.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் அமெரிக்க ராணுவ உபகரணங்களை வாங்குவதற்காக தைவான் அரசுக்கு 80 மில்லியன் டாலர்கள் நிதியுதவி வழங்கியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த நகர்வுக்கு கடுமையான கண்டங்களை தெரிவித்துள்ள சீனா தீவிரமான எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளது.
இதை உன்னிப்பாக கவனிக்கவில்லையென்றால், இது ஒன்றும் அவ்வளவு பெரிய தொகையாக தெரியாது. ஏனெனில், இந்த தொகையை வைத்து கொண்டு தைவானால் ஒரு நவீன போர் விமானத்தை கூட வாங்க முடியாது.
இது மட்டுமல்ல, தைவான் ஏற்கனவே 14 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை அமெரிக்காவிடம் ஆர்டர் செய்துள்ளது. இந்நிலையில், இந்த 8 கோடி டாலருக்கு மட்டும் ஏதும் சிறப்பு அர்த்தம் உள்ளதா?
பொதுவாகவே தைவானுக்கு அமெரிக்கா எந்த விதமான ராணுவ உதவி செய்தாலும் அதை சீனா எதிர்ப்பது இயல்புதான்.
சீனாவிடமிருந்து பலத்த எதிர்ப்பு எழுவது ஏன்?
ஆனால், இந்த முறை சீனாவின் எதிர்வினை வழக்கத்தை விட சற்று வித்தியாசமானதாக உள்ளது. இந்த எட்டு கோடி டாலர் என்பது எந்த வகையிலும் கடன் அல்ல. மாறாக அது அமெரிக்க வரிசெலுத்துவோரின் பணம்.
கடந்த நாற்பது வருடங்களில் இதுவே முதல் முறையாக அமெரிக்கா அதன் சொந்த பணத்தில் வாங்கப்பட்ட ஆயுதங்களை தான் முறையாக கூட அங்கீகரிக்காத ஒரு பகுதிக்கு அனுப்புவதாகும்.
இது வெளிநாட்டு ராணுவ நிதி என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதலுக்கு பிறகு, இந்த திட்டத்தின் கீழ்தான் உக்ரைனுக்கு 4 பில்லியன் டாலர் ராணுவ உதவிகள் வழங்கப்பட்டன.
இதற்கு முன்பு இதே திட்டத்தின் கீழ், ஆப்கானிஸ்தான், ஈராக், இஸ்ரேல் மற்றும் எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.
ஆனால், இது வரை ஐக்கிய நாடுகள் சபையால் முறையாக அங்கீகரிக்கப்பட்ட நாடுகளுக்கு மட்டுமே அமெரிக்கா நிதியுதவி வழங்கியுள்ளது.
தைவானோ அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இல்லை.
,
1979ம் ஆண்டு தைவானுக்கு பதிலாக சீனாவிற்கு அமெரிக்கா தூதரக அங்கீகாரம் வழங்கியது.
ஆனால் அதற்கு பிறகும் கூட, அமெரிக்கா தைவான் உறவுகள் சட்டத்தின் கீழ் தொடர்ந்து ஆயுதங்களை தைவானுக்கு வழங்கி வந்தது.
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் ஒருவேளை சீனா தாக்குதல் நடத்தினால் அதிலிருந்து தற்காத்து கொள்ள தேவையான ஆயுதங்கள் மட்டுமே அதற்கு வழங்கப்பட்டுள்ளன.
வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையிலான உறவுமுறையில் சமநிலை மீறாத வகையில் ஆயுதங்களின் அளவு குறைந்த அளவிலேயே வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா பல தசாப்தங்களாகவே தைவானுக்கு தீவிர ஆதரவாளராக இருந்தாலும், சீனாவுடன் வர்த்தகம் செய்வதில் ஒரு குழப்பமான நிலையையே நாடி வருகிறது.
ஆனால் கடந்த தசாப்தத்தில் தைவானில் உள்ள ராணுவ சமநிலை சற்று சீனாவிற்கு சாதகமாக சாய்ந்துள்ளது. இது போன்ற சூழலில் பழைய திட்டங்கள் எதுவும் எடுபடாது.
அமெரிக்கா தனது கொள்கைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று கூறியுள்ளது. ஆனால், இந்த கொள்கைகள் பல முக்கியமான விஷயங்களில் மாறியிருப்பது போல் தெரிகிறது.
எஃப்.எம்.எஃப் மூலம் பொருளாதார நிதி வழங்குவது தைவானை முறையாக அங்கீகரிப்பது என்ற கருத்தை உடனடியாக மறுத்துள்ளது அமெரிக்க அரசு.
