அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு காஸாவின் பெரிய மருத்துவமனைக்குள் பணயக்கைதிகளை அவர்கள் அழைத்து செல்வது போன்ற சிசிடிவி வீடியோவை வெளியிட்டுள்ளது இஸ்ரேல் ராணுவம்.
அதில் ஒரு ராணுவ வீரரும் கொல்லப்பட்டதாக கூறியுள்ளார் ராணுவ செய்தி தொடர்பாளர்.
சிறிய காயங்களுடன் அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் அழைத்து செல்லப்பட்ட 19 வயதான சிபிஎல் நோவா மார்சியானோ கொல்லப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
அந்த மருத்துவமனைக்கு கீழ் ஹமாஸின் தலைமை கட்டளை மைய சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால், ஹமாஸ் அதை மறுத்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட வீடியோவை பிபிசியால் உறுதிப்படுத்த முடியவில்லை.
தங்களது கண்டுபிடிப்புகளின்படி, ஷிஃபாவுக்கு அருகில் உள்ள பாதுகாப்பு அறைக்கு நோவா கடத்தி செல்லப்பட்டதாக இன்று காலை அவரது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளோம் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் இஸ்ரேல் பாதுகாப்பு படையின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி.
ஐடிஃஎப் வான்வழி தாக்குதலின் போது, நோவாவை பிடித்து வைத்திருந்த ஹமாஸ் பயங்கரவாதி கொல்லப்பட்டார். மேலும் அந்த தாக்குதலில் நோவாவுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. ஆனால், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. பின்னர் தான் அவர் மற்றொரு ஹமாஸ் பயங்கரவாதியால் கொல்லப்பட்ட அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் கொண்டு செல்லப்பட்டார்.
அக்டோபர் 9ம் தேதி இஸ்ரேல் நடத்தியதாக கூறிய வான்வழி தாக்குதலில் தான் நோவா கொல்லப்பட்டதாக முன்பு ஹமாஸ் கூறியிருந்தது.
பின்னர் ஹமாஸ் இஸ்ரேல் எதிர்பாராத சமயத்தில் தாக்குதல் நடத்தி 1,200 இஸ்ரேலியர்களை கொன்ற மற்றும் 240 பணயக்கைதிகளை பிடித்து வந்த நாளான அக்டோபர் 7 காலையில் இருந்து சிசிடிவி வீடியோக்களை வெளியிட்டார் ரியர் அட்மிரல் ஹகாரி.
அந்த வீடியோவில் காஸாவின் பெரிய மற்றும் நவீன மருத்துவமனைக்குள் இரண்டு பணயக்கைதிகளை அழைத்து வரும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
அக்டோபர் 7 தேதியிட்ட சிசிடிவி வீடியோவில் ஆயுதமேந்திய நபர்களை பார்க்க முடிந்தது. மேலும் அங்கு இருந்த பணயக்கைதி ஒருவர் படுக்கையில் இருப்பது போலவும், மற்றொருவர் மேற்கூறிய நபர்களிடம் தனது எதிர்ப்பை காட்டியதும் பதிவாகியுள்ளது.
காஸா பகுதியின் வடக்கு பகுதியில் உள்ள பெரிய மருத்துவ வளாகத்தின் அடியில்தான் ஹமாஸின் முக்கிய கட்டளை மையம் இயங்குகிறது என்ற இஸ்ரேலின் தகவலை நிரூபிக்க வேண்டிய அழுத்தம் அதற்கு இருந்தது.
இஸ்ரேலால் வெளியிடப்பட்டுள்ள வீடியோவுக்கு பதிலளித்துள்ள, காஸாவில் உள்ள ஹமாஸ் சுகாதார அமைச்சகம் அந்த வீடியோக்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறியுள்ளது.
காஸாவில் மருத்துவ சேவைகள் முழுமையாக நிலைகுலைந்து போனதற்கு இஸ்ரேல்தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.
முன்னதாக நிலத்திற்கு அடியில் 10(33அடி) மீட்டரில் மூடப்பட்ட கதவு வரை 55 மீ செல்லக் கூடிய சுரங்கம் ஒன்றின் வீடியோவை வெளியிட்டிருந்தது ஐடிஃஎப்.
இது காஸாவில் உள்ள பல்வேறு மருத்துவமனை கட்டிடங்கள் ஹமாஸ் இயக்கத்தின் பயங்கரவாத தளங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெளிவாக நிரூபிக்கும் ஒரு ஆதாரம் என்றும் ஐடிஃஎப் கூறியுள்ளது.
