‘அன்புள்ள அமெரிக்காவுக்கு..’ ஒசாமா பின்லேடன் கடிதம் இணையத்தில் வைரல்
17 Nov,2023
.
அமெரிக்காவுக்கு எதிரான அல் கய்தாவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தியும், அமெரிக்காவின் பெரியண்ணன் ஆதிக்கத்துக்கு எதிராகவும், அல் கய்தாவின் தலைவராக இருந்த ஒசாமா பின்லேடன் எழுதிய கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் உச்சத்தை எட்டியிருப்பதன் மத்தியில், இஸ்ரேலின் பின்னணியில் இருக்கும் அமெரிக்காவை விமர்சிக்கும் வகையில் நெட்டிசன்கள் பகிர்ந்து வரும், இந்த கடிதத்தின் நகல்களை சமூக ஊடகங்கள் தடை செய்தும் வருகின்றன.
ஒசாமா பின்லேடன் 20 வருடங்களுக்கு முன்னர் எழுதிய இந்த கடிதம் முதலில் டிக் டாக்கில் வெளியானது. அதனையடுத்து எக்ஸ் தளம் உள்ளிட்ட இதர சமூக ஊடகங்களிலும் ஒசாமா பின்லேடன் கடிதம் பகிரப்படுகிறது. காசாவின் பாலஸ்தீனப் போராளிகளான ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான இஸ்ரேல் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதை விமர்சிப்போர், இந்த ஒசாமா கடிதத்தை பெரிதும் பரப்பி வருகின்றனர்.
.
ஒசாமா கடிதத்தை முன்வைத்து மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல்கள், அங்கு நிலவும் அமைதியின்மை ஆகியவற்றில் அமெரிக்காவின் பங்கு குறித்து தீவிர விவாதம் எழுந்துள்ளது. செப்.11, 2001 அமெரிக்கத் தாக்குதலில் 2,997 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதன் ஒரு வருட இடைவெளியில் இந்த கடிதம் வெளியானதாக சொல்லப்படுகிறது. ”நாங்கள் ஏன் போராடுகிறோம்? அமெரிக்காவை நாங்கள் ஏன் எதிர்க்கிறோம்?” உள்ளிட்ட கேள்விகளும் அதற்கான விளக்கங்களுமாக நீளும் அந்த கடிதம், அமெரிக்கா மீதான மதிப்பீட்டை சரிப்பதாகவும்; அமெரிக்காவின் முகமூடியை கிழிப்பதாகவும் பலவேறாக விமர்சனங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.
சர்ச்சை எழுந்ததை அடுத்து, டிக் டாக் நிர்வாகம் தனது தளத்தில் பகிரப்படும் ஒசாமா கடித நகல்களை நீக்க ஆரம்பித்தது. இந்த கடிதத்தை அடையாளம் காண உதவிய #lettertoamerica என்ற ஹேஷ்டேக் டிக் டாக்கில் தடை செய்யப்பட்டது. சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமான பைட் டான்ஸுக்கு சொந்தமான டிக் டாக் செயலி, திட்டமிட்டு ஒசாமா பின்லேடன் கடிதத்தை பரப்புவதாக, முன்னாள் தென் கரோலினா கவர்னர் நிக்கி ஹேலி உள்ளிட்டோர் குற்றம் சாட்டினர். தங்களுக்கு எதிரான பிரச்சாரத்தை டிக் டாக் ஊக்குவிப்பதாகவும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது.
.
அமெரிக்காவை தீவிரமாக விமர்சிக்கும் ஒசாமாவின் இந்த கடித ஆவணம் கார்டியன் இதழின் இணையதளத்தில் இருந்தும் நீக்கப்பட்டது. எனினும் ஆப்கானிஸ்தான், ஈராக், சோமாலியா, செச்சினியா மற்றும் லெபனானில் அமெரிக்காவின் தலையீடுகளை காரசாரமாக தாக்கும் இந்த கடிதம் இணையத்தில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. இந்த நாடுகளின் வரிசையில், பாலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்காவை இணையவாசிகள் வறுத்தெடுக்கவும் ஒசாமா கடிதம் வழி செய்துள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான அடுத்த தாக்குதலுக்கு தயாராகி வந்த ஒசாமா பின்லேடனை, பாகிஸ்தானில் வைத்து 2011-ம் ஆண்டு அமெரிக்கா கொன்றது குறிப்பிடத்தக்கது.