ஆனால், தைவானில் அமெரிக்கா அதன் உறவை மறுவரையரை செய்வது தெளிவாக தெரிகிறது.
ஆயுதங்களை முடிந்தளவு வேகமாக வாங்க சொல்லி தைவானுக்கு அமெரிக்கா அழுத்தம் தருவதையும் கண்கூடாக பார்க்க முடிகிறது.
அதே சமயம், சீனாவின் ராணுவ சக்தியை எதிர்கொள்ள முடியாத தைவானோ, அமெரிக்காவின் உதவியை பெற வேண்டிய இடத்தில் உள்ளது.
,
அமெரிக்க பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளின் தலைவர்கள், மற்றும் தைவானிய தலைவரும், தைவான் அதிபர் சாய் இங்-வென்னுக்கு நெருக்கமானவருமான வெங் டிங்-யு ஆகியோர் இந்த செயல்பாடுகளின் வழி அமெரிக்கா நேரடியாக சீனாவுக்கு தெளிவான செய்தியை அனுப்புகிறது என்று நம்புகிறார்கள்.
“எங்களின் ராணுவ திறனை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை அமெரிக்கா வலியுறுத்துகிறது. இதன் மூலம் அது எங்களுடன் நிற்கிறது என்ற தெளிவை சீனாவுக்கு வழங்குகிறது” என்று அவர் கூறுகிறார்.
எட்டு கோடி டாலர் தொகை என்பது பனிமலையின் உச்சி போன்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதமே அதிபர் பைடன் தனது அதிகாரங்களை பயன்படுத்தி 500 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ராணுவ சேவைகள் மற்றும் ஆயுதங்களை தைவானுக்கு விற்க முடிவு செய்து விட்டார் என்று அவர் குறிப்பிடுகிறார்.
தைவான் தனது இரண்டு தரைப்படை பட்டாலியன்களை பயிற்சிக்காக அமெரிக்கா அனுப்ப இருப்பதாகவும் வெங் கூறியுள்ளார். 1970ம் ஆண்டிலிருந்து இன்று வரை முதல் முறையாக இது நடைபெறுகிறது.
ஆனால், உண்மையான பிரச்னை என்றால் அது பணம்தான். அடுத்த 5 ஆண்டுகளில் இது 10 பில்லியன் டாலர்களாக உயரும் என்று அவர் நம்புகிறார்.
,
தைவானிய திங்க் டாங்க் ப்ராஸ்பெக்ட் அறக்கட்டளையின் தலைவரான லாய் ஐ சிங்க் ராணுவ உபகரணங்கள் சார்ந்த ஒப்பந்தங்கள் பத்து ஆண்டுகள் வரை எடுக்கலாம் என்று நம்புகிறார்.
அமெரிக்கா தனது சொந்த நிதியில் இருந்து FMF வழியாக இந்த ஆயுதங்களை அனுப்புகிறது. இது போன்ற சூழலில் எந்த விதமான ஒப்புதல் செயல்முறைக்கும் நாம் செல்ல வேண்டியதில்லை என்று அவர் கூறுகிறார்.
இது மிகவும் முக்கியமானது ஏனெனில், அமெரிக்க காங்கிரசில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக யுக்ரைனுக்கு உதவ அனுப்பப்பட வேண்டிய பல பில்லியன் டாலர் முடங்கியுள்ளது.
ஆனால், தற்போது காஸாவில் நடைபெற்று வரும் போர் காரணமாக தைவானுக்கு அனுப்பப்பட வேண்டிய ஆயுதங்கள் பாதிக்கப்படலாம். இதே நிலை தான் யுக்ரைன் போரின் போதும் ஏற்பட்டது.
அமெரிக்க அதிபர் யுக்ரைன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்காக போர் நிவாரண நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதில் கூடுதலாக தைவானுக்கான நிதியும் அடங்கும்.
தைவானில் உள்ள தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள யாரிடம் வேண்டுமென்றாலும் அமெரிக்காவின் பணம் எதற்காக பயன்படுத்தப்பட்டது என்று கேட்டுப்பாருங்கள், அதற்கான பதில் பெரும்பாலும் சிரிப்பும் அமைதியுமாகதான் இருக்கும்.
