பலாத்காரம் செய்த பின்னர் காதலியை 111 முறை குத்தி கொன்றவர் உக்ரைன் போர் முனைக்கு அனுப்பப்பட்டார்
11 Nov,2023
காதலியை பலாத்காரம் செய்து விட்டு, 111 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொன்ற காதலனுக்கு ரஷ்ய அதிபர் புடின் மன்னிப்பு வழங்கி போர் முனைக்கு அனுப்பி வைத்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ரஷ்யா தலைநகர் மாஸ்கோவை சேர்ந்தவர் விளாடிஸ்லாவ் கன்யூஸ். இவர் தனது முன்னாள் காதலியான வேரா பெக்டெலேவாவை பலாத்காரம் மற்றும் சித்ரவதை செய்து 111 முறை கத்தியால் குத்தினார். மூன்றரை மணி நேரம் அவர் இந்த சித்ரவதையை தனது முன்னாள் காதலி வேராவுக்கு செய்துள்ளார். பின்னர் அவர் காதலி கழுத்தை ஒரு கேபிள் கம்பி மூலம் நெரித்துக்கொன்றார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் 7 முறை போலீசாருக்கு போன் செய்தும் எந்த பதிலும் இல்லை. அதன்பின் வந்த போலீசார் விளாடிஸ்லாவ் கன்யூசை கைது செய்தனர்.
இந்த வழக்கில் அவருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது ஒருவருடம் கூட முடியவில்லை. ஆனால் அவருக்கு ரஷ்ய அதிபர் புடின் பொதுமன்னிப்பு வழங்கி உள்ளார். மேலும் அவரை உக்ரைன் போர் முனைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார். நவ.3ம் தேதி உத்தரவுப்படி தெற்கு ரஷ்யாவில் உள்ள ரோஸ்டோவுக்கு கன்யூஸ் மாற்றப்பட்டார். ராணுவ சீருடையில் ஆயுதம் ஏந்தியபடி கன்யூஸ் இருக்கும் புகைப்படங்களை பார்த்த வேராவின் தாயார் ஒக்ஸானா, ‘இது எனக்கு ஒரு அடி. கொடூரமான கொலைகாரனுக்கு எப்படி ஆயுதம் கொடுக்க முடியும்? எந்த நேரத்திலும் நம்மில் யாரையும், பாதிக்கப்பட்டவர்களையும், பழிவாங்கும் நோக்கில் கொல்லலாம்’ என்றார்.