகரமான அதிகாலை நேரத்தில், காவேரி பிரவாகத்தின் ‘ஹோ’ என்ற சத்தத்தைத் தவிர வேறு சத்தம் ஒன்றுமேயில்லை. திடீரென்று அத்தகைய அமைதியைக் கலைத்துக் கொண்டு ‘டக் டக் டக்’ என்று குதிரையின் காலடிச் சத்தம் கேட்கலாயிற்று. ஆமாம்; இதோ ஒரு கம்பீரமான உயர்ந்த ஜாதிக் குதிரை காவேரி நதிக்கரைச் சாலை வழியாகக் கிழக்கேயிருந்து மேற்கு நோக்கி வருகிறது. அது விரைந்து ஓடி வரவில்லை; சாதாரண நடையில் தான் வருகிறது. அந்தக் குதிரைமீது ஆஜானுபாகுவான ஒரு வீரன் அமர்ந்திருக்கிறான். போதிய வெளிச்சமில்லாமையால், அவன் யார், எப்படிப்பட்டவன் என்று அறிந்து கொள்ளும்படி அங்க அடையாளங்கள் ஒன்றும் தெரியவில்லை. நெடுந்தூரம் விரைந்து ஓடிவந்த அக்குதிரையை இனிமேலும் விரட்ட வேண்டாமென்று அவ்வீரன் அதை மெதுவாக நடத்தி வந்ததாகத் தோன்றியது. அவன் தான் சேரவேண்டிய இடத்துக்குக் கிட்டத்தட்ட வந்துவிட்டதாகவும் காணப்பட்டது.
அவனுக்கு வலதுகைப் புறத்தில் காவேரி நதியில் பிரவாகம். இடது புறத்திலோ அடர்ந்த மரங்களும் புதர்களும் நிறைந்த காடாகத் தோன்றியது. வீரன், இடது புறத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டு வந்தான். ஓரிடத்துக்கு வந்ததும் குதிரையை இடதுபுறமாகத் திருப்பினான். குதிரையும் அந்த இடத்தில் திரும்பிப் பார்க்கப் பழக்கப்பட்டது போல் அநாயாசமாகச் செடி கொடிகள் அடர்ந்த காட்டுக்குள் புகுந்து சென்றது. கவனித்துப் பார்த்தால் அந்த இடத்தில் ஒரு குறுகிய ஒற்றையடிப் பாதை போவது தெரியவரும்.
அந்தப் பாதை வழியாகக் குதிரை மிகவும் சிரமப்பட்டுக் கொண்டு தான் சென்றது. இரண்டு பக்கங்களிலும் நெருங்கி வளர்ந்திருந்த புதர்களும், கொடிகளும், மேலே கவிந்திருந்த மரக் கிளைகளும் குதிரை எளிதில் போக முடியாதபடி செய்தன. குதிரை மீதிருந்த வீரனோ அடிக்கடி குனிந்தும், வளைந்து கொடுத்தும், சில சமயம் குதிரையின் முதுகோடு முதுகாய்ப் படுத்துக் கொண்டும் மரக்கிளைகளினால் கீழே தள்ளப்படாமல் தப்பிக்க வேண்டியிருந்தது. இத்தகைய பாதை வழியாகக் கொஞ்சதூரம் சென்ற பிறகு திடீரென்று சிறிது இடைவெளியும் ஒரு சிறு கோயிலும் தென்பட்டன. கோயிலுக்கெதிரே பிரம்மாண்டமான யானை, குதிரை முதலிய வாகனங்கள் நின்றதைப் பார்த்தால், அது ஐயனார் கோயிலாயிருக்க வேண்டுமென்று ஊகிக்கலாம். வேண்டுதலுக்காக பக்தர்கள் செய்துவைத்த அந்த மண் யானை - குதிரைகளில் சில வெகு பழமையானவை; சில புத்தம் புதியவை. அவற்றின் மீது பூசிய வர்ணம் இன்னும் புதுமை அழியாமலிருந்தது. பலிபீடம், துவஜ்தம்பம் முதலியவையும் அங்குக் காணப்பட்டன.
கீழ்வானம் வெளுத்துப் பலபலவென்று பொழுது விடியும் சமயத்தில் மேற்சொன்ன வீரன் குதிரையின்மீது அங்கே வந்து சேர்ந்தான். வீரன் குதிரையிலிருந்து கீழே குதித்து அவசர அவசரமாகச் சில அதிசயமான காரியங்களைச் செய்யத் தொடங்கினான். மண் யானைகளுக்கும் மண் குதிரைகளுக்கும் மத்தியில் தான் ஏறிவந்த குதிரையை நிறுத்தினான். குதிரைமீது கட்டியிருந்த ஒரு மூட்டையை எடுத்து அவிழ்த்தான். அதற்குள் இருந்த புலித்தோல், ருத்திராட்சம், பொய் ஜடாமுடி முதலியவைகளை எடுத்துத் தரித்துக் கொள்ளத் தொடங்கினான். சற்று நேரத்தில் பழைய போர் வீரன் உருவம் அடியோடு மாறி, திவ்ய தேஜஸ்சுடன் கூடிய சிவயோகியாகத் தோற்றம் கொண்டான். ஆம்; வெண்ணாற்றங் கரையில் ரணகளத்தில் பார்த்திபனுக்கு வரமளித்த சிவனடியார்தான் இவர்.