ஆனால், இது ஜாவலின் மற்றும் ஸ்டிங்கர் ஆகிய விமானங்களை தாக்கும் ஏவுகணைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது என்று கணிக்கலாம் என கூறுகிறார் டாக்டர் லாய். இந்த ஆயுதம் மிகவும் திறன்மிக்கது மற்றும் பாதுகாப்பு படைகள் எளிதில் பயன்படுத்த கற்றுக்கொள்ளும் வகையிலானதும் ஆகும்.
நம்மிடம் அவை போதுமான அளவில் இல்லை. அவை இன்னும் அதிகமாக நமக்கு தேவை. யுக்ரைனில் மிக வேகமாகவே இந்த ஏவுகணை தீர்ந்து விட்டது. யுக்ரைன் அவற்றை பயன்படுத்தும் விதத்தோடு, நம்மிடம் இருக்கும் எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்த்தல், “பத்து மடங்கு அதிகமான ஸ்டிங்கர் ஏவுகணைகள் நமக்கு தேவை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
,
தைவானை தொடர்ந்து கண்காணித்து வரும் நபர்களின் கூற்றுப்படி, தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் தன்னை பாதுகாத்து கொள்ள தைவான் தயாராக இல்லை.
அதற்கு பல காரணங்கள் உண்டு.
தைவானிய ராணுவத்தில் நூற்றுக்கணக்கான பழைய டாங்கிகள் உள்ளன. ஆனால், நவீன மற்றும் இலகுரக ஏவுகணைகள் மிக குறைவு. கடந்த ஐம்பது ஆண்டுகளில் இதன் ராணுவ தலைமை அமைப்புகள் திட்டங்கள் மற்றும் கொள்கைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பல முன்கள படைகளில் தேவைக்கும் குறைவாக 60 சதவீத மனிதசக்தி மட்டுமே உள்ளது.
சில அறிக்கைகளின்படி, சீனாவில் தைவானின் எதிர் உளவு நடவடிக்கைகள் மிகவும் குறைவு மற்றும் ராணுவத்தில் ஆட்களை சேர்ப்பதிலும் பெரும் குறைபாடு இருப்பதாக கூறப்படுகிறது.
2013ம் ஆண்டு தைவான் தனது ராணுவ சேவைகளை ஒரு வருடத்தில் இருந்து நான்கு மாதங்களாக குறைத்தது. ஆனால், மீண்டும் அது ஒரு வருடம் என்ற பழைய நிலைக்கே மாற்றப்பட்டுவிட்டது.
ஆனால் இதை விட பெரிய சவால்கள் உள்ளன. இதில் பங்கு பெறும் இளைஞர்கள் இதை கேலியாக கோடைகால முகாம் என்று கூறுகின்றனர்.
இந்த பயிற்சியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் சமீபத்தில் கூறிய தகவல் பின்வருமாறு, “ எங்களுக்கு தொடர்ச்சியான பயிற்சியெல்லாம் இருக்காது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு செல்வோம். அங்கு 1970களில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை கொண்டே பயிற்சி எடுத்து கொள்வோம்.”
“ ஆனால், எப்படி குறிவைக்க வேண்டும் என்பதற்கு கூட முறையான பயிற்சி இருக்காது. எனவே, யாராலும் குறி பார்த்து சுட முடியாது. நாங்கள் உடற்பயிற்சி கூட செய்ய மாட்டோம். இறுதியில் உடற்தகுதி சோதனை நடைபெறும் அதுக்கு கூட எந்த முன்தயாரிப்பும் நாங்கள் செய்யமாட்டோம்”
ராணுவத்தின் உயர் அதிகாரிகள் யாரும் இந்த இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தராதது குறித்து இந்த இளைஞர் விவரித்துள்ளார்.
இந்த உயர்மட்ட அதிகாரிகள் இந்த இளைஞர்களுக்கு பயிற்சி வழங்குவதில் கூட ஆர்வம் காட்டுவதில்லை. அதற்கு ஒரு காரணம் இந்த இளைஞர்கள் மிக குறுகிய காலத்திலேயே இந்த இடத்திற்கு வந்து விடுகிறார்கள்.
.
தைவான் தன்னை மறுசீரமைப்பு செய்து கொள்ளவும், அதன் ராணுவத்தை மறுஒருங்கிணைப்பு செய்து கொள்வதற்குமான நேரம் வேகமாக கைநழுவி வருகிறது என்று அமெரிக்காவில் நம்பப்படுகிறது.
இதுபோன்ற சூழலில், தைவான் ராணுவத்திற்கு பயிற்சி கொடுக்க தொடங்கியுள்ளது அமெரிக்கா.
