ஹமாஸ் படைகளை தடை செய்ய முன்மொழிந்த சுவிஸ் அரசாங்கம்!
23 Nov,2023
சுவிட்சர்லாந்திற்குள் ஹமாஸ் நடவடிக்கைகள் அல்லது பாலஸ்தீனிய போராளிக் குழுவிற்கு ஆதரவை வெளிப்படையாகத் தடை செய்யும் சட்ட வரைவை பிப்ரவரி இறுதிக்குள் கொண்டு வரப் போவதாக சுவிஸ் அரசாங்கம் புதன்கிழமை அறிவித்தது.
இது தொடர்பில் சுவிஸ் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 7 முதல் மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலைக்கு இது மிகவும் பொருத்தமான பதில் என்றும், ஹமாஸ் படைகளை தடை செய்யும் பெடரல் சட்டத்தை உருவாக்க பெடரல் கவுன்சில் முடிவு செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஹமாஸ் படைகளின் நடவடிக்கை அல்லது அந்த அமைப்புக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இந்த சட்டம் பயன்படும்.
ஹமாஸ் படைகள் அக்டோபர் 7ம் திகதி முன்னெடுத்த கொடூரத்தாக்குதலில் இஸ்ரேலிய மக்கள் 1,200 பேர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் 240 பேர்கள் பணயக்கைதிகளாகவும் சிறைபிடிக்கப்பட்டனர்.
இதனையடுத்து இஸ்ரேல் முன்னெடுத்த கண்மூடித்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 14,128 என்றும் இதில் சிறார்கள் எண்ணிக்கை 4,000 கடந்துள்ளது என்றும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
ஹமாஸ் படைகளுக்கு எதிரான சட்டத்தை உருவாக்க சுவிஸ் அரசாங்கம் 7 உறுப்பினர்கள் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளது. மேலும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மதிப்பதாகவும் குறிப்பாக அப்பாவி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை ஆதரிப்பதாகவும் சுவிஸ் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
மட்டுமின்றி, இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை மிகவும் தீவிரமாக கண்டிப்பதுடன் ஆயிரக்கணக்கான அப்பவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதற்கு ஆழ்ந்த வருத்தமும் தெரிவித்துள்ளது.
மேலும் தனது சொந்த பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான இஸ்ரேலின் உரிமையை சுவிட்சர்லாந்து அங்கீகரிக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.