தந்தை கொடுத்த பயிற்சி சக மாணவனின் உயிரை காப்பாற்றிய 4 வயது சிறுவன்
14 Nov,2023
சார்ஜாவில் 4ம் வகுப்பு மாணவன், ஹெயிம்லிச் மானுவர் முறை மூலம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தனது சக நண்பனின் உயிரை காப்பாற்றிய சம்பவம் உலகம் முழுவதும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
ஐக்கிய அரபு நாடுகளின் சார்ஜா நகரில் 4ம் வகுப்பு மாணவர்கள் பள்ளியில் இருந்த போது மாணவன் ஒருவன், நாணயம் ஒன்றை விழுங்கியுள்ளார். இதனால் மூச்சு விட முடியாமல் திணறிய அவர், சக மாணவரான ஹர்ப்-அல்-முஹைரி என்பவரை உதவிக்கு அழைத்துள்ளார்.
முஹைரியின் தந்தை அந்நாட்டின் சுகாதாரத் துறையில் பணியாற்றி வருபவர் ஆவார். அவர் தனது குழந்தைகளுக்கு அவசரகால மருத்துவ முதலுதவி சிகிச்சைகளை பயிற்றுவித்துள்ளார். மாணவனின் உயிரை காப்பாற்றுவதற்காக உடனடியாக முஹைரி அவருக்கு ஹெயிம்லிச் மானுவர் என்ற முறையை பயன்படுத்தி முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.
இதையடுத்து மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த நாணயம் வெளியில் வந்து விழுந்தது. இதனால் மாணவர் உயிர்பிழைத்தார். மாணவர் முஹைரியின் இந்த சமயோசித செயல்பாட்டிற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் சார்ஜா காவல்துறையின் தலைவர் நேரில் அழைத்து பாராட்டு பத்திரம் கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த புகைப்படங்கள் உலகம் முழுவதும் பாராட்டுகளை குவித்து வருகிறது. ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் இதுபோன்ற நாணயங்களை விழுங்கி விட்டால் அவர்களின் உயிரை காப்பாற்ற இந்த முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதை மேற்கொள்வது எப்படி என்பது குறித்து ரெட் கிராஸ் அமைப்பு வழிமுறைகளை குறிப்பிட்டுள்ளது.
1. முதலில் மூச்சுவிட சிரமப்படும் நபரின் பின்னால் நிற்க வேண்டும்.
2. பின்னர் ஒரு கையை பாதிக்கப்பட்டவரின் நெஞ்சு பகுதியின் கீழே வைத்துக்கொண்டு அவரை குனிய வைக்க வேண்டும்.
3. பின்னர் பின்னால் நிற்பவர் பாதிக்கப்பட்டவர்களின் முதுகில் கை முட்டியை மடக்கி 5 முறை குத்திவிட்டு, நெஞ்சுப்பகுதியில் 5 முறை மிதமான அழுத்தத்தில் அழுத்த வேண்டும்.
4. இதில் அந்த நாணயம் வெளியே வராவிட்டால், 5 குத்துகள் 5 அழுத்தம் ஆகியவை கொடுத்து மீண்டும் ஒருமுறை முயற்சிக்கலாம்.
மூச்சுக்குழாயில் சிக்கிய பொருள் வெளியே வரும் வரை இவ்வாறு முயற்சிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.