பல தசாப்தங்களாகவே, இந்த தீவை தாக்குவது சீனாவுக்கு ஆபத்தானது என்று தைவானிய அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ தலைவர்கள் நம்புகின்றனர். அதனால், பிரிட்டனை போலவே தைவானும் ராணுவத்திற்கு பதிலாக கடற்படை மற்றும் விமானப்படை மீது கவனம் செலுத்தி வருகிறது.
‘இதன் நோக்கமே அவர்களுடன் தைவான் ஜலசந்தியில் சண்டையிட்டு, கடற்கரையில் அவர்களை அழிப்பதுதான். அதற்காகவே நாங்கள் விமானப்படை மற்றும் கடல் பாதுகாப்பில் அதிக வளங்களை செலவிட்டுள்ளோம்’ என்று விவரிக்கிறார் டாக்டர்.லாய்.
ஆனால், தற்போது சீனாதான் உலகின் பெரிய கடற்படை மற்றும் சிறந்த விமானப்படையை கொண்டுள்ளது.
திங்க் டேங்கால் ஒருங்கிணைக்கப்பட்ட வார் கேமிங் பயிற்சியின் மூலம் சீனாவுடன் போர் நடந்தால் தைவான் கடற்படை மற்றும் விமானப்படை 96 மணிநேரத்தில் அழிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாக தற்போது தைவான் தங்களை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இது தைவானை கைப்பற்றுவதில் சீனாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும்.
அது போன்ற சூழலில், முழு கவனமும் தரைப்படைகள், காலாட்படை மற்றும் பீரங்கிகள் மீது செலுத்தப்படும். இதன்வழி , கடற்கரைகள் மீதான தாக்குதல்களை தடுக்க முடியும்.
இதுமட்டுமல்ல, தேவைப்பட்டால் தைவான் நகரங்கள் மற்றும் காடுகள் நிறைந்த மலைகளில் அமைக்கப்பட்டுள்ள தளங்களில் இருந்து சீன ராணுவத்தை எதிர்கொள்ள முடியும்.
.
ஆனால் இந்த திட்டம் தைவானை பாதுகாக்கும் பொறுப்பை நீண்ட நாட்களாக கவனிக்கப்படாத ராணுவத்தின் மீது தள்ளுகிறது.
“1979ம் ஆண்டு அமெரிக்கா தனது உறவை துண்டித்து கொண்ட பிறகு எங்களது ராணுவம் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த சூழலில் வியட்நாம் போர் நேரத்தில் அது அமெரிக்க ராணுவத்தின் கொள்கைகளில் சிக்கிக்கொண்டது” , என்கிறார் டாக்டர் லாய்.
இந்த விஷயம் சில காலத்திற்கு முன்பு வரை அமெரிக்காவிற்கோ அல்லது தைவானுக்கோ கவலையாக இல்லை.
90களில் தொடங்கி 2000மாவது ஆண்டுகள் வரை தைவான் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை சீனாவில் நிறுவி வந்தன.
சீன அரசு உலக வர்த்தக நிறுவனத்தில் இணையும் முயற்சியில் இருந்தது. அதில் வெற்றியும் பெற்றது. சீன பொருளாதாரத்தை உலகம் ஏற்றுக்கொண்டது. மேலும் அமெரிக்கா வர்த்தகம் மற்றும் முதலீடு மூலம் தைவான் ஜலசந்தியில் அமைதியை உறுதிப்படுத்தி விடலாம் என்று நினைத்தது.
.
ஆனால், ஜி ஜின்பிங்கின் எழுச்சி மற்றும் அவரின் தனித்துவமான தேசியவாதம் அதோடு சேர்த்து யுக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆகியவை சேர்ந்து இது போன்ற கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
யுக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களினால் தைவான் அதிர்ந்து போனது. இந்த போரில் பீரங்கிகள் முக்கிய பங்கு வகித்தன. அதிக வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டன மற்றும் அவற்றின் குறியும் துல்லியமாக இருந்தது.
ஒவ்வொரு முறையும் துப்பாக்கி சூடுக்கு பிறகு ரஷ்ய எதிர்தாக்குதலில் இருந்து தப்பிக்க சில நிமிடங்களில் தங்களது நிலைகளை மாற்றி கொள்ள வேண்டியிருந்ததை யுக்ரேனிய வீரர்கள் தெரிந்து கொண்டனர்.
ஆனால், பல தைவானிய பீரங்கி படைகள் வியட்நாம் போர் மற்றும் இரண்டாம் உலக போரை சேர்ந்த துப்பாக்கிகளையே கொண்டுள்ளன.