ஆனால், ஏற்கனவே இஸ்ரேல் வெளியிட்ட அல்-ஷிஃபா மருத்துவமனையின் ஹமாஸ் இயங்குதளம் இப்படித்தான் இருக்கும் என்று கணினியால் உருவாக்கப்பட்ட பரந்த மற்றும் சிக்கலான அமைப்பு கொண்ட வீடியோவை ஒத்தது போல் இல்லாததால் புதிய வீடியோ இன்னும் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
ஹமாஸ் இயக்கம் காஸாவில் அல் - ஷிஃபா உள்ளிட்ட மருத்துவமனைகளை தங்களது கட்டளை மையங்களாகவும், ஆயுத சேமிப்பு கிடங்குகளாகவும் பயன்படுத்தியதாக உளவுத்துறை தகவல் உள்ளதாக அமெரிக்காவும் கூறியுள்ளது.
அல் - ஷிஃபா வளாகத்தில் ஹமாஸின் முக்கிய தலைமையகம் உள்ளது என்ற தங்களது கூற்றை நிரூபிக்க இஸ்ரேல் இந்த அமெரிக்க உளவுத்தகவலையே மேற்கோள் காட்டுகிறது. ஆனால், அமெரிக்க அறிக்கையில் கூட ‘node” என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளதால் இது சிறிய அளவிலான செயல்பாட்டை குறிக்கலாம்.
இஸ்ரேல் நம்பகமான குற்றச்சாட்டுகளை அடுக்குவதாக நம்புகிறது. மேலும் ஆதாரங்கள் கிடைக்கும்போது அதை அம்பலப்படுத்த ஆர்வமாக இருக்கிறது.
இஸ்ரேலின் நட்பு நாடுகள் ஹமாஸை அழித்தொழிப்பதற்காக அதன் ராணுவ எதிர் தாக்குதலை ஆதரிக்கும் போதிலும், ஏராளமான மக்கள் மீதும் இதில் தாக்குதல் நடத்தப்படுவதில் அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஹமாஸ் சுகாதார அமைச்சகம் கூறியல்ல தகவலின்படி தாக்குதல் தொடங்கியதிலிருந்து 12,300 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2000த்திற்கும் அதிகமான மக்கள் தகர்க்கப்பட்ட கட்டட இடிபாடுகளின் கீழ் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இஸ்ரேலிய அரசின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பணயக்கைதிகளின் குடும்பங்கள் தரும் அழுத்தத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார். ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டுள்ள தங்களது குடும்பத்தினரை விடுவிக்க அவர் இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள் அவர்கள்.
கடந்த சனிக்கிழமை பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு முன்னுரிமை வழங்குமாறு இஸ்ரேலிய அரசை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டெல் அவிவ் முதல் ஜெருசலேம் வரை பேரணியாக சென்று நெதன்யாகுவின் இல்லத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும் பிரதமர் தனது இலக்கில் தெளிவாக இருக்கிறார்.
தனது முதல் இலக்கு ஹமாஸை அழிப்பது, இரண்டாவது பணயக்கைதிகளை மீட்பது மற்றும் மூன்றாவது காஸாவில் இருந்து வரும் அச்சுறுத்தலுக்கு முடிவு கட்டுவது என்று கூறியுள்ளார் அவர்.
மருத்துவமனைக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதை தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
நேற்று இரவு, இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அடியில் 10 மீ ஆழத்தில் 55 மீ நீளமுள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் சுரங்கப்பாதை இருப்பதாகக் கூறும் காட்சிகளை வெளியிட்டது.
இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ள வீடியோவில், அல்-ஷிஃபா வளாகத்தில் உள்ள இடிபாடுகளுக்கு மத்தியில், ஆழமான படிக்கட்டுக்கான நுழைவாயில் தரை மட்டத்தில் காட்டப்பட்டுள்ளதை காணமுடிகிறது..
"இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் கட்டளை மையத்திற்குள் நுழைவதை தடுக்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு சொந்தமான இடங்களுக்குள் நுழைவதை தடுக்கவும், அவர்கள் வீடியோவில் காணப்படும் கதவுகளைப் பயன்படுத்துகிறார்கள்,” என இஸ்ரேல் பாதுகாப்பு படை தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த சுரங்கப்பாதை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
அல்-ஷிஃபாவின் கீழ் ஹமாஸ் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் இருப்பதாக இஸ்ரேலியப் படைகள் பல வாரங்களாக கூறி வந்தன. ஆனால், மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களும் அதிகாரிகளும் அதனை தொடர்ந்து மறுத்து வந்தனர்.