.
இருள் சூழ்ந்த நிலையில், சுற்றுச்சுவரில் குகை போன்ற ஒரு துளை வழியாக அல்-ஷிஃபா மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்தோம். இஸ்ரேலிய படைகளுக்குப் பாதுகாப்பான வழியை உருவாக்க ஒரு கவசப்படுத்தப்பட்ட புல்டோசரால் செவ்வாயன்று அந்த சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது.
இஸ்ரேல் இந்த இடத்தில் கண்டுபிடித்ததாகக் கூறுவதைப் பார்க்க இஸ்ரேல் பாதுகாப்பு படையால் (ஐடிஎஃப்) அழைக்கப்பட்ட முதல் பத்திரிகையாளர்கள் பிபிசி மற்றும் மற்றொரு தொலைக்காட்சிக் குழுவினர் மட்டுமே.
கூடுதலாக ஒளி இருந்தால் இங்கு ஆபத்தானது. எனவே இருட்டில், எங்கள் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்ட ஆயுதப் படைகளை பின்தொடர்ந்து, தற்காலிக கூடாரங்கள், இடிபாடுகள், தூங்கிக் கொண்டிருக்கும் மக்களைக் கடந்து உள்ளே சென்றோம்.
மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் தற்போது மின்சாரம், உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் பல நாட்களாக வேலை செய்து வருவதாகவும், அதன் விளைவாக பச்சிளங் குழந்தைகள் உட்பட கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகள் இறந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
காஸாவில் நடந்த மோதல்களால் இடம்பெயர்ந்தவர்கள் மருத்துவமனை வளாகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
.
அல் -ஷிஃபா மருத்துவமனைக்குக் கீழே, மற்றும் பிற இடங்களிலும் ஹமாஸ் பூமிக்கு அடியில் சுரங்கங்களில் இயங்கி வருவதாக இஸ்ரேல் கூறுகிறது.
முகக் கவசம் அணிந்த சிறப்புப் படையினர் நம்மை கட்டடத்தின் உள்ளே அழைத்துச் சென்றனர். அங்கிருந்த இடிபாடுகளும் உடைந்த கண்ணாடிகளும் அங்கு நிலைமை இன்னும் பதற்றமாகத்தான் இருக்கிறது என்பதை உணர்த்தியது.
மருத்துவமனையை தன் கட்டுப்பாட்டுக்குள் இஸ்ரேல் கொண்டு வந்த அடுத்த நாளே நாம் அங்கு நிற்கிறோம் என்றால், இஸ்ரேல் தாங்கள் எதற்காக மருத்துவமனைக்குள் வந்தனர் என்பதை உலகுக்குக் காட்ட எவ்வளவு ஆர்வமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
நல்ல வெளிச்சமான எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப்படும் பகுதியில், ராணுவ தளபதி ஜோனாதன் கான்ரிகஸ் துப்பாக்கிகள், வெடி மருந்துகள், குண்டு துழைக்காத ஆடைகள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று இடங்களைக் காண்பித்தார். அவர்கள் 15 துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளைக் கண்டுபிடித்ததாகவும் கூறினார்.
மருத்துவமனைக்கு உள்ளேயும் வெளியேயும் செல்வதற்கான வழிகளைக் கொண்ட வரைபடம், ராணுவ துண்டுப் பிரசுரங்களை கார்னிகஸ் காண்பித்தார்.
மருத்துவமனைகளை ராணுவ நடவடிக்கைகளுக்காக ஹமாஸ் பயன்படுத்துகிறது என்பதை இதன்மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது என்று கார்னிகஸ் கூறினார்.
“நிறைய கணினிகள், மற்ற கருவிகளைக் கைப்பற்றியுள்ளோம். பணயக் கைதிகள் குறித்து அவற்றில் தகவல்கள் இருக்கலாம்,” என்றார்.
.
காஸாவுக்குள் கடத்திச் சென்ற பிறகு, எடுக்கப்பட்ட பணயக் கைதிகளின் புகைப்படங்கள் வீடியோக்கள் மடிக்கணினியில் இருப்பதாக அவர் கூறுகிறார். அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதலின்போது, கைது செய்யப்பட்ட ஹமாஸ் போராளிகளை விசாரணை செய்யும் வீடியோவை இஸ்ரேல் காவல்துறை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
அந்த வீடியோவும் இந்த மடிக்கணினியில் உள்ளது எனவும் இதனால் ஹமாஸ் இந்த இடத்தில் சமீப காலம் வரை இருந்ததை இது குறிக்கிறது எனவும் அவர் கூறினார். எனினும் லேப்டாப்பில் என்ன உள்ளது என்பதை பிபிசிக்கு காட்டவில்லை.
“தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது சிறு பகுதிதான். நாங்கள் வருவதைத் தெரிந்து ஹமாஸ் இங்கிருந்து வெளியேறிவிட்டனர். இந்த பொருட்களை எடுத்துச் செல்ல முடியாததாலேயே அவர்கள் விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். ஆனால் அவர்களிடம் இன்னும் நிறைய இருக்கும் என்பதே எங்கள் கணிப்பு,” என்று அவர் கூறினார்.
மருத்துவமனையின் உள்ளே நுழைவதற்குப் பல வாரங்களாக இஸ்ரேல் ராணுவம் முயன்று வருகிறது. மருத்துவமனையைச் சுற்றியுள்ள தெருக்கள், காஸாவின் மிக மோசமான மோதல்களைக் கடந்த சில நாட்களில் பார்த்துள்ளது.
மருத்துவமனை உள்ளே எங்கள் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. எங்களால் மிகக் குறைந்த நேரமே அங்கிருக்க முடிந்தது. அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளிடம் பேச முடியவில்லை.
.
காஸா நகருக்கு தெற்கில் நிறுத்தி வேறு வாகனத்துக்கு மாறினோம். இடிபாடுகள் மற்றும் கான்கிரீட் குவிந்த குன்றுகள் மீது ஏறிச் சென்றோம்.
நெருப்பு மூட்டி, கிடைத்த பொருட்களை வைத்து இரவு சாப்பாடு சமைத்துக் கொண்டு சிறு குழுக்களில் ராணுவ வீரர்கள் அமர்ந்திருந்தனர்.
“இந்த உணவு எப்படி சமைக்கப்படுகிறது என்பது ரகசியம்,” என்று ஒருவர் நகைச்சுவையாகக் கூறினார்.
அவர்களுக்கு மேலே, தரைமட்டமான கட்டடங்கள் இருந்தன. ஒரு நட்சத்திரத்தை வரைந்து அதனுள் ஐ.டி.எப் என சிவப்பு சாயத்தால் எழுதப்பட்டிருந்தது. அதற்கு மேலே “மீண்டும் எப்போதும் இல்லை” என்றும் எழுதப்பட்டிருந்தது.
.
ஹமாஸுடனான மோதலில், அக்டோபர் 7ஆம் தேதி நடந்த தாக்குதல் இஸ்ரேலின் கணிப்புகளை மாற்றியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஹமாஸை தீவிரவாத அமைப்பு என வகைப்படுத்தியுள்ளது.
ஹமாஸின் அரசியல் மற்றும் ராணுவ அதிகாரத்தை ஒட்டுமொத்தமாக ஒழித்துப் பல ஆண்டுகளாக நீடிக்கும் சண்டைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று இஸ்ரேல் உறுதி பூண்டுள்ளது. அதன் அர்த்தம் அல்-ஷிஃபா மருத்துவமனை உட்பட காஸா நகரின் மையப் பகுதிக்குள் இஸ்ரேல் நுழைவதே ஆகும்.
மருத்துவமனையின் கீழே சுரங்கங்களை இன்னும் இஸ்ரேல் படைகள் தேடிக் கொண்டிருக்கின்றன. ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அங்குதான் பணயக் கைதிகளுடன் பதுங்கி இருப்பார்கள் என இஸ்ரேல் நம்புகிறது.
இஸ்ரேலின் போரில் இந்த கட்டடம் மையப் புள்ளியாக மாறியுள்ளது. இந்த இடத்தை ஹமாஸ் நடவடிக்கைகளுக்கான பிரதான அதிகார மையமாக இஸ்ரேல் கூறுகிறது.
.
இந்த மருத்துவமனையை அடைய இஸ்ரேல் படைகளுக்குப் பல வாரங்கள் ஆனது. இந்த மோதலை ஒட்டி நடைபெறும் கொடூரமான இந்த தகவல் போரில், இஸ்ரேலின் உண்மைக்கான நேரம் இது.
மருத்துவமனையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து 24 மணிநேரம் ஆன பிறகு, ஹமாஸ் போராளிகள் மற்றும் பணயக் கைதிகள் குறித்த தகவல்களைக் கொடுக்கும் கருவிகள் மற்றும் ஆயுதங்கள் கிடைத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் இரண்டும் இன்னும் இஸ்ரேலுக்கு கிடைக்கவில்லை.
நாங்கள் மருத்துவமனையை விட்டு வெளியேறினோம். அகண்ட நிழற்சாலை வழியாக காஸாவின் கடற்கரை சாலையை அடைந்தோம். காஸா தற்போது டாங்கிகளால் ஆளப்படுகிறது. இந்த சாலைகள் பூகம்பத்தால் தரைமட்டமாக்கப்பட்டது போல் மோசமாகக் காட்சியளிக்கின்றன.
இந்த தெருக்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இஸ்ரேல் என்னவெல்லாம் செய்திருக்க வேண்டும் என்று புரிகிறது.