‘தனியாக தடுக்க முடியும் என்று எதிர்பார்க்காதீர்கள்’
இவை அனைத்துமே சிக்கலான மற்றும் மனிதர்களால் மட்டுமே இயக்கப்பட கூடியவை. மேலும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்த கடினமானவை.
இது போன்ற சூழலில், எதிர் ராணுவத்திற்கு இந்த படைகளை தாக்குவது சுலபமாகிவிடும். தைவானின் இந்த நிலையே அமெரிக்காவுக்கு நெருக்கடி தந்து நேரடி நடவடிக்கைக்குள் தள்ளுகிறது.
இந்த காரணத்திற்காகவே, தைவான் ராணுவ யூனிட்டுகள் பயிற்சிக்காக அமெரிக்கா அனுப்பப்படுகின்றன மற்றும் அமெரிக்க பயிற்சியாளர்கள் தைவான் வந்து தைவானிய கடற்படையினர் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு பயிற்சி அளிக்கின்றனர்.
ஆனால், தன்னால் தனியாக சீனாவை தடுத்து விட முடியும் என்று தைவான் நம்ப முடியாது என்று கூறுகிறார் தைபே தேசிய பாதுகாப்பு மற்றும் காவல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் வில்லியம் சாங். யுக்ரைன் போரிலிருந்து கற்றுக்கொண்ட மற்றுமொரு பாடம் இது என்கிறார் அவர்.
சர்வதேச சமூகமே தைவானுக்கு மதிப்பு இருக்கிறதா அல்லது இல்லையா என்று முடிவு செய்ய வேண்டும். ஜி7 அல்லது நேட்டோ ஆகியவை தைவான் முக்கியம் என்று கருதினால் இந்த பிரச்சனையை சர்வதேசமயமாக்க வேண்டும். ஏனெனில், இது சீனாவை அதன் ஆக்கிரமிப்பு நிலைப்பாடுக்கான விலை குறித்து சிந்திக்க வைக்கும் என்று அவர் கூறுகிறார்.
சீனாவின் அணுகுமுறையே தைவான் இதை செய்ய உதவுகிறது என்று கூறுகிறார் டாக்டர் சாங்.
தெற்கு சீன கடல் மற்றும் கிழக்கு சீன கடலில் சீன விரிவாக்கத்தை பார்க்க முடிகிறது. இதன் விளைவாக ஜப்பானில் ராணுவ பட்ஜெட் இரட்டிப்பாவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.
இதனால், இந்த பிராந்தியங்களில் கூட்டணிகள் மாறி வருகின்றன. அது வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா இடையிலான உச்சிமாநாடாக இருக்கலாம் அல்லது வளர்ந்து வரும் Quad(ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா) மற்றும் AUKUS(பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா) ஆகியவற்றின் முக்கியத்துவமாக இருக்கலாம். இதுதான் அடுத்த தலைமுறைக்கான அணுசக்தி திறன்மிக்க நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்குவதற்கான முயற்சியாக இருக்கும்.
.
இந்த பிராந்தியத்தில் உள்ள தற்போதைய நிலையை சீன மாற்ற முயற்சிப்பதாக கூறுகிறார் டாக்டர் சாங். இதன் பொருள் தைவானின் பாதுகாப்பு தெற்கு சீன கடல் மற்றும் கிழக்கு சீன கடல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. எனவே, நாங்கள் தனிமைப்படுத்தப்படவில்லை என்று கூறுகிறார் அவர்.
தற்போது இன்னும் எவ்வளவு தூரம் வரை அமெரிக்கா தைவானுக்கு உதவும் என்ற அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நீண்டகாலமாக சீனாவை கண்காணித்து வரும் நிபுணர்களின் கூற்றுப்படி, தைவானுக்கு அமெரிக்கா அளிக்கும் எந்த விதமான ஆதரவும் சீனாவை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக அதை தூண்டியே விடும் என்கின்றனர்.
ஆனால், தைவான் தன்னை தானே பாதுகாத்து கொள்ளும் என்று நம்பமுடியாது என்பதும் அமெரிக்காவிற்கு தெரியும்.
இது போன்ற சூழ்நிலையில், சீனாவை நீண்டநாட்களாக கண்காணித்து வரும் கூர்நோக்காளர் ஒருவர், “நிலைப்பாடு சார்ந்து குழப்பம் குறித்த அமைதியை கடைபிடிக்கும் அதே வேளையில் தைவானுக்கும் ஆயுதம் வழங்க வேண்டும்” என்று கூறுகிறார்.