தம்முடைய பழைய உடைகளையும், ஆபரணங்களையும், ஆயுதங்களையும் மூட்டையாகக் கட்டி, உடைந்து விழுந்திருந்த மண் யானை ஒன்றின் பின்னால் வைத்தார் அந்தச் சிவயோகி. குதிரையை ஒரு தடவை அன்புடன் தடவிக் கொடுத்தார். குதிரையும் அந்தச் சமிக்ஞையைத் தெரிந்து கொண்டது போல் மெதுவான குரலில் கனைத்தது. பிறகு அங்கிருந்து அச்சிவனடியார் கிளம்பி ஒற்றையடிப்பாதை வழியாகத் திரும்பிச் சென்று காவேரிக் கரையை அடைந்தார். மறுபடியும் மேற்கு நோக்கித் நடக்க ஆரம்பித்தார்.
ஒரு நாழிகை வழி நடந்த பிறகு சு10ரியன் உதயமாகும் தருணத்தில் இந்தச் சரித்திரத்தின் ஆரம்ப அத்தியாயத்தில் நாம் பார்த்திருக்கும் தோணித் துறைக்கு வந்து சேர்ந்தார். அங்கே படகோட்டி பொன்னனுடைய குடிசைக்கு அருகில் வந்து நின்று, “பொன்னா!” என்று கூப்பிட்டார். உள்ளிருந்து “சாமியார் வந்திருக்கிறார் வள்ளி” என்று குரல் கேட்டது. அடுத்த விநாடி பொன்னன் குடிசைக்கு வந்து சிவனடியார் காலில் விழுந்தான். அவன் பின்னோடு வள்ளியும் வந்து வணங்கினாள். பிறகு மூவரும் உள்ளே போனார்கள். வள்ளி பயபக்தியுடன் எடுத்துப் போட்ட மணையில் சிவனடியார் அமர்ந்தார். “பொன்னா! மகாராணியும் இளவரசரும் வஸந்தமாளிகையில்தானே இருக்கிறார்கள்?” என்று அவர் கேட்டார்.
“ஆம் சுவாமி! இன்னும் கொஞ்ச நாளில் நமது இளவரசரையும் ‘மகாராஜா’ என்று எல்லோரும் அழைப்பார்களல்லவா?” “ஆமாம்; எல்லாம் சரியாக நடந்தால், நீ உடனே போய் அவர்களை அழைத்துக் கொண்டுவா!” என்றார் சிவனடியார். “இதோ போகிறேன், வள்ளி சுவாமியாரைக் கவனித்துக் கொள்!” என்று சொல்லிவிட்டுப் பொன்னன் வெளியேறினான். சிறிது நேரத்திற்கெல்லாம் படகு தண்ணீரில் போகும் சலசலப்புச் சத்தம் கேட்கத் தொடங்கியது.
வம்புக்கார வள்ளி.2
பொன்னன் போனதும், வள்ளி சிவனடியாருக்கு மிகுந்த சிரத்தையுடன் பணிவிடைகள் செய்யத் தொடங்கினாள். அவருடைய காலை அனுஷ்டானங்கள் முடிவடைந்ததும், அடுப்பில் சுட்டுக் கொண்டிருந்த கம்பு அடையைச் சுடச்சுடக் கொண்டுவந்து சிவனடியார் முன்பு வைத்தாள். அவர்மிக்க ருசியுடன் அதைச் சாப்பிட்டுக் கொண்டே வள்ளியுடன் பேச்சுக் கொடுத்தார்.
“வள்ளி! ராணி எப்படி இருக்கிறாள், தெரியுமா?” என்று கேட்டார் சிவனடியார். “இளவரசர் பக்கத்தில் இருக்கும்போதெல்லாம் தேவி தைரியமாகத்தான் இருக்கிறார். அவர் அப்பால் போனால் கண்ணீர் விடத் தொடங்கி விடுகிறார்” என்றாள் வள்ளி. பிறகு, “சுவாமி! இதெல்லாம் எப்படித்தான் முடியும்? இளவரசர் நிஜமாக மகாராஜா ஆகிவிடுவாரா? அவருக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், ராணி பொறுக்க மாட்டாள்; உயிரையே விட்டுவிடுவார்” என்றாள். “எனக்கென்ன தெரியும் அம்மா! கடவுளுடைய சித்தம் எப்படியோ அப்படித் தான் நடக்கும். உனக்குத் தெரிந்த வரை ஜனங்கள் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?”
