ஐரோப்பா முழுவதும் அமேசான் ஊழியர்கள் போராட்டம்!
24 Nov,2023
அமேசான் நிறுவனம் பிளாக் பிரைடே விற்பனையை அறிவித்துள்ள நிலையில் ஐரோப்பா முழுவதும் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் இ காமர்ஸ் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை பிளாக் பிரைடே என்ற சலுகை விலை விற்பனையை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் தேங்க்ஸ் கிவிங் தினத்தை குறிவைத்து இந்த அறிவிப்பை அமேசான் வெளியிட்டு இருந்தது.
இந்த மூன்று நாட்கள் விற்பனையில் பல்வேறு நிறுவனங்களும் மிகக் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யும் என்பதால் அமேசான் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் அளவிற்கு லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அமேசான் நிறுவனத்திற்கு பின்னடைவு ஏற்படுத்தும் வகையில், ஐரோப்பாவின் பல்வேறு நகரங்களிலும் அமேசான் நிறுவன ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெர்மனியில் 5 குடோன்களில் முழு வேலைநிறுத்தம் நடைபெறும் நிலையில், 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த போராட்டம் நடப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அமேசான் நிறுவனம் தங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 15.27 அமெரிக்க டாலர்கள் மட்டுமே ஊதியமாக வழங்கி வருவதாகவும், இதனை 18.69 டாலர்களாக உயர்த்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அமேசான் குடோன்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சிக்கல் தற்காலிகமானது எனவும், விரைவில் மாற்று ஏற்பாடுகள் மூலமாக பொருட்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் என அமேசான் தெரிவித்துள்ளது.
பிற நிறுவனங்களைப் போல் அல்லாமல் அமேசான் ஏற்கெனவே அதிக ஊதியத்தை வழங்கி வருவதாகவும் இருப்பினும் ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக உரிய முறையில் பரிசீலனை செய்யப்படும் எனவும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளதால், வாடிக்கையாளர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது அமேசான் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தக பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.