“ஜனங்கள் எல்லோரும் இளவரசர் பக்கந்தான் இருக்கிறார்கள். பல்லவ அதிகாரம் ஒழிய வேண்டுமென்று தான் ஆசைப்படுகிறார்கள். பார்த்திப மகாராஜாவின் வீர மரணத்தைப் பற்றித் தெரியாத பிஞ்சு குழந்தைகூடக் கிடையாது. சுவாமி! அந்தச் செய்தியைத் தாங்கள் தானே ஆறு வருஷத்துக்கு முன்னால் எங்களுக்கு வந்து சொன்னீர்கள்? அதை நானும் ஓடக்காரரும் இதுவரையில் லட்சம் ஜனங்களுக்காவது சொல்லியிருப்போம்” என்றாள்.
“நானும் இன்னும் எத்தனையோ பேரிடம் சொல்லியிருக்கிறேன். இருக்கட்டும்; மாரப்ப பூபதி எப்படியிருக்கிறான்? இப்போது உன் பாட்டனிடம் ஜோஸியம் கேட்க அவன் வருவதுண்டா?” என்று கேட்டார் சிவனடியார். “ஆகா! அடிக்கடி வந்துகொண்டுதானிருக்கிறான்” என்றாள் வள்ளி. உடனே எதையோ நினைத்துக் கொண்டவள் போல் இடி இடி என்று சிரித்தாள். சிவனடியார் “என்னத்தைக் கண்டு அம்மா இப்படிச் சிரிக்கிறாய்? என்னுடைய மூஞ்சியைப் பார்த்தா?” என்றார். “இல்லை சுவாமி! மாரப்ப பூபதியின் ஆசை இன்னதென்று உங்களுக்குத் தெரியாதா? காஞ்சி சக்கரவர்த்தியின் மகளை இவன் கட்டிக் கொள்ளப் போகிறானாம்! கல்யாணத்துக்கு முகூர்த்தம் வைக்க வேண்டியது தான் பாக்கி” என்றாள்.
சிவனடியார் முகத்தில் ஒரு விநாடி நேரம் இருண்ட மேகம் படர்ந்தது போல் தோன்றியது. உடனே அவர் புன்னகையை வருவித்துக் கொண்டு “ஆமாம்; உனக்கென்ன அதில் அவ்வளவு சிரிப்பு?” என்று கேட்டார். “சக்கரவர்த்தியின் மகள் எங்கே? இந்தப் பேதை மாரப்பன் எங்கே? உலகத்தில் அப்படி ஆண் பிள்ளைகளே அற்றுப் போய்விடவில்லையே. நரசிம்ம பல்லவரின் மகளை இந்தக் கோழைப் பங்காளிக்குக் கொடுப்பதற்கு?” என்றாள் வள்ளி. “ஆனால், உன் பாட்டன்தானே மாரப்பனை இப்படிப் பைத்தியமாய் அடித்தது வள்ளி, இல்லாத பொல்லாத பொய் ஜோசியங்களையெல்லாம் சொல்லி?” என்றார் சிவனடியார்.
“அப்படிச் சொல்லியிராவிட்டால், அந்தப் பாவி என் பிராணனை வாங்கியிருப்பான்; சுவாமி! போகட்டும்; சக்கரவர்த்தியின் குமாரி ரொம்ப அழகாமே, நிஜந்தானா! நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என்று வள்ளி ஆவலுடன் கேட்டாள். “சிவனடியார் புன்னகையுடன் பார்த்திருக்கிறேன் அம்மா, பார்த்திருக்கிறேன். ஆனால் அழகைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? நான் துறவி!” என்றார். “எங்கள் ராணியை விட அழகாயிருப்பாளா? சொல்லுங்கள்.” “உங்கள் ராணி அவ்வளவு அழகா என்ன?” “எங்கள் ராணியா? இல்லை! இல்லை! எங்கள் ராணி அழகேயில்லை. சுத்த அவலட்சணம், உங்கள் சக்கரவர்த்தி மகள்தான் ரதி...” “என்ன வள்ளி, இப்படிக் கோபித்துக் கொள்கிறாய்?”
“பின்னே என்ன? எங்கள் ராணியை நீங்கள் எத்தனையோ தடவை பார்த்திருந்தும் இப்படிக் கேட்கிறீர்களே? அருள்மொழித் தேவியைப் போல் அழகானவர் இந்த ஈரேழு பதினாலு உலகிலும் கிடையாது....” “நான்தான் சொன்னேனே, அம்மா! ஆண்டியாகிய எனக்கு அழகு என்ன தெரியும். அவலட்சணந்தான் என்ன தெரியும்?” “உங்களுக்குத் தெரியாது என்றுதான் தெரிகிறதே! ஆனால் காஞ்சி சக்கரவர்த்தியை எப்போதாவது பார்த்தால் கேளுங்கள்; அவர் சொல்லுவார். அருள்மொழித் தேவிக்கும் பார்த்திப மகாராஜாவுக்கும் கலியாணம் ஆவதற்கு முன்னால் நடந்த செய்தி உங்களுக்குத் தெரியுமா? அருள்மொழித் தேவியின் அழகைப் பற்றி நரசிம்மவர்மர் கேள்விப்பட்டு “அருள்மொழியைக் கல்யாணம் செய்து கொண்டால் செய்து கொள்வேன்; இல்லாவிட்டால் தலையை மொட்டையடித்துக் கொண்டு புத்த சந்நியாசியாகப் போய் விடுவேன்” என்று பிடிவாதம் செய்தார். ஆனால் அருள்மொழித் தேவிக்கு அதற்கு முன்பே பார்த்திப மகாராஜாவுடன் கலியாணம் நிச்சயமாகி விட்டது. இன்னொரு புருஷனை மனதினால்கூட நினைக்கமாட்டேன் என்று கண்டிப்பாய்ச் சொல்லி, கடைசியில் பார்த்திப மகாராஜாவையே கலியாணம் செய்து கொண்டார்.”
சிவனடியார் முகத்தில் மந்தகாசம் தவழ, “ஆமாம் அம்மா! நரசிம்மவர்மர் அப்புறம் என்ன செய்தார்? தலையை மொட்டை அடித்துக்கொண்டு பௌத்த பிக்கு ஆகிவிட்டாரா?” என்று கேட்டார். “ஆண் பிள்ளைகள் சமாசாரம் கேட்க வேண்டுமா? சுவாமி! அதிலும் ராஜாக்கள், சக்கரவர்த்திகள் என்றால் மனது ஒரே நிலையில் நிற்குமா? அப்புறம் அவர் பாண்டிய ராஜகுமாரியைக் கல்யாணம் செய்து கொண்டார். இன்னும் எத்தனை பேரோ, யார் கண்டது? நான் மட்டும் ராஜகுமாரியாய்ப் பிறந்திருந்தால் எந்த ராஜாவையும் கலியாணம் செய்து கொள்ள மாட்டேன். அரண்மனையில் பத்துச் சக்களத்திகளோடு இருப்பதைக் காட்டிலும், கூரைக் குடிசையில் ஒருத்தியாயிருப்பது மேலில்லையா?” சிவனடியார் கலகலவென்று சிரித்தார். “நீ சொல்வது நிஜந்தான், அம்மா! ஆனால் நரசிம்மவர்மன் நீ நினைப்பது போல் அவ்வளவு பொல்லாதவனல்ல...” என்றார். “இருக்கட்டும் சுவாமி! அவர் நல்லவராகவே இருக்கட்டும். அவர்தான் உங்களுக்கு ரொம்ப வேண்டியவர் போலிருக்கிறதே! ஒரு காரியம் செய்யுங்களேன்? சக்கரவர்த்தியின் மகளை எங்கள் இளவரசருக்குக் கலியாணம் செய்து வைத்து விடுங்களேன்! சண்டை, சச்சரவு எல்லாம் தீர்ந்து சமாதானம் ஆகிவிடட்டுமே.”
“நல்ல யோசனைதான் வள்ளி! ஆனால் என்னால் நடக்கக்கூடிய காரியம் அல்ல. நீ வேண்டுமானால் சக்கரவர்த்தியைப் பார்த்துச் சொல்லேன்....” “நான் சக்கரவர்த்தியை எப்போதாவது பார்த்தால் நிச்சயமாய்ச் சொல்லத்தான் போகிறேன் எனக்கு என்ன பயம்?” என்றாள். அச்சமயத்தில் படகு கரைக்கு வந்து சேர்ந்த சத்தம் கேட்டது. வள்ளி, “படகு வந்துவிட்டது” என்று சொல்லிக் கொண்டு குடிசைக்கு வெளியே வந்தாள்.
P2.பார்த்தீபன் கனவு 3.4
P2.பார்த்தீபன் கனவு 5.6.7
P2.பார்த்தீபன் கனவு 8.9.10
P2.பார்த்தீபன் கனவு 11.12.13
P2.பார்த்தீபன் கனவு 14.15.16
P2.பார்த்தீபன் கனவு17.18.19
P2.பார்த்தீபன் கனவு20.21,22
P2.பார்த்தீபன் கனவு 23.24
P2.பார்த்தீபன் கனவு 25.26
இரண்டாம் பாகம்முடிந்தது